உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடரங்கு/நீங்க

விக்கிமூலம் இலிருந்து


“நீங்க தூங்கறச்சேதான்”

ன்னவோ பட்டணத்திலே காபி சாப்பிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு எல்லோரும் தினம் சாப்பிடுகிறார்கள். காபி என்றால் உசிரு ஸார் எனக்கு' என்கிறார்கள்.

'காபி இல்லாவிட்டால் என்னால் உயிர் வாழவே முடியாது ஸார்' என்கிறார்கள். இவர்கள் சாப்பிடுவதெல்லாம் காபிதான் என்கிற ஞாபகம் போலும் இவர்களுக்கு, பாவம்! பட்டணத் தார் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!

நல்ல காபி என்றால் என்ன? அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமானால்....

ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே என்பார் களாம். நான் இங்கே பேரை மட்டும் சொல்லப்போகிறேன்; ஊரைச் சொல்லப்போவதில்லை. இந்தக் காலத்தில் ஊரைச் சொல்லிவிட்டால் நல்ல காபி சாப்பிடலாமே என்று எல்லோ ருமே டிக்கெட் வாங்க எழும்பூருக்கு ஓடிவிடுவார்கள். அந்த ஊரில் ஏதோ விசேஷம்போல் இருக்கிறது என்று இரண்டு வாரம் அந்த ஊருக்கும் சுற்று வட்டப் பிராந்தியங்களுக்கும் டிக்கெட் கொடுப்பதை ரெயில்வேக்காரர்கள் நிறுத்திவிடுவார் கள்; ஆபத்துத்தான்.

ஊரைச் சொல்லமாட்டேன்; பெயரைமட்டும் சொல்லு கிறேன். ராமலிங்கையர் கடைக்குப் போனால் நல்ல காபிமட்டு மல்ல; சுவாரஸ்யமான பேச்சும் கதையும் அநுபவமும் கிடைக்கும்.

கொஞ்சம் பழக்கமானவரைத் தெருவிலே கண்டுவிட்டா ரானால் போதும். ராமலிங்கையர் அந்தப்புரத்துக்குக் குரல் கொடுப்பார். 'தேய்ச்ச டவரா டம்ளரிலே காபி 8 பலம், சர்க்கரை டிகாக்க்ஷன் ஜாஸ்தி! எனக்குக் காபி அப்படித்தான் வேண்டும்' என்பார். 'அப்படியே எனக்கும் ஒரு ரெண்டு பலம் காபி' என்பார். நம்மோடு கூடக் காபி சாப்பிட ஆயத்தம் செய்து கொள்வார். 'வேறு ஏதாவது சாப்பிடுகிறீர்களா?' என்று உபசாரம் செய்வார். புத்துருக்கு நெய்யில் செய்த அல்வா இருக்கு' என்பார்.

திடீரென்று "காலிப்பயலே!" என்பார் உரத்த குரலில். இது காபி சாப்பிடத் தன் கடையைத் தேடி வந்தவரை யல்ல என்று ராமலிங்கையர் கடைக்குப் போய்ப் பழகியவர்களுக்குத் தான் தெரியும். 'காலிப்பயலே! என்ன தூக்கம்? உட்கார்ந்த படி தூங்காதே என்று எத்தனை தரம் சொல்றது” என்று அதட்டுவார் பையனை.

அந்தப் பையன் அல்வாவோ வடையோ உங்கள் முன் கொண்டுவந்து வைத்துவிட்டுப் பெஞ்சியில் எதிரில் உட்கார்ந்து கொண்டு, "எங்கே ஸார், இவ்வளவு நாளாக உங்களைக் காணோம்?" என்று விசாரிப்பான். ஏதோ அவ்வளவு அக்கறையாகக் கேட்கிறானே என்று பதில் சொல்லத் தொடங்கி விடாதீர்கள். ஏனென்றால் பையன் அந்தக் கேள்வியைக் கேட்டு விட்டு உடனே அந்த க்ஷணத்திலேயே தூங்கிப்போய்விடுவான். நீங்கள் சொல்வதில் முதல் வார்த்தையே அவன் காதில் விழாது என்பது நிச்சயம்.

ராமலிங்கையர், 'காலிப்பயலே!' என்று முதல் தரம் சொல்லி இரண்டாந்தரமும் சொல்லி, 'டே பயலே?' என்று கூப்பாடு போடும் வரையில் உட்கார்ந்தபடியே நித்திரையில் ஆழ்ந்திருப் பான் அவன். ‘டே பயலே!' என்று அவர் கூப்பிட்டு அவன் விழித்துக்கொண்டவுடனே அவன் கைகள் பழக்க வேகத்தால் தாமாகவே தாடையில் சற்று ஓங்கியே போட்டுக்கொள் ளும். சப்தம் கேக்கல்லியே: ஓங்கி" என்பார் ராமலிங்கையர். இன்னும் சற்று ஓங்கியே போட்டுக்கொள்வான் பையன். அதற்குப் பிறகுதான் நீங்கள் கேட்டது என்னவோ அல்வாவோ தோசையோ காபியோ கொண்டுவரப் போவான். கொண்டுவந்து வைத்துவிட்டு உங்கள் எதிரிலேயே மீண்டும் உட்கார்ந்து தூங்கத் தொடங்கிவிடுவான்.

இந்தப் பையனைப்பற்றிப் பல அபூர்வமான கதைகள் சொல்வார் ராமலிங்கையர். நிஜமோ, பொய்யோ அந்த நிமிஷக் கற்பனையோ-நல்ல கதைகள். காபி சாப்பிடப் போகிறவர் காபி நன்றாக இருக்கிறது என்று ஒப்புக்கொண்டே தீர வேண்டும். ஆனால் அவர் சொல்கிற கதை உண்மைதான் என்று ஒப்புக் கொள்ள வேண்டியது அவசியம் இல்லையல்லவா? உங்கள் அவநம்பிக்கை முகத்திலே பிரதிபலித்துவிடும். அவ்வளவுதான்! தாம் சொன்னது உண்மை என்று நிரூபிக்கத் தொடங்கி விடுவார் ராமலிங்கையர். ‘டே பயலே’ என்பார். தாடையில் ஓங்கி இரண்டு கைகளாலும் போட்டுக்கொண்டே விழித்துக் கொள்வான் பையன்.

“நான் சொன்னதெல்லாம் நிஜந்தானேடா” என்பார் ராமலிங்கையர்.

“ஆமாம், மாமா” என்பான் பையன். அதற்கப்புறமும் நம்ப மாட்டேன் என்று நீங்கள் எப்படிச் சொல்லமுடியும் ?

ராமலிங்கையர் சொல்வார்: “இந்த டிராயரிலே பணம் நோட்டு நோட்டாகப் போட்டுப் பூட்டி விட்டுப் போவேன் ஸார், திரும்பி வந்து பார்க்கிறபோது நாலு ஐந்து குறையும். ‘என்னடா இது ? நான்தான் கணக்குத் தப்பா நினைத்தேனோ ?’ என்று எண்ணுவேன். இப்படி ஏழெட்டுத் தரம் நாள் தவறாமல் கணக்குந் தப்பாப் போனதும், நான் பையனைக் கவனிக்க ஆரம்பித்தேன். இதோ பாருங்கோ, உங்க எதிரிலே டிராயரிலே நாலைந்து நோட்டுப் போட்டுப் பூட்டுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே ஏழெட்டு ரூபாய் நோட்டுகளைப் போட்டு டிராயரைப் பூட்டிச் சாவியை இடுப்பிலே செருகிக் கொள்வார்.

காபி சாப்பிடப் போனவர்கள் எல்லோரும் என்ன செப்பிடு வித்தை இது என்று ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருப்பார்கள். 'டே பயலே!' என்று வழக்கத்தை விடச் சற்று உரக்கவே கூவுவார் ராமலிங்கையர். அவர் குரல் விழித்துக்கொண்டிருக்கும் உங்களையே தூக்கி வாரிப் போடும். பையன் விழித்துக்கொண்டு தாடையில் போட்டுக்கொள்வான்; அவர் உத்தரவு தரு முன் மறுபடியும் ஒருதரம் போட்டுக்கொள்வான்.

"இந்த டிராயரிலே" என்று இரண்டு வார்த்தைகள்தான் சொல்வார் ராமலிங்கையர்.

தந்திரங்கள் பழகிய நாய்க்குட்டி யசமானின் ஒரு வார்த்தையைக் கேட்டு எந்தத் தந்திரம் செய்து காட்ட வேண்டும் என்று புரிந்துகொண்டு செய்வதுபோலப் பையன் என்ன செய்யவேண்டுமென்று அநுமானித்துக்கொண்டு மேசையண்டை வருவான். பூட்டிய டிராயர் பூட்டியபடியே இருக்கும். மேசையில் திறந்திருக்கும் மறு பக்கத்து டிராயரை முன்னால் இழுத்துவிட்டு அடியில் கைவிட்டுப் பூட்டியிருக்கும் டிராயரில் போட்டிருந்த நோட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து மேசைமேல் வைப்பான் பையன்.

"இந்த வித்தை எல்லாம் உங்களுக்குத் தெரியுமா ஸார்? ஏதோ பி.ஏ.எம். ஏ. என்று படித்திருக்கிறீர்களே!" என்று கேட்பது போல உங்களைப் பார்ப்பார் ராமலிங்கையர்,

'யம காதகப் பயலாக இருக்கிறானே !' என்று முணுமுணுத்துக்கொண்டே நீங்கள் காபி சாப்பிட்டாகி விட்டதனால், 'பாக்கி' என்று ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுப்பீர்கள்.

“சில்லறை வாங்கியாடா!" என்று பையனை அந்தப்புரத்துக்குள் அனுப்பிவிட்டு ராமலிங்கையர், "உட்காருங்கோ ஸார், சில்லறை வரட்டும் ” என்பார்.

சில்லறை வருகிற வரைக்கும் சும்மா உட்கார்ந்திருப்பானேன் என்று தன் பையனின் பிரதாபங்களைச் சற்று விரிவாகவே சொல்ல ஆரம்பிப்பார்.

ஒருசமயம் நடந்ததைச் சொல்லுகிறேன்; புகையிலை வாங்கிண்டு வாடா என்று ஒரு நாள் பையனிடம் அரையணாக் கொடுத்தனுப்பினேன். பத்து நிமிஷம் கழித்து அரையணாவுக்குப் புகையிலையுடன் வந்தான் பையன்,அவன்கையில் கடிதாசு பிரிக்காத புதுச் சோப்புக்கட்டி ஒன்றும் இருந்தது. "ஏதுடா சோப்பு?” என்றேன். கடைக்காரன் தூங்கிக்கொண் டிருந்தான் மாமா, “நைசாக எடுத்துண்டு வந்து விட்டேன்” என்றான். “திருடலா மாடா பயலே ! இனிமே திருடினாயானால் முதுகுத் தோலை உரித்து விடுவேன் போ" என்று அதட்டினேன். நெருப்புப் பெட்டி வாங்க மறுநாளோ அதற்கு மறு நாளோ ஓரணா கொடுத்தனுப் பினேன். பையன் நெருப்புப் பெட்டியும் காலணாவும் என் கையில் கொடுத்தான், அவன் கையிலும் சீவாத புதுப் பென்சில் ஒன்று இருந்தது. “ஏதுடா பென்சில்” என்றேன். "கடைக்காரன் தூங்கிக்கொண்டிருந்தான் மாமா" என்று ஆரம்பித்தான். எனக்கு உண்மையிலேயே அன்று பிரமாதமாகக் கோபம் வந்து விட்டது. அந்தக் கோபத்திலே அவனை ஓர் அறை விட்டிருந்தால் அவன் சுருண்டு விழுந்திருப்பான், "போட்டுக்கோ தானாகவே கன்னத்திலே நாலுதரம். மறுபடியும் திருடினாயானால் கடைக்காரனிடமே சொல்லி விடுவேன்" என்றேன். நாலைந்து நாள் கழிந்து மறுபடியும் ஏதோ காலணா சமான் வாங்கப் போனவன் ஒரு புது ரப்பர் பந்தை — அந்த இரண்டரையணா ரப்பர் பந்து இல்லே-கொண்டு வந்தான். பழைய கதைதான்—கடைக்காரன் தூங்கினானாம் ; கடைக்காரனையே கூப்பிட்டுச் சொன்னால் பையனை அடித்து நொறுக்கி விடுவான். திருடியதற்காக அவனை அடிக்கிற வேலை எனக்கு மிச்சம் என்று எண்ணிக்கொண்டு பையனை உள்ளே அனுப்பிவிட்டுக் கடைக்காரனைக் கூப்பிட்டேன். அதோ நாலாவது கடையில் இருக்கிறானே அவன்தான். “என்ன ஐயா | வியாபாரம் செய்யற அழகு ரொம்ப ஜோராக இருக்கு. பட்டப்பகலிலே கொள்ளை போகிறது தெரியாமல் தூங்குகிறாயே“ என்றேன்! ”என்ன சாமி விளங்கல்லையே?” என்றான் கடைக்காரன்." கடையிலே தூங்கறப்போ என் கடைப்பையன் உங்கிட்டே இருந்து அன்றைக்கு ஒரு சோப்பு, ஒரு பென்சில், இன்றைக்கு ஒரு ரப்பர்ப் பந்து எல்லாம் கிளப்பிண்டு வந்திருக்கானே ஐயா; நன்றாயிருக்கு நீ வியாபாரம் செய்யற அழகு" என்றேன். தலையைச் சொறிந்தான் கடைக்காரன். "பந்து இரண்டரையணாக் காசு கொடுத்து வாங்கிட்டு வந்தாங்க! " என்றான். எனக்குத் திக்கென்றது. கடைக்காரன் மேலும் சொன்னான் ! "அன்னிக்கு ஸோப்பு நேற்றோ,முந்தா நாளோ ஒரு பென்சில் எல்லாம் காசு கொடுத்துத்தானே வாங்கிச்சு தம்பி. நேத்துக்கூட வாங்கிச்சு; காலையிலே ஓரணாக் கொடுத்துக் கலர் சாப்பிட்டுச்சு" என்றான் கடைக்காரன், “டே பயலே!” என்றேன் "உண்மையைச் சொன்னால் ஒழிய உயிர் போயிடும்‘’ என்றேன். பையனுக்கு என் குரலி லேயே தெரிஞ்சு போச்சு, "ஏதுடா உனக்கு இதெல்லாம் வாங்கக் காசு ?" என்று ஒரு தரம் முறைத்துப் பார்த்து அதட்டிக் கேட்டேன். " நீங்க தூங்கறச்சேதான் டிராயரிலிருந்து எடுத்தேன் மாமா " என்று உண்மையைச் சொல்லிவிட்டான்...

ராமலிங்கையர் கதையை முடிப்பதும் பையன் சில்லறை யுடன் வருவதும் சரியாக இருக்கும்.

"உங்களுக்கு நம்பிக்கை யில்லாவிட்டால் பையனையே கேளுங்களேன்“ என்பார் ராமலிங்கையர், ” ஏண்டா பயலே நான் சொன்னதெல்லாம் நிஜந்தானேடா?" என்பார்.

“நிஜந்தான் மாமா” என்பான் பையன்.

ஆனால் சில்லறையை எண்ணிப் பையில் போட்டுக் கொண்டு நீங்கள் கிளம்பும்போது பையன் பெஞ்சியில் உட்கார்ந்த படியே தூங்கிக்கொண் டிருப்பான். 'இந்தத் தூங்குமூஞ்சிப்பயல் உண்மையிலேயே ராமலிங்கையர் சொல்லுகிறபடி அவ்வளவு எமகாதகப் பயலாகவா இருப்பான்!' என்று உங்களுக்குச் சந்தேகம் வருவது சகஜந்தான்.

ஆனால் ராமலிங்கையர் கடைக் காபி உண்மையிலேயே நன்றாகத்தான் இருக்கும். அதை நான் சொல்லுகிறேன்; நீங்கள் பூரணமாக நம்பலாம்.


"https://ta.wikisource.org/w/index.php?title=ஆடரங்கு/நீங்க&oldid=1526967" இலிருந்து மீள்விக்கப்பட்டது