உள்ளடக்கத்துக்குச் செல்

அய்யன் திருவள்ளுவர்/இமை

விக்கிமூலம் இலிருந்து



இமை மூடா
இரவுகள் சில




வானமே...!

உனது வாயிலைத் திறந்து விட்டாய் அல்லவா? எங்கே உனது பரிவாரங்கள்?

மக்கள் சந்தைக்கு நடுவில், விலை போகக் கூடிய சரக்குகள் எத்தனையோ இருக்கும்போது, விலை போகின்ற அற்பத்தனங் களைப் பார்த்திருக்கின்றாயா?

சட்டத்தை மீறுகிறவன் - சமுதாயத்தில் பஞ்ச கல்யாணி குதிரை மீது சவாரி செய்கின்றான்.

அவனுக்குப் பின்னாலே வருகின்ற பரிவாரங்கள், இறைவன் படைத்த ஜீவன்களாக இருக்கும் என்று நீ நம்புகின்றாயா?

மூளை முளைத்த மிருகம் மனிதன்! அவன் கையில் வேதாந்தம்!

அவனுடைய வாழ்தொலிகள் முழுவதும், அற்பத்தனத்தின் செவிக்கே விருந்தாக அமைகின்றன.

உனது பரிவாரமும் - அப்படிப்பட்ட இனத்தைச் சேர்ந்ததா என்றால், நான் அதைப் பார்க்க விரும்பவில்லை.இருண்டு போன தனது வீட்டை ஒளி மயமாக்கி, கடன் வாங்கி எண்ணெய் யைக் கொளுத்துகின்ற ஓர் ஏழையைப் போல, அந்த வெள்ளி வெளியே தெரிகின்றது. இதயத்தில் இரக்கம் இருக்கின்றதா என்று தேடிப் பார்ப்பதற்காக, மனிதன் எத்தனை நூல்களைப் படிக்கின்றான் தெரியுமா?

புத்தகத்தைப் படித்து முடித்தவுடன், அவன் வித்வானாகி விடுகின்றான்! - புலவனாகி விடுகின்றான்!

எதற்காக இதழைத் திறந்தானோ, அது அவன் கையில் கிடைப்பதில்லை.

ஆசார விளக்கங்களை ஆற்றுகின்றான். ஆனந்த பூர்த்திக்கு வழி காட்டுகின்றான். ஆனால், இரக்கத்தை மட்டும் அவனால் இன்னும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த வெள்ளி மீன் கூட, எதையோ தேடுவதற்காகத் தன்னைக் கொளுத்திக் கொண்டது. ஆனால், இதுவரை அது கண்டுபிடித்தது ஒன்றுமில்லை.

இரக்கத்தைத் தேடிய அந்த மனிதனும் - எதையோ தேடுகின்ற இந்த வெள்ளி மீனும், இடம் மாறி இருக்கின்றனவே தவிர, தகுதியில் ஒன்றுதான்!

இப்படி, விண்மீன்களை நீ வாரி இறைக்கின்ற காரணத்தால், உனக்கு மிகத் தாராளமனது இருக்கின்றது என்று உலகம் நம்புமென நினைத்துக் கொள்கின்றாயா?

தீவுக்கு அந்தப்புறம் தீய வழியில் சம்பாதித்தவர்கள்-இப்படித் தான் வாரி இறைக்கின்றார்கள்.

நல்ல நாணயமாக இருந்தால் பரவாயில்லை. மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த செல்லாக் காசுகள் அவை!

வள்ளல் தன்மை, வெளிப்படையாக உன்னைப் போல் காட்டுவதில்லை.

அறவிலை பகர்வோர் பூமியல் இருக்கின்றார்கள் என்ற - யாரோ ஒருவர் பாடி விட்டார்.

அவர்கள் வானத்திலேயும் இருப்பது, அந்தக் கவிஞனுக்குத் தெரியவில்லை போலும் போ! அவன் சிந்தனைக்கு புலப்படாத வரையில் நீயும் நல்லதுதான்.

ஏ. வானே! அந்த நிலா உன்னை என்ன செய்தது?

இருண்டுபோன உனது முகத்தைத் தெளிவாக்கி வெளியே தெரிய வைத்ததே, அதற்குத்தான் இந்த பரிசா?

எந்த வாளால் அதை இப்படி வெட்டிச் சித்தரவதைச் செய்தாய்?

பாவம் பிறையாக அதைத் தொங்க வைத்தாய்? சிதைத்தவனுக்கும் சிரித்த முகத்தைக் காட்டுகின்ற ஓர் உத்தமனை, அந்தப் பிறையின் முகத்திலே காண்கின்றேன் !

"கடல் உன்னிலிருந்து வந்ததா? நீ, அதிலிருந்து வந்தாயா? திருப்பி என்னைக் கேட்டு விடாதே"

'நானி'லிருந்து 'என்' வந்ததா? 'என்'னிலிருந்து 'நான்' வந்ததா?

மண்ணோரம் இருக்கின்ற இந்தப் பெருங்கடல் வாயெல்லாம் சிரிப்பு!

விண்ணோரம் இருக்கின்ற உன் வாயெல்லாம் - தீப்பிழம்பு!

என்னுடைய கடந்த கால வாழ்க்கையில், மண்ணிலே இருப்பவன் நாள்தோறும் சிரித்துக் கொண்டே மற்றவனை அடிக்கின்றான் - அழிக்கின்றான்!

ஆனால், கடல் மட்டும் சிரித்துக் கொண்டே யாரையும் அழிப்பதில்லை! ஆதற்குக் கோபம் - ஊழிக்கொரு முறை தான் வரும்! அப்போது பொங்கும் பிரளயமாகும்!

நீருக்கு இருக்கின்ற இந்த நிலை - மனித நெஞ்சுக்கு ஏன் இல்லை? நீரின் ஒழுக்குக்குக் கரை: மனிதன் வாழ்க்கைக்கு வரம்பு? விண்ணுக்குள் இருக்கின்ற இறைவனை, ஒரு சிறிய வடிவத்தில் அடக்குகின்றான் மனிதன்!

சிறிய மனித உருவத்தில் இருக்கின்ற இறைவனை, ஏன் வரிவாக்க முடியவில்லை?

வானே !
வையத்தின் குடையே !
நீ, மண்ணைப் போர்த்துகின்றாய்!
மண், என்னைப் போர்த்துகின்றது!
நான், யாரைப் போர்த்துகின்றேன்!
இந்த கேள்விகளுக்கு தத்துவஞானிகள் விடையளிக்க வேண்டும்.
பொழுது விடிந்துவிட்டது.

இரண்டாம் இரவு


நிலவே!
விண் மண்ணைப் போர்த்துகின்றது !
மண் என்னைப் போர்த்துகின்றது!
நான் யாரைப் போர்த்துகின்றேன்?
நேற்று இந்தக் கேள்வியை வானத்துக்கு விடுத்தேன்!
வான் வளைந்து படுத்துக் கொண்டு தண்டால் எடுக்கின்றது!
இன்று, நீ பதில் கூற வேண்டும் - நிலாவே?
உனது முகம் இன்று வளர்ந்திருக்கின்றது.
முகம் வளருமா?
சிலருக்கு முகம் தேயும்போது, உனக்கு ஏன் வளரக் கூடாது?
அல்லது, திருக்குறளார் எழுதிய பல முகங்களா?

அது பெரிய இடத்து விஷயம்! அய்யன் திருவள்ளுவனிடத்திலே ஞானம் தெரிந்தவர்கள்தான் முகத்தை வகைபடுத்த முடியும்!

ஆனால், நான் உன்னிடத்திலேயே கேள்வியைக் கேட்கின்றேன்.
நேற்று ஏன் குறைந்தாய்?
இன்று ஏன் வளர்கின்றாய்?
நேற்று குறைந்தது
இன்று வளருமானால்,
நேற்று இறந்தது - இன்று
வளர்ந்திருக்க வேண்டுமே !
நேற்று இறந்த மனிதன் - புழுக்களால் குறைந்து போகின்றான்.
புழுக்கத்தால் உருகிப் போகின்றான்!

இதென்ன வேடிக்கை!
நேற்று வளர்கின்றது, - அது விண்ணில்!
நேற்று குறைகின்றது - அது மண்ணில்!
விண் - மண்ணைப் போர்த்துகின்றது!
அதுதான் கோப்பையைப் போல் கவிழ்ந்திருப்பது:
மண்-என்னைப் போர்த்துகின்றது.
அதுதான் கல்லறை!
எனக்குக் கீழே என்ன இருக்கின்றது?
இருக்கின்ற சக்தியெல்லாம் மேலே !
சக்கைகள் எல்லாம் கீழே !

நான் எதைப் போர்த்துகின்றேன், என்னையே போர்வை
யாக்கி, குளிராலே வாடும் ஒன்றுக்கு நான் பயன்பட்டால்!

அப்போது எது குளிரால் வாடுகின்றது?
பொழுது விடிந்துவிட்டது!

மூன்றாம் இரவு

காலம் பலருக்கும் பொதுவானது என்று கூறுகின்றார்கள்!

என்னை நாடி வந்த காலம், என்னை இறப்புக்கு ஆளாக்கிய பின்பு ஓர் அங்குலம் கூட - அது என்னை விட்டு நகருவதில்லை.

குழந்தையினிடம் சென்ற காலம், அது வளர வளர - கூடவே செல்கின்றது. இங்கே காலம் பொதுவா?

என்னிலே வந்த காலத்தின் பெயர், நேற்று! எனக்கு அது நேற்று குழந்தைக்கு அது, நிகழ் - எதிர் காலங்கள்!

எது என்னை அழித்ததோ, அது என்னோடேயே அழிகின்றது.

எது குழந்தையை வளர வைக்கின்றதோ, அது குழந்தை யோடவே வளர்கின்றது.

என்னை அழித்த காலம், பிறரை அழிக்க ஓடுவதில்லை! குழந்தையை வெளியில் கொண்டு வந்த காலம், என்னை மீண்டும் உயிரெழுப்பாது.

பத்து மணிக்கு ஒருவர் பிறக்கின்றார்! அதே நேரத்தில் ஒருவர் இறக்கின்றார்!

இறந்தவனோடு இருந்த காலம் செத்து விடுகின்றது! பிறந்தவனோடு இருந்த காலம் வளர்கின்றது:

பத்து மணி, பல இடத்தில் பிறந்தும் - இறந்தும் - வளர்ந்தும் - வளருகின்றது.

உயிரை அழித்த காலம், ஓட முடியாமல் தவிக்கின்ற நேரத்தில், சாவின் குளிர் - அதனையும் கவ்விக் கொள்கின்றது.

அந்தக் காலத்தைத்தான், நான் போர்த்திக் கொண்டிருக்கின்றேன்.

ஏனென்றால், என்னிடத்தில் அடைக்கலம் புகுந்த அந்தக் காலம் - தப்பித்து ஓடுமானால், நான் இறந்த தேதியே மக்களுக்குத் தெரியாது.

நான்போர்த்திக் கொண்டிருந்தேன் என்று கூறினேன்.

நான் இரண்டு காரியங்களைச் செய்கின்றேன் - நான் தாங்கவும் செய்கின்றேன்.

செத்துப்போன மரம் துலங்களைத் தாங்குவதுபோல, செத்துப் போன மனிதன் பூமிக்குள்ளிருந்து - பூமியைத் தாங்குகிறான்.

நிலம் யாரையும் சும்மா விடுவதில்லை.'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல' என்ற தத்துவத்தை விட்டு நான் சிறிது விலகியே செல்கின்றேன்.

பூமி, எல்லோரையும் தாங்குவதற்காகவே மட்டும் பிறக்கவில்லை.

இன்றைக்கு அது யார் யாரைத் தாங்குகின்றதோ, நாளை அதே மனிதர்கள் - தன்னைத் தாங்குவதற்காகவே அழைத்துக் கொள்கின்றது!

வெறும் ஏமாளித்தனத்தால், ஏமாந்து போவதற்காக, - இந்தப் பூமி இவ்வளவு அழகாகப் படைக்கப்படவில்லை.

நேற்று வரையில் பூமியைக் காலால் உதைத்துக் கொண்டு திமிரோடு பேசியவன் இன்றைய தினம் உள்ளே புகுந்து கொண்டு அதைத் தாங்கிக் கொண்டிருக்கின்றான்.

சுமக்கவேண்டிய கட்டத்தில் எதையும் சுமந்தே தீர வேண்டும்.

‘வாழ்நாள், தறியின் பாகைப் போல மிக வேகமாக ஓடுகின்றது. என்று பைபிள் கூறுகிறது.

தறியின் பாகாக அது ஓடுகின்ற காரணத்தால், துணி நெய்யப் பட்டிருக்க வேண்டும்.

யார் உடுத்துகிறார்கள் அந்தத் துணியை?

ஒரு மனிதனுடைய வாழ்க்கை.

அனுபவம் என்ற துணியை நெய்து விட்டு-ஓடி ஒளிகின்றது.

உடையற்ற மனிதனாக, மனிதன் புதை காட்டுக்குள் போவதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அப்படியென்றால், அவனது அனுபவத்துகில் எங்கே மடித்து வைக்கப்பட்டிருக்கின்றது?

அந்தக் கலிங்கத்தின் விலைதான் என்ன?
இப்படிப்பட்ட துணி மூட்டைகள் வெளியே இருக்கும் போது
மனிதன் நாகரிகமற்ற மிருகமாய் உடையின்றித் திரிகின்றானே - ஏன்?
இந்தக் கேள்விக்கு - கவிஞர்கள் கற்பனையில் பதில் கூறலாம்.
கதாசிரியர்கள், கதையின் வடிவத்தில் காட்டலாம்.
நிலவே! நீ என்ன சொல்கின்றாய்?
பொழுது விடிந்து விட்டது.

நான்காம் இரவு

விண்மீன்

ஒரு மனிதனுடைய வாழ்க்கை, அனுபவம் என்ற துணியை நெய்துவிட்டு ஓடி ஒளிகின்றது.

அவனுடைய அனுபவத்துகில், எங்கே மடித்து வைக்கப்பட்டு இருக்கின்றது?

இப்படிப்பட்ட துணி மூட்டைகள் வெளியே இருக்கும் போது, நாகரிகமற்ற மிருகமாய் மனிதன் திரிகின்றானே, ஏன்?

தாயின் இடுப்பை நழுவிக் கீழே விழுந்த சண்டித்தனம் பிடித்த குழந்தையைப் போல், ஒரு விண்மீன் வானை விட்டுப் பூமிக்கு இறங்கியது.

நெய்யற்ற விளக்கு கடருதறி அடங்குவது போல், விண்மீன் எரிந்து அடங்கிற்று.

எனக்கும் அந்த விண்மீனுக்கும், பேச்சு வார்த்தை, நடந்தது ஒரு நொடி என்றாலும், பேசியது அதிக நேரம். அதை அப்படியே எழுதுகின்றேன்.

அவசரக்காரின் ஒருவன் - ஆதாரமற்ற செய்தியைச் சொல்லும் போது, - அடித்துப் பேசுகின்றான்.

அவன் வார்த்தைகள், உண்மையால் உருவாக்கப்பட்டவை.

உள்ளத்திற்குப் படைக்கப்படும் படையலைப் போலிருந்தன.

ஆனால், உண்ட மறுநொடியே அது அஜீரணத்திற்கு அடிப்படையாக மாறுகின்றது.

வாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம், நீ வானத்திலிருந்து பூமிக்கு வரும்போது, எடுத்துக் கொள்ளப்பட்ட நேரமாகும்.

செயலாற்ற வேண்டிய எதையும் - சிந்தனையாளன் சிந்திக் கும் போது, அவனுடைய நாடி நரம்புகள் அத்தனையும் சூடேறிய பிறகு மூளை பக்குவப்படுகின்றது.

இந்தக் கருத்தை மெக்காலே போன்ற மேதைகள் கூறினார்கள்.

தீர்க்கமான முடிவுகள் வெளியே வருகின்ற நேரத்தில், அடக்க முடியாத நம்பிக்கை, வட திசையில் இருக்கின்ற துருவ நட்சத்திரத்தைப் போல இருக்கின்றது.

நான் இந்தத் தரைத் திட்டிலிருந்து உன்னைப் பார்க்கின்ற நேரத்தில் நீ விழுந்த நிலை, ஒரு பணக்காரன் ஏழைக்குப் போடுகின்ற பிச்சைக் காசைப் போல - நழுவிக் கீழே விழுந்தது தெரிந்தது.

ஏ, விண்மீனே, மனிதனுடைய அனுபவத் துளிகள், அவன் இறந்த பிறகு வெளியே மடித்து வைக்கப்படுகின்றது.

அதை, உயிரோடு இருக்கின்ற எந்த மனிதனும் உடுத்துவதில்லை.

உலகம் தோன்றியது முதல் இன்று வரையில் இதுபோன்ற அனுபவங்கள் வெளியே மூட்டை மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருக்கின்ற போது, மனிதன் தவறுகளைச் செய்து ஏன் எரி நட்சத்திரம் போல் அழிந்து விடுகின்றான்?

சுய சிந்தனை இருக்கின்ற மனிதன், மற்றவருடைய சிந்தனையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தினாலா?

விளங்காத ஆசைக்கு விடியும் வரை காத்திருந்த ஒருவன், கிடைக்காத காரணத்தால், கலங்கிப் போகின்றான்.

அந்தக் கலக்கத்தோடு காலத்தின் கணக்கை முடித்துக் கொள்கின்றான்.

இப்போது அவனுடைய அனுபவத் துணி வெளியே கிடக்கின்றது - அனாதையாக!

பின்னால் வருகின்ற ஒருவன், இது யாருடைய துணி என்று கூடப் பார்க்காமல், அதன் மீதே நடந்து செல்கிறான்.

புதிய அனுபவங்கள் அவனுக்குக் கிட்டுகின்றன. பழைய அனுபவங்கள் கீழே கிடக்கின்றன.

மாறி, மாறி,-மரணத்தின் ராட்டினத்தில் குந்தித்தலை சுற்றிக் கீழே சாய்கின்றான்.

எந்த அனுபவமாக இருந்தாலும் சரி, அது பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வரை - காதல் அனுபவமாகவே இருக்கும்.

இருபத்தைந்துக்கு மேல், நாற்பதுக்குள், அது பணம் சேர்க்கின்ற அனுபவமாகவே இருக்கும். நாற்பதுக்கு மேல் மனித மூளை சிந்திப்பதில்லை.

உலகத்திலே உள்ள எல்லா மனிதர்களுடைய வாழ்க்கை அனுபவமும் இந்தப் பட்டியலிலே வந்து விடும்!

காதல் அனுபவத்தின் கோணங்கள் மாறலாம்!

பணம் சேர்க்கின்ற முறைகள் மாறலாம்!

சிந்தனைகள் வளராததற்குக் காரணங்கள் இருக்கலாம்!

ஆனால், எந்த வகையிலும், எல்லா வகையிலும் - எந்த மனிதனுக்கும், வாழ்க்கை அனுபவம் மட்டும் கிடைத்து விடுகின்றது.

வானின் நீளத்தையும் -
கடலின் ஆழத்தையும் -
மலைகளின் நிலையையும் -
சூரிய சந்திரர்களுடைய
கதிர் வேகத்தையும், துருவி
நோக்குகின்ற விஞ்ஞானி -
தன் அனுபவத்தை மட்டும் அறியாதபோது -
அவன்அஞ்ஞானியாகின்றான்.

நிலத்தில் விதைத்த வித்து - மறு உருப் பெறும்போதுவிளைவுகள் தோன்றுவது போல, மனிதன் தனது அனுபவத்தைச் சோதனை செய்கின்ற போது, அவனது வாழ்க்கையில் புது அனுபவத்தைப் பெற்று - பொலிவு பெறுகின்றான்.

பொழுது விடிந்து விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அய்யன்_திருவள்ளுவர்/இமை&oldid=1511491" இலிருந்து மீள்விக்கப்பட்டது