உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/அன்னையும் கன்னியும்

விக்கிமூலம் இலிருந்து

அன்னையும் கன்னியும்

பிரான்சு தேசத்தில் இரண்டு சிறுகதைகள்.

ஒன்று:

கடவுள் முதல் முதல் மனிதனைப் படைத்து இந்த பூலோகத்திற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் மனிதன் இந்த பூமியில் காலூன்றி நிற்கவில்லை கடவுள் இருக்கும் அந்த சுவர்க்க பூமிக்கே திரும்பி விடுகிறான். கடவுள் பார்க்கிறார். அந்த மனிதனை இந்த நில உலகிலேயே நிறுத்திக் கொள்ள, இன்பப் பொருள்களான பூஞ்சோலை, வண்ண மலர், இனிய பழங்கள், இசைத்தும்பி, வெள்ளருவி, நீராழி இன்னும் என்ன வெல்லாமோ கொடுத்து திரும்பவும் அனுப்பி வைக்கிறார். இவை ஒன்றும் அவன் விரும்பும் இன்பத்தை அளித்து விடவில்லை. ஆதலால் திரும்பத் திரும்ப சுவர்க்கத்திற்கே ஒடி விடுகிறான். கடைசியாக கடவுள் பார்த்தார். ஒரு பெண்ணைப் படைத்து, அந்த மனிதனுடன் இந்தப் பெண்ணையும் சேர்த்து உலகத்திற்கு அனுப்பி வைக்கிறார். அவ்வளவுதான். உலகத்திற்கு பெண் துணை யோடு வந்த மனிதன் சுவர்க்கத்திற்கு திரும்பவே இல்லை. இது ஒரு கதை.

இரண்டாவது கதை:

கடவுளின் பரம விரோதியான சைத்தான் மனிதனைக் கெடுக்க எண்ணுகிறான், பூமிக்கடியில் தங்கத்தையும் வைரத்தையும் புதைத்து வைக்கிறான் மரங்களில் இருந்து மதுவை குடம் குடமாய்ப் பொழிய வைக்கிறான். கடலுக்கடியில் முத்தையும் பவளத்தையும் பரப்பி வைக்கிறான். அத்தனையும் உனக்கே என்று வாரி வாரிக் கொடுத்து மனிதனை மயக்கப் பார்க்கிறான். இந்தப் பொன்னாலும், பொருளாலும், மரங்களாலும், மதுவாலும் அவர்களைக் கெடுக்க முடியவே இல்லை. கடைசியில் ஒரு பெண்னைப் பிடித்து அவனிடம் அனுப்பி வைக்கிறான். அவ்வளவுதான் மனிதன் கெட்டே போய் விடுகிறான். இப்படி ஒரு கதை.

இரண்டு கதையும் உண்மையாய் நடந்த கதை அல்ல. இரண்டுமே கலைஞனது கற்பனையில் உதித்தவை தான் பெண் மனிதனை வாழ்விக்க வந்தவள். அவனுக்கு அளப்பரிய இன்பத்தை அளிக்கக் கூடியவள் என்ற ஒர் அடிப்படையான எண்ணத்திலே உருவானது தான் முதல் கதை. எவ்வளவோ ஒழுக்கமாக வாழும் மனிதனும், ஆம் பொருளினாலும், மதுவாலும் கெட்டொழிந்து போகாத மனிதனும் பெண்ணாலே கெட்டுப் போய் விடுகிறான் என்ற உண்மையை விளக்க எழுந்ததுதான் இரண்டாவது கதை.

இரண்டு கதைகளிலுமே உண்மை புதைந்து கிடக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. மனிதனை வாழ்விப்பவளும், தாழ்விப்பவளும் பெண்ணே தான் என்ற உண்மை, பிரான்ஸ் தேசத்திற்கு மட்டும் தெரிந்த உண்மையில்லை. உலகமே ஒப்புக் கொண்ட உண்மைதான்.

ஆனால் தமிழன் இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்திருக்கிறான். எப்படியோ பூமியிலே வந்து நிலைத்து விட்ட மனிதனும் பெண்ணும் தங்களைப் படைத்த தலைவனை அறிய முற்படுகிறார்கள். மனிதன் சொல்கிறான், இந்த இறைவன் ஆண்மகனாகத்தான் இருக்க வேண்டும் என்று. பெண் சொல்லுகிறாள், அந்தப் பரம் பொருள் பெண்ணாக, இறைவியாகத்தான் இருக்கிறாள் என்று. இவர்களுடைய விவாதம் தீர்ந்த பாடாக இல்லை.

கடைசியில் இருவருக்கும் பிறக்கிறான் ஒரு பிள்ளை. அவன் வளர்ந்து பெரியவன் ஆகிறான். அவனிடமே சொல்கிறார்கள், தங்கள் விவாதத்தை. அவனிடம் கேட்கிறார்கள் விடையை. அவன் சொல்கிறான். கடவுள் தாயாக இருக்கிறாள் என்று. மேலும் சொல்கிறான் இறையிடத்தில் ஆண்மையுமில்லை, பெண்மையும் இல்லை. தாய்மை தான் நிறைந்திருக்கிறது என்று; உண்மைதானே. இந்தப் பிள்ளையின் கண்கண்ட தெய்வம் தாய் தானே. அந்தத் தாய் சுட்டிக் காட்டிய பின் தானே தந்தையைத் தெரிந்து கொள்கிறான். அன்னையிடம் அன்பைப் பெறுகிறான். அப்பனிடம் அறிவைப் பெறுகிறான். அன்பைச் சொரிபவளாக அம்மையும் அறிவை வளர்ப்பவனாக அப்பனும் அமைகிறார்கள். அதனால்தான் கடவுளை மனிதன் முதன் முதலில் வழிபடத் தெரிந்தது தாய் உருவில் தான்.

பால் நினைந்து ஊட்டும் தாயின் அன்பைக் கசிந்து கசிந்து பாடிய மாணிக்க வாசகர் மேலும் இறைவன் அருளை நினைந்து,

தாயாய் முலையைத் தருவானே

தராது ஒழிந்தால், சவலையாய்

நாயேன் அழிந்து போவேனே.

என்று இரங்குகிறார். இன்னும் நாவுக்கரசராம் அப்பரும்

தாயவள் காண் உலகிற்குத்

தன் னொப்பில்லாதத்துவன் காண்

என்று பாடிப்பாடி மகிழ்கிறார். இப்படி தாயான தத்துவனுக்கே இறை வழிபாடு, மனிதன் உள்ளத்தில் முதன் முதல் எழுந்திருக்கிறது. பேசரிய உயிரை எல்லாம் பெற்று நோக்கி, பெரும் போகம் அவை அளித்து, ஆசு அகலும் அடியார் உளத்து அப்பனுடன் இருக்கும் அன்னையைக் கண்டு தொழாத கவிஞன் இல்லை. கசிந்து பாடாத கவிஞன் இல்லை.

இந்த உலகிலே பிறந்த மனிதன் முதலில் உண்ணத் தெரிந்திருக்கிறான். பின்னர் உடுக்கத் தெரிந்திருக்கிறான். பின்னர் இருக்க படுக்க இடம் தேடி இருக்கிறான். உண்டு உடுத்து உறங்கத் தெரிந்த மனிதனது வாழ்வு இவைகளில் மட்டும் நிறைவு பெறாது இருந்திருக்கிறது. இன்ப உணர்விற்கு ஏங்கி இருக்கிறான்.

அப்படி இன்பம் தேடி அலைந்த மனிதன் தான் ஓங்கி உயர்ந்த மலையைக் கண்டு அதனுடைய அழகை, காம்பீர்யத்தைக் கண்டு அதிசயித்து நின்றிருக்கிறான். அகன்று பரந்த கடலைக் கண்டு அந்தக் கடலில் விளையும் முத்தையும், பவளத்தையும் பார்த்து அந்தக் கடல் அலைகள் எழுப்பும் இன்னிசையைக் கேட்டு தன் வயம் இழந்திருக்கிறான். முன்னமேயே இறைவனைத் தாய்மை உருவிலே கண்டு தொழக் கற்ற இந்த மனிதனை, மலையையும் அலையையுமே உருவகப்படுத்தி மலை மகளாக, அலை மகளாக அந்த அன்னையை நினைக்கிறான்.

இந்த மலை மூலமாக, அலை மூலமாக ஆரம்பித்த அன்னை வழிபாடு, அவன் உள்ளத்தில் எழுந்த அழகு உணர்ச்சி காரணமாக அந்த அன்னையையே உலகிற்கு அன்போடு அறிவையும் நல்கும் நல்ல கலை மகளாகவும் உருவகப்படுத்தியிருக்கிறது. இப்படித் தான் மலை மகள் அலைமகள், கலைமகளாக, அன்னை அவன் எண்ணத்தில் தோன்றியிருக்கிறான். இப்படி மூன்று அன்னையரை உருவாக்கிய அவன் மூவரையும் ஒருவராகவே காணும் பேற்றுக்குத் தவம் கிடந்திருக்கிறான் இப்படி மூவரும் ஒர் உருவாய் இணைந்து நிற்கும் அன்னையே தேவர் மூவர்களுக்கும் முதற் பொருள். அவர்கள் செய்யும் முத்தொழிலுக்கும் அடிகோலியவளும் அவளே, அவனே பராசக்தி என்றெல்லாம் எண்ணியிருக்கிறான்.

இப்படி எண்ணியவன் உள்ளத்திலே

மூவர்க்கும் முதற் பொருளாய்
முத்தொழிற்கும் வித்தாகி
நாவிற்கும் மனத்திற்கும்
நாடறிய பேரறிவாய்
தேவர்க்கும் முனிவர்க்கும்
சித்தர்க்கும் நாகர்க்கும்
யாவர்க்கும் தாயாகும்
எழிற் பரையை வணங்குவாம்

என்ற பாடல் எழுந்திருக்கிறது. இந்தப் பராசக்தியாம் அன்னை தான், எண்ணற்ற திருப்பெயர்களோடு எழில் நிறைந்த எத்தனையோ திருவுருவங்கள் தாங்கி நாட்டில் உள்ள கோயில்களில் எல்லாம் எழுந்தருளியிருக்கிறாள். திருநெல்வேலியில் அவளை வடிவன்னை என்பர். மதுரையில் அங்கயற்கண்ணியென அவள் நிற்பாள்.

ஆனைக்காவில் அகிலாண்ட நாயகியாக நிற்பாள். தஞ்சையில் பெரிய நாயகியாகவும், குடந்தையில் மங்களாம்பிகையாகவும், திருக்கடவூரில் அபிராமியாகவும் நிற்கிறாள். இன்று காஞ்சியில் காமாட்சியாகவும் காசியில் விசாலாட்சியாகவும் இருப்பவளும் அவளே தான்.

இவர்களில் கலை உலகில் பிரசித்தி பெற்ற ஒரு சிலரை அறிமுகப்படுத்துவதே இக்கட்டுரையாளரின் நோக்கம்.

திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலியில் இருப்பவளே வடிவன்னை, அவள் தன் பெயருக்கு ஏற்ப சிறந்த வடிவுடையவளாகவே உருப் பெற்றிருக்கிறாள். கருவறையில் நிற்கும் அந்த வடிவன்னையை எட்ட இருந்து காண்பதாலும் அவள் வடிவு முழுவதையும் ஆடை அணியால் மறைத்துக் கொண்டிருப்பதாலும் அவளது அழகு முழுவதையும் கண்டு மகிழ்வது சாத்தியமில்லாது போய் விடுகிறது என்றாலும் கலைஞர்கள் நம்மைச் சும்மா விட்டு விடுவார்களா?

அவளையே அழகு உரு செப்பு சிலா வடிவிலும் நிறுத்தியிருக்கிறார்கள். கம்பீரமான தோற்றத்தோடு அவள் நிற்கும் ஒயில் மிக மிக அழகானது. அவளையே காண்கிறீர்கள் பக்கத்திலே. இரண்டே திருக்கரங்களோடு அமைக்கப்பட்டிருந்தாலும் அவளது வடிவில் தாய்மையையும் இறைமையையும் சேர்ந்தே படைத்து இருக்கிறான் கலைஞன். இவனைத் தரிசிக்க சென்ற கலைஞன் அவளிடமே ஒரு சிபாரிசு கேட்கிறான். பலமுறை நெல்வேலி நகரில் சந்நிதிக்குச் சென்று குறைகளையெல்லாம் பன்னிப் பன்னிச் சொல்லியும் கேளாது அந்த அப்பனிடம் சிபாரிசு செய்யச் சொல்கிறான். ஏதோ பணிந்து துணிந்து கூறுபவனாக இல்லை. கொஞ்சம் மிடுக்குடனேயே அவளுக்கே சவால் விட்டுக் கேட்கிறான். அத்தனை மிடுக்கு உரிமை உடையவன் தானே கவிஞன். அவன் கேட்கும் கேள்வி இதுதான்.

ஆய் முத்துப்பந்தரின் மெல்லணை மீது
உன் அருகிருந்து
நீமுத்தம் தா என்று அவர்
கொஞ்சும் வேளையில் நித்த நித்தம்
வேய் முத்தரொடு என் குறையை
எல்லாம் மெல்ல மெல்லச் சொன்னால் உன்}}

வாய் முத்தம் சிந்தி விடுமோ
நெல்வேலி வடி வன்னையே?

இப்படிக் கேள்வி கேட்கும் பக்தனை அன்னை உதாசீனம் செய்ய முடியுமா? அவன் வேண்டுகோளை நிறைவேற்ற அவன் சொல்லிகொடுத்த நேரத்தையும் காலத்தையுமே உபயோகப்படுத்தி காரியசித்தியும் பெற்றிருப்பாள். நல்லதொரு அன்னையையும் அவள் மூலம் பக்தன் அடையும் நன்மையையுமே நினைத்துக் கொண்டு மேலே நடக்கலாம்.

தான் பெற்ற பிள்ளைகளைப் பராமரிப்பதில் அன்னையின் முதற் கடமை அவன் பசியை ஆற்றுவது தானே, சின்னப் பிள்ளையாய் இருந்தால் முலை அருத்துவாள். ஒன்றிரண்டு வயது கழித்ததும் அன்னம் ஊட்டுவாள். பின்னர், அவன் வளர்ந்து பெரியவனாக ஆன காலத்தில் அவனுக்கு உணவு படைத்து அவன் உண்பதைக் கண்டு மகிழ்விாள்

இந்த தாய்மையை நினைத்த கலைஞன் அவளை அன்ன பூரணி என்றே அழைக்கிறான். அன்னபூரணியின் வடிவம், காசி விசுவ நாதர் ஆலயத்தை ஒட்டிய கோயில் ஒன்றில் இருக்கிறது. மூலவிக்கிரகம் அவ்வளவு அழகாக இல்லை. பொன்னால் செய்யப்பட்ட அன்ன பூரணி ஒருத்தியும் அங்கே உட்கார்ந்திருக்கிறாள். அவளும் தழையத் தழையச் சேலையை உடுத்திகொண்டு எழுந்து பரி மாறுவதற்கே மிக்க சிரமப்படுபவளாகத்தான் இருக்கிறாள்.

காஞ்சி காமாக்‌ஷி கோயிலில் அவள் சந்நிதிக்குப்பின்புறம் அன்ன பூரணி ஒரு சிறிய வடிவில் இருக்கிறாள். அவள் இருக்குமிடத்தில் இருட்டடித்து வைத்திருப்பதன் காரணமாக அவளது அழகையும் அன்பையும் நம்மால் அனுபவிக்க முடிகிறதில்லை. ஆனால் நான் உங்களை எல்லாம் அழகே உருவான அன்னபூரணி ஒருத்தி இருக்கும் இடத்துக்கே அழைத்துச் செல்ல விழைகின்றேன்.

அந்த அன்னபூரணி இருக்கும் இடம்தான் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில். அந்தக் கோயில் வாசலில் நுழைந்ததும் நம் கண்முன் வருவது ராஜகம்பீர மண்டபம். அந்த மண்டபத்தின் உள்பக்கத்தில் மேற்புறத்துச் சுவரில் ஒரு சிறிய மாடத்தில் கிழக்கு நோக்கியவளாய் நிற்கிறாள் அவள்.

நான்கு அடி உயரமே உள்ள நல்ல கருங்கல்லில் உருவாக்கியிருக்கிறார்கள். மக்கள் பசிப்பிணி ஆற்றும் ஆர்வம் அவள் முக விலாசத்தில் தெரிகிறது. அவள் உதடுகளில் அரும்பும் இளநகை நமது பசியையே மறக்கச் செய்கிறது. இடக்கையில் அமுத கலசம் ஏந்தி நிற்கும், இந்த அன்னபூரணி உலகையே புரக்கப் புறப்பட்டவள்தான் என்று தோன்றுகிறது. அவளைக் காணும் போது, அம்மா தாயே, நீ மூடி வைத்திருக்கும் அமுத கலசத்தை திறந்து விரைவிலே மக்கள் பசியும் பிணியும் இன்றி வசதியும் வளமும் பெற்று வாழ வகை செய்வாய் அம்மா' என்று பிரார்த்திக்கவே தோன்றுகிறது எனக்கு. கலை உலகில் இவளை சௌபாக்கிய சுந்தரி என்றும் அழைக்கிறார்கள். மக்கள் பசி அகற்றிவிட்டால் மற்ற சௌபாக்கியங்கள் எல்லாம் விரைவிலேயே வந்து விடாதா என்ன? உலக மக்களது பசியகற்றுவது இந்த அன்ன பூரணி என்றால், அந்தக் காத்தற் கடவுளாய மகா விஷ்ணுவின் வேலை பாதிக்கும் மேல் தீர்ந்து விடுகிறதே என்று கேட்கத் தோன்றும். வெறும் உண்டியும் உடையும் மட்டும் மனிதனது தேவை என்றில்லை. எத்தனை எத்தனையோ பொருள்களுக்கு அல்லவா ஆசைப்படுகிறான். அந்த ஆசையை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டியவளும் அவள் தானே.

அந்த நிலையில்தான் தன் அண்ணனான அந்தப் பரந்தாமனுக்கும் நல்ல பக்கத் துணையாக நிற்கிறாள். அவன் ஏந்திய சங்கையும் சக்கரத்தையுமே அவனிடமிருந்து பெற்று மக்களுக்கு எல்லாம் அபயம் அருளுபவளாய் நிற்கும் அந்த அன்னையையே நாராயணி என்கிறார்கள் கலைஞர்கள். இந்த நாராயணியை எல்லாக் கோயில்களிலும் காண முடியாது. அவளது வடிவில் சிறந்தது ஒன்று தஞ்சைக் கலைக் கூடத்தில் இருக்கிறது. ஏதோ சாந்த சொரூபியாக இருப்பவளே யானாலும் காத்தல் தொழிலுக்கேற்ப கருணை நிறைந்தவளாகவே காட்சி தருகிறாள்.

இப்படி அண்ணன் வேலையில் மட்டும் தான் இவள் பங்கு பெறுகிறாள் என்றில்லை. காதல் ஒருவனை கைப் பிடித்து அவள் காரியம் யாவினும் கை கொடுத்து நிற்கும் தமிழ்ப் பெண் குலத்தில் பிறந்தவள் ஆயிற்றே. ஆதலால் இறைவனுடைய காரியங்களுக்கும் சக்தி தருபவளும் அவளாகத்தானே இருக்க வேண்டும். அப்படி சக்தி அருளுபவளாக இருக்கும் அன்னையையே போக சக்தி என்று வடிக்கவும், நம் கலைஞர்கள் மறக்கவில்லை. சோழ நாட்டில் உள்ள சிவத்தலங்களில் எல்லாம் கருவறையிலே லிங்க உருவில் இருக்கும் இறைவன் பக்கலிலேயே அவனுக்கு எல்லா சக்திகளும் அருளுபவளாக போக சக்தியும் இருப்பாள்.

சில இடங்களில் நின்ற கோலத்திலும், சில இடங்களில் இருந்த கோலத்திலும் எல்லாம் தலை சிறந்த சக்தியாக இருப்பவள் தான் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள போக சக்தி. அவள் இருக்கின்ற ஒய்யாரம்தான் என்ன! ஒரு காலை மடக்கி, ஒரு காலைத் தொங்க விட்டு, கையை அபயகரமாக வைத்து நம்மை எல்லாம் தன் பக்கம் அழைத்து அருள் புரிபவளாக அல்லவா இருக்கிறாள். வயிற்றில் உள்ள மடிப்புகள் எல்லாம் அவள் எண்ணரிய பிள்ளைகளைப் பெற்றவள் என்றல்லவா கூறுகின்றன.

கலை உலகில் கம்பீரமாகக் கொலு வீற்றிருக்க வேண்டிய இவள் சிறிய வடிவிலே பெரு உடையார் கருவறையிலே ஒரு பக்கமாக ஒதுங்கியே உட்கார்ந்திருக்கிறாள். அங்கு சென்றால் அர்ச்சகரிடம் கேட்டு அவள் இருக்கும் இடத்தைத் தேடி தரிசிக்க மறந்து விடாதீர்கள்.

இப்படியே எத்தனை எத்தனை அன்னையரையோ நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். உலகெல்லாம் புரக்கின்ற இந்த அன்னையையே கன்னியாகவும் கண்டிருக்கிறார்கள் கலைஞர்கள். மனிதனுக்கு இம்மையில் வாழ்வு அளிக்க தாய்மை உருவில் தோன்றியவள், மறுமையிலும் அருள் புரிய கன்னி வடிவிலே தவக் கோலம் கொண்டு நிற்கிறாள்.

அவள் இறைவனோடு தொடர்பு கொள்ளும் உறவு உணர்விற் கலந்த உறவாக இருப்பதனாலேயே கன்னித் தன்மை அழியாமலே தாய்த் தன்மை பெறுகிறாள். அகிலாண்ட கோடி ஈன்ற அன்னை தான் என்றாலும் பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலாக இருக்கிறாள் என்கிறார் தாயுமானவர். தாயும் ஆனவனே அன்னையின் கன்னித் தன்மையைக் கூறிவிட்டார் என்றால் அதன் மேல் அப்பீல் ஏது. இந்தக் கன்னியாம் அன்னையைக் காண ஒரு நடையே நடக்கவேணும். நீலத்திரைக் கடல் ஒரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரியைக் காண வேண்டும். இவளை மணம் புரிய வந்த இறைவன் கூடக் கடைசியில் ஏமாந்தல்லவா திரும்பியிருக்கிறார்.

கையில் அக்க மாலை ஏந்தி நிற்கும் அவளது தவக்கோலம்தான் எத்தனை அழகு வாய்ந்தது. பெண்ணாய்ப் பிறந்து தாயாய் பேறு பெற்று வாழ்வது சிறந்தது தான் என்றாலும் கன்னியாகவே இருந்து உலகுயிர் அனைத்துக்கும் அருள் புரிவது என்பது எளிதான காரியமா என்ன?

அந்த அரிய காரியங்களை கன்னிக்குமரி செய்கிறாள் என்று கற்பனை பண்ணியிருக்கிறார்கள் கலைஞர்கள். உலகெல்லாம் காக்கும் ஒரு தனிக்கடவுளை அன்னையாகவும் கன்னியாகவும் கற்பனை பண்ணத் தெரிந்த கலைஞர்கள் நம்மவர் என்று அறிகிற போது தமிழனாகப் பிறந்த நாமும் பெருமிதம் அடையலாம் தானே.