உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/அறியாதார் அறியாதார்

விக்கிமூலம் இலிருந்து
அறியாதார் அறியாதார்

ன்று ஒருநாள் நான் கோயிலுக்குப் போயிருந் தேன். கோயில், கவிச்சக்கரவர்த்தி பிறந்த ஊராகிய தேரழுந்துாரில் உள்ள ஆமருவியப்பன் கோயில்தான். நல்ல மாலை நேரம், உத்சவகாலம் வேறே. ஆதலால் கோயிலுக்கு வருவார் தொகை அதிகமாகவே இருந்தது. ஒவ்வொருவரும் கையில் தேங்காய், பழம், புஷ்பம், கற்பூரம் எல்லாம் நிறைந்த தட்டுகளை ஏந்திச் சென்றனர்.

புஷ்பக் கடையில் நுழைந்து அழகான மாலைகளைக் கட்டி வாங்கிக் கொண்டு போனவர் பலர். அலங்காரப் பிரியர் அல்லவா பெருமாள். நானும் அவர்களுடன் சேர்ந்து தேங்காய், பழம், புஷ்பம் எல்லாம் வாங்கிக் கொண்டுதான் சென்றேன். என்னை அடுத்து ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

அவர் நல்ல பக்தி சிரத்தை உள்ளவராகக் காணப் பட்டார். ஆனால் வீசிய கையும், வெறுங்கையுமாய்த் தான் வந்தார் அவரைப் பார்த்துக் கொண்டேதான் நடந்தேன் கோயிலுக்குள். இருவரும் பெருமாள் சந்நிதிக்கு வந்து சேர்ந்தோம். என் கையிலிருந்த தட்டை அர்ச்சகர் வாங்கிக் கொண்டார். பெருமானின் திவ்ய ரூபத்தைக் கண்டவுடன், அவனது கம்பீரமான தோற்றத்தைப் பார்த்தவுடன் நாராயணா நாராயணா என்று கைகூப்பித் தொழுதேன் நான். என்பக்கத்தில் வந்து நின்ற அந்த நண்பரோ கல்லுளி மங்கன் மாதிரி நின்று கொண்டிருந் தார். பெருமானைத் தொழுவதற்குக் கூட அவர் கை எழக் காணோம்.

என்னாலோ இதைத் தாங்க முடியவில்லை. என்ன ஸ்வாமி! நீர் கோயிலை அறிவிர், ஆனால் கும்பிட அறியீரோ! என்றேன். ஆம் ஸ்வாமி! எனக்கு கும்பிடத் தெரியவில்லையே என்றார். என்ன திமிர் இவருக்கு என்று நினைத்து ஆமா நீர் என்ன பெரிய மேதாவி என்ற எண்ணமா? கோயிலுக்கு வந்தால் ஏதாவது ஆராதனைப் பொருள் கொண்டு வரவேண்டும் என்று கூடவா தெரியாது? என்று கேட்டேன் நான் ஆத்திரம் தீர. தெரியும் ஸ்வாமி! தெரியும், ஆராதனைக்குக் கொண்டு வந்திருக் கிறேன் ஸ்வாமி ஒரு பொருள், ஆம் கொண்டு வந்திருக் கிறேன் என்று சொல்லி கொண்டே பாட ஆரம்பித்து விட்டார்.

நாராயணாய
நம என்னும் நன்னெஞ்சர்
பாராளும் பாதம்
பணிந் தேத்து மாறு அறியேன்
காராளும் மேனிக்
கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என்
அறியாமை ஒன்றுமே

என்று பாடிக் கொண்டே நின்றார். என்ன அற்புதமான காணிக்கை! தன்னுடைய அறியாமையையே ஆராதனைப் பொருளாக அர்ப்பணிப்பது சிறந்ததுதான்?

இப்படித்தான் அறியாமையை அறிவிக்கிறாரே, இவர் தானே அறிவுடையார். நாமெல்லாம் நமது அறியாமையை உணர்கின்றோமில்லையே. எல்லாம் தெரிந்தவர்களாக அல்லவா நினைக்கிறோம், நடிக்கிறோம். இருவருக் கும் எவ்வளவு தூரம் என்று எண்ணிக் கொண்டே திரும்பினேன் அன்று வீட்டிற்கு.

இப்படிச் சிந்தித்துக் கொண்டே வந்த நான் வீடு சேர்ந்ததும். கம்பனது ராமாயணத்தை எடுத்து ஒரு புரட்டு புரட்டினேன். அங்கு ஒரு பாட்டு என் கண்ணில் பட்டது.


பணிரங்கப் பெரும் பாயல்
பரஞ்சுடரை யாம் காண
அணி அரங்கம் தந்தானை
அறியாதார் அறியாதார்

ஜனகனிடம் ராமனது குல முறை கிளத்துவதற்கு முன், விஸ்வாமித்திரர் போடும் பீடிகை இது. உண்மைதான் பக்தர்களுடைய அறியாமைதான் எப்படி எப்படி யெல்லாம் வெளிப்படுகிறது. இந்த அறியாமையைத் துடைக்க கம்பன் எப்படி உதவுகிறான்.

அப்படி உதவுகிறபொழுதெல்லாம், தான் எவ்வளவு அறியாமை உடையவன் என்று பணிவாய்த் தெரிவித்துக் கொள்கிறான். அப்படித் தெரிவித்துக் கொள்வதில் தான் எவ்வளவு அழகு. நான் அறியேன், நான் அறியேன் என்று சொல்லும் போது, இறைவனே நேரில் நம் முன் வந்து, இவனை நம்பாதீர்கள் இவன் அறியேன், அறியேன் என்று சொல்லுவதெல்லாம் பொய். இவனே எல்லாம் அறிந்தவன், என்றல்லவா கூறத் துவங்கிவிடு கிறான். இவன், உண்மைத் தத்துவங்களை அறியாதவன் என்று சொல்ல முனைகிறார்களே, அவர்களே அறிவிலிகள்.

எல்லாம் வல்ல இறைவனை விராதன் துதிக்கிறான். விராதன் துதிப்பதாகக் கம்பன் துதிக்கிறான்.

வேதங்கள் அறைகின்ற
உலகெங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னில்
படிவங்கள் எப்படியோ

என்று பாடுகிறான். மேலும்

'ஒதங்கொள் கடலன்றி
       ஒன்றினொடு ஒன்றுஒவ்வா
பூதங்கள் தொறும் உறைந்தால்
       அவை உன்னைப் பொறுக்குமோ'.

என்றும் ஐயுறுகிறான். ஆம் பெரிய கேள்விக் குறி ஒன்றேயே போடுகிறான். இதற்கு விடையே அறியாத வன் போலக் கையையும் விரிக்கிறான். மறுபடியும் ஆரம்பிக்கிறான்.

தாய் தன்னை அறியாத
     கன்றில்லை; தன் கன்றை
ஆயும் அறியும்;
      உலகின் தாயாகி ஐய!
நீ அறிதி எப்பொருளும்
      அவை உன்னை நிலை அறியா
மாயை இது என் கொல்லோ

என்று மீண்டும் தன் அறியாமையை வெளிப்படுத்துவதன் முலம் அவனுடைய அறிவுடைமையையே அறிவிக்கிறான். இப்படி யெல்லாம் பெரிய பெரிய உண்மைகளை எல்லாம் கேள்விக் குறிபோட்டே விளக்க முயல்வது கம்பனது தனி உரிமை அல்லதான். இறைவனை நினைந்து நினைந்து, உருகி, உருகிப்பாடும் அப்பர் பெருமானும்,

நின்னாவார் பிறர் இன்றி
     நீயே ஆனாய்
நினைப்பவர்கள் மனத்துக் கோர்
     வித்தும் ஆனாய்
மன்னானாய், மன்னவர்க் கோர்
     அமுதம் ஆளாய்

மறை நான்கும் ஆனாய்
       ஆறங்கம் ஆனாய்
பொன்னானாய் மணியானாய்
       போகம் ஆனாய்

என்று எவ்வளவோ திட்ட வட்டமாகத்தான் இறைவனைச் சுட்டிக் காட்ட முற்படுகிறார். என்றாலும் இறைவன் தன்மையை நினைந்த உடனே அது என்ன அவ்வளவு எளிதாகச் சொல்லிவிடக்கூடிய ஒன்றா என்று மயங்குகிறார்.

பூமிமேல் புகழத்தக்க
       பொருளே உன்னை
என்னானாய் என்னானாய்
       என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி
       ஏத்து கேனே

என்றுதான் அவரால் முடிக்க முடிகிறது. என்னானாய் என்னானாய் என்று சொல்வதில்தான் எத்தனை அழகு. எவ்வளவு பெரிய உண்மை அடங்கிக்கிடக்கிறது. அறியேன், அறியேன் என்று இவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் அறியாமையையையா வெளிப்படுத்துகிறார்கள்? இல்லை. அந்த அறியாமைக்குள் அல்லவா அடங்கிக் கிடக்கிறது அவர்களது அறிவுடைமை. இதை அறியாதார் எல்லாம் அறியாதாரே!

கம்பன் போன்ற மகாகவி, அப்பர் போன்ற சிறந்த பக்தர்கள் பாடல்களை யெல்லாம் பாடப் பாட நாம் அடைகின்ற இன்பங்கள் எத்தனை எத்தனையோ. கம்பன் கவிதையை அறிதோறும் அறிதோறும் நம் அறியாமையையே அறிகிறோம். அவன் கவி நயமோ அன்று இருந்ததுபோல் இன்று இருப்பதில்லை. இன்னே இருப்பது போல் பின்னே இருப்பதில்லை. எப்படி எப்படி எல்லாமோ புதிய புதிய சுவையைத் தருகிறான். இதை யெல்லாம் அறியாதார் அறியாதார் தானே!

கம்பன் கவிதையில் உள்ளம் பறிகொடுக்க அறியா தார், அறியாதாரே. அவன் சொல்லும் பா நயத்தின் பண்பையெல்லாம் காவியத்தின் கட்டுக் கோப்பை யெல்லாம், அவன் சொல்லும் அரிய உண்மைகளை, பெரிய தத்துவங்களை யெல்லாம், அவன் கவிதை தரும் இனிமையை எல்லாம், எளிமையை யெல்லாம் அறியாதார், அறியாதாரே!