ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/சிற்ப வடிவில் ஒரு நாடகம்

விக்கிமூலம் இலிருந்து

சிற்ப வடிவில் ஒரு நாடகம்

தாருகாவனம் என்று ஓர் இடம். அங்கே முனிவர் பலர் தவம் செய்கிறார்கள். கலைகளைக் கற்கிறார்கள், வேதங்கள் ஓதுகிறார்கள், யாகங்கள் செய்கிறார்கள். இதனால் எல்லாம் சிறந்த அறிவையும் பெறுதற்கரிய சித்திகளையும் பெறுகிறார்கள். அறிவோடு வளர்கிறது ஆணவம், தம்மை ஒப்பாரும் தமக்கு மிக்காரும் இல்லை என்ற கர்வமும் அதிகம் ஆகிறது. அதனால் இறைவனைப் பழிக்கிறார்கள்; உதாசீனம் செய்கிறார்கள். இவர்கள் கர்வத்தைக் குலைத்து ஆணவத்தை அடக்கி ஆட்கொள்ளப் புறப்படுகிறார் சிவபெருமான், உடன் புறப்படுகிறார் மகா விஷ்ணுவும்.

கங்காளன் உருவில் கையில் டமரு முகத்தைக் கொட்டி முழக்கிக் கொண்டு, தாருகாவனத்திற்கே வந்து விடுகிறார் சிவபெருமான். மோகனமான மோகினி உருவில் விஷ்ணுவும் பின் தொடர்கிறார். இந்த ஆணழகன் ஆட வல்லானைக் காண வருகிறார்கள் அங்குள்ள ரிஷி பத்தினிகள் எல்லாம். அவ்வளவுதான். அன்னம் இட அகப்பையோடு வந்த அரிவையர் எல்லாம் அழகைக் கண்டு மயங்கி நின்று நிறை அழிகின்றனர். மோகினியைத் தொடர்ந்த முனிவர்களது கதையும் அதேதான்.

அறிவையும், தவ வலிமையையும் இழந்து பின் தொடருகிறார்கள். இவர்கள் ஆணவம் எல்லாம் அழிகிறது, இவ்விருவர் வருகையால். இப்படி ஒரு கதை. கதை நல்ல நாடகம் நடிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது. உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை உருவாக்கி, அதன் மூலம், நாடகம் காண வருபவர்களின் உள்ளம் கவர்வதைத் தானே நல்ல நாடகம் என்கிறோம் நாம்.

ஆனால் இத்தகைய நாடகம் நடிப்பதற்கு, நல்லதொரு அரங்க மேடை வேண்டும். வர்ண விஸ்தாரம் நிறைந்த காட்சி ஜோடனைகள் வேண்டும்; சிறந்த நடிகர்கள் வேண்டும்; அவர்களுக்கு உயர்ந்த ஆடை அணிகள் வேண்டும்; பின்னணி வாத்திய கோஷ்டி வேண்டும்; முன்னாலே மின் சார விளக்குகள் வேண்டும். இத்தனையும் ஒன்றாய்க் கூடி நாடகம் உருவாக வேண்டும்.

இப்படி நடத்தப் பெறும் நாடகம் ஒரு நாள் நல்ல வாய்ப்பான நாடகமாக அமையும், இன்னொரு நாள் அழுது வடியும். நடிப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் தாமே. எப்பொழுதும் ஒரே நிலையில் அவர்கள் இருக்க இயலாதவர்கள் ஆயிற்றே. நாடகத்தின் வெற்றியும் தோல்வியும் நாளையும் கிழமையையும் பொறுத்ததாகி விடுகிறது.

ஆனால், அரங்கம் இல்லாமல், திரைச்சீலை இல்லாமல், காட்சி ஜோடனைகள் இல்லாமல், பின்னணி வாத்தியமில்லாமல். மின்னும் விளக்குகள் இல்லாமல் நாடகம், நடத்தத் தெரிந்தவர்கள் தமிழ் நாட்டுக் கலைஞர்கள். அந்தக் கலைஞர்கள் வரிசையில் முதலில் நிற்பவன் கவிச் சக்கரவர்த்தி கம்பன். இராம கதையை காவியமாக எழுத முனைந்தவன், இராம நாடகத்தையே அல்லவா நடத்துகிறான். அழகான காட்சிகளை உருவாக்கி, அதில் அற்புதமான பாத்திரங்களை நடமாட விட்டு, இதயத்தைத் தொடும் இன்னிசை எழுப்பி, சிறந்த நாடகத்தையே நடத்தி விடுகிறான். அடுத்தடுத்து வரும். அழகான காட்சிகள் ஒன்றா இரண்டா? ரஸானுபவங்களும் ஒன்பதா, பத்தா? எத்தனை எத்தனையோ விதத்தில்

எண்ணற்ற காட்சிகளைக் காட்டி நம்மையெல்லாம் ஒரே ஆனந்த அனுபவத்தை அல்லவா அடையச் செய்கிறான். இவன் செய்தது பிரமாதம் இல்லை. இவன் சொல்லையும் இசையையும் வைத்து இத்தகைய அற்புதத்தைச் செய்கிறான். சொல்லும் இசையும் இல்லாமல் கல்லையும் உளியையும் வைத்தே நாடகம் நடத்திக் காட்டுவோம் நாம் என்கிறான், ஒரு தமிழ் நாட்டுச் சிற்பி. தாருகாவனத்து ரிஷி பத்தினியர் கதையையே எடுத்துக் கொள்கிறான். அதைக் கல்லுருவில் நடத்திக் காட்டி வெற்றி பெறுகிறான்.

தாருகாவனத்துக்கு நடந்தே வருகிறான் சிவபெருமான் கங்காளன் உருவத்தில். நீண்டுயர்ந்த மகுடம், தலையை அலங்கரிக்கிறது குழையும், சுருள் தோடும் காதுகளில் மிளிர்கின்றது. தோளிலே வாகுவலயம்; மார்பிலே பொன்னாரம், காலிலே பாதுகை, ஒரு கையிலே மயிற் பீலி, மற்றொருகையில் துடி, இந்தத்துடியை முழக்கிக் கொண்டு, பக்கத்திலே வரும் மானுக்கும் புல்லருத்திக் கொண்டு அசைந்த நடை போட்டு, கன ஜோராக வருகிறான் கங்காளன். இவன் துடி ஒலிக்கத் துடி ஒலிக்க, துடிக்கிறது உயிர்கள் எல்லாம். பர்ன சாலையில் உள்ளே கிடந்த ரிஷி பத்தினிகளும் ஒவ்வொருவராக வெளியே வருகிறார்கள்.

வந்தவள் ஒருத்தி ஒசிந்த நோக்கோடு அழகனைக் காணுகிறாள். ஒருத்தி முகிழ்த்த முறுவலோடு தன்னை

மறக்கிறாள். கயமலர் கண்னினை உடைய ஒருத்தியோ, விழித்த கண் விழித்த படியே நின்று மெய் மறக்கிறாள். இப்படி வந்தவர்கள் ஏழுபேர். 'எல்லோரும் நிறை அழிகிறார்கள். நாணி நிற்கிறார்கள். ஏழு பேருடைய உணர்ச்சியும் ஒன்றே தான் என்றாலும் அதை ஏழு விதமாக அமைக்கிறான் சிற்பி. பொதுவாக நோக்கினால், சொல் நலம் கடந்த காமச் சுவையை ஓர் உருவம் ஆக்கி, இந்நலம் தெரியவல்லார்' எழுதியது என்ன நிற்கின்றார்கள் எழு வரும்.

இவர்களில் இருவரை மட்டும் ஒரு 'குளோஸ் அப்' காட்சியில் பார்க்கலாம். ஒருத்தி தன் மனம் திரும்பவும் திரும்பவும், அந்தக் கங்காளன் பக்கத்தே செல்வதை அறிந்து அந்த மனதை அடக்கி அவன் பக்கமே திரும்பும் முகத்தைத் திருப்ப முயல்கிறாள். இன்னொருத்தியோ, தன் நானத்தை எல்லாம் மறைக்க, இந்தப் பெண் பின்னாலேயே மறைந்து நிற்க விரைகிறாள். இருவரும் காணுவ தெல்லாம் கங்காளன் அழகைத்தான். இருவர் உள்ளமும் குதுகலிப்பதும் அதனால்தான்; இருவர் உடை நெகிழ்வதும், வளை கழல்வதும் அதனால் தான். கம்பன் சொன்னான், இராமன் அழகு கண்டு மிதிலைப் பெண்கள் நின்ற நிலையை 'தன்னையும் தாங்கலாதார் துகில் ஒன்றும் தாங்கி நின்றார்' என்று. அந்த நிலையில் தான், தம்மையே தாங்க இயலாத இவர்கள் நழுவும் துகிலைத் தாங்கித் தங்கள் மானம் காக்க விரைகிறார்கள். இத்தனையும் நடக்கிறது ஒரு நாடகமாக, இந்த நாடகத்தைச் சொல்லில் வடித்தார் ஒரு கவிஞர்.

அடியில் தொடுத்த பாதுகையும்
அமைந்த நடையும் இசைமிடறும்
வடிவில் சிறப்ப நடந்தருளி
மூழை ஏந்தி, மருங்கணைந்த
தொடியில் பொலி தோன் முனி மகளிர்
சுரமங்கையரை மயல் மூட்டி
படியிட்டு எழுதாப் பேரழகால்
பலிதேர் பகவன் திரு உருவம்

என்று இத்தனை நாடகத்தையும் கல்லில் வடித்தான் ஒரு சிற்பி. இந்தச் சிற்ப நாடகத்தைக் காண விரும்புபவர்கள் எல்லாம் நேரே தஞ்சாவூருக்கே செல்ல வேண்டும். அங்கு அரண்மனைக்குள் அமைந்திருக்கும் கலைக் கூடத்தைச் சென்று காண வேண்டும். கலைக் கூடத்தின் தென் பகுதியில் இந்த நாடகம் நடந்து கொண்டிருக்கும்; காட்சி ஜோடனைகள் மாறாது. எப்போதும் நிரந்தரமாகவேயிருக்கும்.

அந்த நாடகக் காட்சி, கலை நுணுக்கம் தெரிந்தவர்கள் காதுகளில் எல்லாம் துடி ஒலிக்கும் ஓசையே! கேட்கும். படியிட்டு எழுதாப் பேரழகு நிறைந்த அந்த கங்காளன் திரு உருவத்தையே நோக்கிக் கொண்டிருந்தால் ஒரு வேளை நாமும், அந்த முனிமகளிரைப் போலவே, கல்லாகவே அங்கு நின்று விடுவோமோ என்னவோ? அதைத் தடுக்கவா வது, அழகன் பேரில் வைத்த கண்ணை எடுத்து, அந்த அழகிகளின் அங்க அவயவங்களில் எல்லாம் காணும் அந்த அற்புதமான உணர்ச்சியை உணர்ந்து மகிழலாம். நிறைந்த மனத்தோடு வீடும் திரும்பலாம்.