ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/தெய்வத் திருமணம்

விக்கிமூலம் இலிருந்து

தெய்வத்திருமணம்

க்கள் பிறந்து வளர்ந்து பருவம் எய்தி, எண்ணற்கரிய அனுபவங்களைப் பெற்று, மூப்புற்று மறைகின்றனர் என்பதை எல்லோரும் அறிவார்கள். குழந்தைப் பருவத்தில், காண்பவர் எல்லோருக்கும் களிப்பை அருளினாலும் பூரணமான இன்பத்தைக் குழந்தையாக இருப்பவர்கள் பெறுகிறார்களா என்பது மனோதத்துவ நிபுணர்கள் கண்டறிய வேண்டியதொன்று.

வயோதிகர்கள் பருவத்தைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். தாங்கள் துன்பப்படுவதுடன் மற்றவர்களுக்கும் துன்பம் ஊட்டும் பருவம் அது. ஆதலால் மக்கள் வாழ்வில் இன்பப் பேறு அடைகின்ற பருவம் இரண்டிற்கும் இடையிட்ட பருவம்தான். கட்டினம் காளையும், கவின் நிறைந்த கன்னியும், ஒருவரை ஒருவர் அடுத்து காதலித்து மணம் புரிந்து அனுபவிக்கும் இன்ப வாழ்வினுக்கு இணையே கிடையாது. இருவரும் அக்காலத்து சேர்ந்து நடத்தும் வாழ்க்கை ‘மடநாகு உடனாகச் செல்லும் மழவிடை போல் செம்மாந்திருக்கும்' என்று கவிஞர் வர்ணிப்பர். இப்படி இணைந்து நடத்தும் வாழ்வு தான் மலர்ந்த வாழ்வாகும். மணம் வீசும் நாளாகும். அதனால் தான் ஆணையும் பெண்ணையும் இணைக்கும், அந்தச் சடங்கிற்கே மனம், திருமணம் என்றெல்லாம் பெயர் வைத்து விட்டார்கள் பெரியவர்கள்.

உருவமில்லாத கடவுளுக்கு உருவத்தைக் கற்பித்தான் கலைஞன். 'ஒரு நாமம், ஒர் உருவம், ஒன்றுமில்லாத இறைவனை ஆயிரம் திருநாமம் சொல்லி தெள்ளேணம் கொட்டினான் கவிஞன். வாழ்விலே தான் கண்ட அனுபவங்களை எல்லாம் இறைவனுக்கும் ஏற்றி, அவனும் அதே அனுபவங்களைப் பெற்றவன்தான் என்று கட்டுரைத்தான் மனிதன். புல்லாய், பூண்டாய், புழுவாய், பறவையாய், பல் மிருகமாய் மனிதனாய் வளருகின்ற உயிர்த் தோற்றத்தை அறிந்த அறிஞன், இறைவன் மீனாய், ஆமையாய், பன்றியாய், சிங்கமாய், வாமனனாய், மனிதனாய், ராஜ தந்திரியாய் வளர்கின்றான் என்று கற்பனை பண்ணுகிறான்.

அதனால் காத்தற் கடவுள் தச அவதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது. இவன் நற்சிந்தையில், அறுபத்திநாலு திருவிளையாடல்கள் இறைவன் செய்தான் என்றும், அதே போல அறுபத்து நாலு மூர்த்தங்களாக உருவாகிறான் இறைவன் என்றும் கூறி வந்ததற்குத் தான் எவ்வளவு கற்பனை வேண்டும். எண்ணங்கள் விரிவாக விரிவாக அறுபத்தி நாலு, அறுபத்தி நாலு ஆயிரமாக உயர்ந்து கொண்டே போனாலும் வியப்பு இல்லைதான்.

சும்மா உட்கார்ந்திருந்தால் சுகாசன மூர்த்தம் என்பான். ரிஷபத்தில் ஏறிச் சவாரி செய்தால், ரிஷபாருடன் என்பான். கட்டிய மனைவி பக்கத்தில் இருந்தால் உமா மகேஸ்வரன் என்பான். இருவருக்குமிடையே கந்தன் புகுந்தால் சோமாஸ்கந்தன் என்பான். கங்கையைத் தரித்தால் கங்காதரன். பிகூஷைப் பாத்திரம் ஏந்தி நடந்தால் பிக்ஷாடனன். இல்லை எழுந்தே கூத்தாடினால், ஆனந்த நடராஜன் என்பான். இப்படி எத்தனை எத்தனையோ மூர்த்தங்களில் இறைவனை கண்டு தொழத் தெரிந்து இருக்கிறான் மனிதன். மனிதனது சிந்தனையில் இப்படி வளர்ந்தோங்கிக் கொண்டே வந்த இறைவனுக்கும் இறை விக்குமே திருமணம் முடித்து வைக்கவும் துணிந்து இருக்கிறான். ஒரு வேளை இவர்கள் திருமணத்தை இவன் இருந்து நடத்தி வைக்கா விட்டால் அவர்கள் வாழ்க்கை மனம் பெறாது என்று எண்ணினானோ என்னவோ!

கற்பனை பிறந்தது கலைஞனுக்கு, கதை பிறந்தது கவிஞனுக்கு, கதை இது தான்.

கயிலையில் அம்மையும் அப்பனும் வீற்றிருக்கிறார்கள். அந்த அனாதி காலத்தில் இருந்தே, தக்ஷன் மகள் தாகூடிாயணி தந்தை தன் கணவனை மதியாத காரணத்தால், யாக குண்டலத்திலேயே புகுந்து மறைகிறாள். இதனால் அவமானம் உறுகிறாள். இதனால் தான் திரும்பவும் ஒரு பிறப்பு எடுத்து இறைவனை அடைய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறாள். பிராத்தனை நிறைவேறுகிறது, பர்வத ராஜன் புத்திரியாகப் பிறந்து, அவன் மனைவியால் வளர்க்கப்படுகிறாள். இறைவனையே தான் நாயகனாக அடைய தவம் புரிகிறாள், என்றெல்லாம் கதை வளருகிறது.

உமையைப் பிரிந்த உமாமகேஸ்வரன் மோனத்தில் இருக்கிறான், முனிவர்கள் மயக்கங்கள் எல்லாம் தீர. அதனால் எல்லாத் தொழிலுமே ஸ்தம்பித்து விடுகிறது. மோனத்தைக் கலைக்க மன்மதனையே ஏவி விடுகிறார்கள் மற்றத் தேவர்கள்; மோனம் கலைகிறது. ஆனால் மன்மதன் வெந்து பொடி சாம்பலாகி விடுகிறான். மோனம் கலைந்து இறைவன் பர்வதராஜன் புத்திரி பார்வதியை மணந்து கொள்கிறான்.

பர்வதராஜன் புத்திரியை பரமேஸ்வரனுடன் சேர்க்கும் முயற்சியில் வெற்றி கண்டு விடுகிறான் மன்மதன், இந்த முயற்சியில் அவன் அழிந்தே போனான் என்றாலும் கூட காமனை வெல்வது கடவுளுக்கே சாத்யமில்லை என்ற நிலையல்லவா ஏற்பட்டு விடுகிறது. அன்றுதான் பிறக்கிறது கவிதையும் காவியமும், இசையும் நடனமும் சித்திரமும் சிற்பமும்.

"மலையரையன் பொற்பாவை வாள்துதலாள் பெண் திருவை உலகறியத் தீ வேட்டவனுடைய பெருமையை உலகறியப் பாடுகிறார் மணிவாசகர். அப்படி உலகறியத் தீ வேளாது ஒழிந்தினனேல் கலை நவின்ற பொருள்க ளெல்லாம் கலங்கி விடும் உலகனைத்தும் என்றும் உரைத்து விட்டார்.

இனிச் சந்தேகம் இல்லையல்லவா, கலை பிறக்குது காதலிலே, ஒரு சிலை பிறக்குது அந்தக் கதையினிலே, தஞ்சையில் கலைக்கூடம் நிறுவிய பின் தஞ்சை ஜில்லாவின் பல கிராமங்களில் மண்ணுக்குள் மண்ணாய் மறைந்து கிடந்த சிலா உரு வங்கள் பல வெளி வர ஆரம்பித்து இருக்கின்றன. அப்படி வெளி வந்தவைகளில் சிறந்த சிற்பச் செல்வந்தான் திரு வெண்காட்டில் இருந்து கிடைத்த செப்பு விக்ரஹங்கள் எட்டு, அவைகளில் நான்கு ஒரு நல்ல அமைப்பு.

அந்த நாலு விக்ரஹங்கள், நான் மேலே சொன்ன கதையை நமக்கு அறிவிக்கின்றன. புதிதாக மணமுடித்த பெண்ணைக் கூட்டிக் கொண்டு விரைவாகவே கயிலை செல்லத் துடிக்கிறார் சிவபெருமான். எட்டியே நடை போடுகிறார். முன் எவ்வளவோ நாள் பழகியவள் தான் என்றாலும் இன்று அவள் புது மணப் பெண்தானே. அதனாலே நாணிக் கோணி நிற்கிறாள்.

இந்த நிலையைக் காண்கிறாள் கலைஞன். அவன் உள்ளத்தில் உருவாகிறது சிலை. வலது கை நீண்டு வளைந்து இறைவனின் வலக்கரத்தைப் பற்றி மகிழ, இடக்கரம் லாகவமாய் மேல் நோக்கி நானும் தலைக்குப்

ஆ.பெ.அ.நெ-6 பக்கபலமாக இருக்க அதற்கேற்ற நிலையில் காலும், உடலும் இடையும் கழுத்தும் துவள, ஒய்யாரமான ஒயிலுடன் நிற்கிறாள் பார்வதி. இத்தகைய அழகியைத் துணையாகப் பெற்ற இறைவன் நடையில் ஒரு மிடுக்கும் காண்பதில் அதிசயம் இல்லை தான். அரையில் கட்டிய அரைக்கச்சும், தோளில் அணிந்துள்ள வாகு வலயமும், மார்பினில் இலங்கும் யக்ஞோப வீதமும், அவர் அழகை அதிகப்படுத்துகின்றன என்றாலும் அவருடைய காம் பீர்யத்தைத் தலையில் அமைந்திருக்கும் கிரீடமே காட்டு கிறது.

மணக்கோலத்தில் இருக்கும் இந்த நாயகி நாயகன் நல்ல செல்வந்தர் என்று தெரிகிறது. இல்லாவிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிறந்த அணிகள் இவர்களுக்கு எங்கே கிடைக்கப் போகிறது.

தங்கையின் திருமணத்தில் தமையனுக்கும் ஒரு சிறந்த இடம் கிடைத்து விடுகிறது. அவனும் வந்து விடுகிறான். தன் மனைவி சீதேவியுடன். பார்வதிக்கு நல்ல திருமணத் தோழியாக அவள் அமைந்து விடுகிறாள். தன் இடக் கையால் மைத்துணியைத் தழுவும் நிலையில் இருந்தாலும் புது மணப்பெண் ஆயிற்றே, நேரே பார்த்தால் நாணுவளே என்று தன் முகத்தை ஒரு பக்க மாகத் திருப்பிக் கொள்கிறாள், இந்த சீதேவி. அவளுக்குமே நாணம் வந்து விடுகிறது இங்கே. தங்கைக்கு ஏற்ற மணவாளன் கிடைத்துவிட்டார் என்ற பெருமிதத்தில் கொஞ்சம் எட்டி நின்றே கடைக் கணிக்கிறார் விஷ்ணு, இப்படி உருவாகி இருக்கிறது நான்கு சிலைகள், பார்வதியும் பரமசிவனும் ஒரே வார்ப்பில் உருவானவை. சீதேவியின் பீடமும், மற்றைய சிலை உருவங்களின் பீடமும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்திருப்பதால், சிலைகளை எப்படி அமைத்துக் காண வேண்டும் என்பதில் சிரமமே இல்லை. இந்த நான்கு உருவங்களும் அளவில் சிறியவையே. எல்லாம் இரண்டு மூன்றடி உயரமே. ஆனால் அவை கலையுலகில் உயர்ந்திருக்கும் உயரத்திற்குக் கணக்கேயில்லைதான்.

இந்த நல்ல சிற்ப உருவங்கள் நாலும் இன்றிருப்பது தஞ்சைகலைக் கூடத்திலே, சென்று காண வசதி உடையவர்கள் சென்று கானட்டும். அதற்கு இயலாதவர்கள் படத்திலாவது கண்டு மகிழட்டும், கதையைப் படிக்கட்டும், கலையை உணரட்டும்.