உள்ளடக்கத்துக்குச் செல்

அன்பு வெள்ளம்/அன்பைப் பற்றிய

விக்கிமூலம் இலிருந்து

அன்பைப் பற்றிய சில உண்மைகள்

நீங்கள் ஆண்டுகள் ஆக ஆக முதுமை அட்ைவீர்கள் என்பது உண்மைதானே-ஆகவே - வயது முதிர்ந்து முதுமையில் தள்ளாடும் போது உங்களுக்குத் தேவையானவற்றில் முதலாவது அன்பு ஒன்றே! ஆகவே இப்போதிலிருந்தே அன்பினைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வயது கூடுதல் ஆவது போலவே அன்பைக் கூடுதலாகப் பெருக்கி வாருங்கள்: சேர்த்தும் வையுங்கள். உங்களுக்குத் தேவைப்படும் நேரம் வரும் அப்போது நீங்கள் உங்களுக்குள் சேர்த்துவைத்த அன்பினைத் தேவையான அளவுக்கு பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு உதவும் உண்மையல்லாத அனைத்தையும் அழித்து விடும் உண்மையான அன்பு; அன்பின் வெளிச்சத்தில் போலி நிற்காது. தாக்குப் பிடிக்காது. உங்கள் வாழ்க்கையினை அன்புதான் வலுப்படுத்திக் கொண்ட பின்பு உங்கள் நெஞ்சத்தில் இருக்கும் தன்னலத்தை அடியோடு அழித்துவிடும்.

தன்னைப் பேணிக் காத்திடுவது என்பது, தன்னலத்தின் முதற் சட்டம்.

மற்றவர்களைப் பேணிக் காத்திடுவது என்பது, அன்பின் முதற் சட்டம்.

கடவுள் தமது மைந்தரைத் தருமாறு ஒரு தேவையை உண்டு பண்ணியதே அன்புதான்.

இயேசுவைத் தருமாறு கடவுளை ஊக்குவித்ததும் விரைவு படுத்தியதும் அன்புதான். அதே அன்புதான்் தம்மையே நமக்குத் தந்திடத் தூண்டியதும் இயக்கியதும்!

ஏதுமற்ற ஏழையருக்கும் வலிமையற்ற எளியருக்கும் ஆற்றறில்லாத பேதையருக்கும் ஆதரவு தருமாறு, நம்மை முன்னோக்கிச் செலுத்தும் ஆற்றாலாக இருப்பதும் அன்பாகும்! அன்பின் சட்டப் படியே, வலிமையற்றவர்களின் பலக்குறைவினைப் போக்கவும் ஏழை எளியருக்கு உதவிடவும் தான் வலிமையுள்ளவரைப் படைத்திருப்பதன் நோக்கம்.

எல்லா வகையான இடும்பைக்கும், ஆம் துயர் நிலைகளுக்கும் தன்னலம்தான் காரணம்.

பெரும்பாலும் நாம் சிந்தும் கண்ணின் பிறப்பிடமும் தன்னலம் தான்!

ஒருவரைக் கவலையற்றவராக - எல்லார்க்கும் இசைவாய் இருக்கத் தக்கவராக - தோழமை மனம் உள்ளம் கொண்டவராக எல்லார்க்கும் உதவுகின்ற பாங்குடையவராகச் செய்வது அன்பு.

ஒவ்வொரு பிணிக்கும் கடவுள் தந்த மாமருந்தாக உள்ளது. இயேசு பெருமானின் அன்பினைப் போன்ற அன்புதான்.

ஒருவரை அறிவின் எல்லைக்குள்ளேயே வட்டத்துக்குள்ளேயே இருக்கும் ஒருவரை அதிலிருந்து வெளியே கொணர்ந்து, தெய்விகப் பேராட்சியின் எல்லைக்குள் கொண்டு சேர்ப்பதும் அன்பேதான்.

அன்பு செய்யப்படுவதற்காக மறுபடியும் படைக்கப் பெறாது, ஒருவர் புதிய முறை அன்பினைப் பெறுதல் அவ்வளவு எளிதில்லை.

நல்லது மாறிவிட்டதை அறியாத எளிய திறமுடைய மனிதன் ஒருவனின் நெஞ்சத்தில் அன்பு இறைத் தன்மை பெற்றுவிட்ட போது, அவனைத் தனிச்சிறப்பு வாய்ந்த அரிய மனிதனாக ஆக்கிடும் கடப்பாடுடையது இப் புதிய அன்பு! மனிதனின் அன்பு மிக்க அழகு வாய்ந்தது. மானிடப் பண்பின் இயற்கையானது அவ் அழகு! ஆனாலும் அம் மலரில் இருக்க வேண்டிய தேனுக்கு மாறாக, நஞ்சு இருப்பதாகத் தோன்றுகிறதே ஏன்? மானிடரின் உள்ளத்தில் வலியை உண்டாக்குகிறது. கணவன் மனைவியிடையே மன முறிவு ஏற்படுத்துகிறது. பலப்பல குடும்பங்கள் ஒற்றுமையின்றிப் பிளவு பட்டுப் போகின்றன. சீரழிந்த குடும்பங்கள் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் இத்தனையும் நமது நாகரிகத்தை இழிவுபடுத்துகிறது.

ஆனால் இயேசுவின் அன்பினைப் போன்ற அன்பு, எந்தக் குடும்பத்தையும் இரண்டுபடுத்தவில்லை! எந்த உயிரையும் சீரழியச் செய்யவில்லை. எந்தக் குழந்தையையும் குற்றம் இழைக்கச் செய்ததில்லை. இதனை நன்கு சிந்திக்கும் ஆண் பெண் இருபாலரையும் விழிப்புறச் செய்யும்.

எவர் ஒருவர் அன்புள்ளம் கொண்டாரோ அப்போதே அவர் பேருள்ளம் பரந்த மனம் படைத்தவராகிறார்; மனித நலநாட்டப் பண்புள்ளம் கொண்டவராகிறார். இன்னும் சற்று மேலாகச் சொல்லப்போனால், தெய்வ உள்ளமே கொண்டவராகிவிடுகிறார்: அவர்களுடைய கண்கள், ஏழைகளை ஏறிட்டுப் பார்க்கின்றன; அவருடைய செவிகளோ, தம்மைச் சுற்றி உடைந்த உள்ளங்களின் விம்மி அழுதலை, பெருமூச்சினை விட்டுக் கதறி அழும் மக்களின் மன நலத்தைக் கேட்கின்றன.

அன்புள்ளம் கொண்ட அக்கணமே, உள்ளபடியே நாம் மானுடத்தின் மேலான இடத்தைப் ஏற்றுவிடுகிறோம் என்றே சொல்லலாம்.

யோவான் 15:9இல் இயேசு சொல்கிறார்:-

"எந்தை என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்"

நீங்கள் ஒரு பெண்ணில் அல்லது ஆணில் அன்பு கொண்டு வாழ்ந்து வருதலைப் போன்று, அவருடைய அன்பில் வாழ்ந்து வருமாறு கேட்டுக் கொள்கிறார். இயேசு அவருடைய தந்தையின் அன்பில் வாழ்ந்துவருவது போன்று நாமும் தமது அன்பில் வாழ்ந்திட வேண்டுகிறார். நாம் அன்பினில் வாழ்ந்து வந்தால், அன்பின் கனியை நாம் பெறுவோம். அன்பின் கனி என்பது ஏதோ அன்பு என்பது மரம் போலவும் அதிலே பழுத்து நம் மடியில் வீழ்வது போலவும் யாரும் கருதி விடாதீர்கள். அன்புக்கனி, என்பது, பேச்சில் அன்பு, செயலில் அன்பு, நடத்தையில் அன்பு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டும். ஏனென்றால் நல்ல எண்ணம், நல்ல சொல், நல்ல செயல், நல்ல ஒழுக்கம் இவை அனைத்தையும் தருவது அன்பாகும்!

கறுவுதல், பொறாமை வெறுப்புணர்ச்சி, பழிவாங்குதல் போன்றவை எல்லாம் கடந்துவிட்டவை - நடந்து முடிந்து விட்டவை என்று அறியுங்கள்.