ஆடரங்கு/படித்த
படித்த பெண்
டெல்லியிலிருந்து சுந்தாப் பாட்டியினுடைய மூத்த பிள்ளையின் பெண் வயிற்றுப் பேத்தி வந்திருந்தாள். வரும்போதேபேத்திக்கும்பாட்டிக்கும்சம்வாதம்ஆரம்பமாகிவிட்டது.
பேத்தியின் பெயர் பத்மாஸனீ. வயசு இருபத்திரண்டாகிறது. கல்யாணம் இன்னும் ஆகவில்லை. மெடிகல் காலேஜீல் படித்துக்கொண் டிருக்கிறாள். இன்னும் இரண்டு மூன்று வருஷங்களில் 'டாக்டர்' என்று போர்டு போட்டு விடுவாள்.
கையில் அழகான சிறு பையும், உதட்டில் அவ்வளவு அழகில்லாத செயற்கைச் சிவப்பும், முகத்தில் பட்டை பட்டையாகப் பவுடரும், குதிகால் உயர்ந்த பூட்ஸுமாக'டாக்டாக்' கென்று நடந்து வந்தவளைச் சுந்தாப் பாட்டி, "வாடியம்மா! துரைசாணியம்மா, வா!" என்று வரவேற்றள்.
"இது நான் எதிர்பார்த்ததை விடப் பெரிய குக்கிராமமா யிருக்கிறதே ! " என்றாள் பத்மாஸனி.அவளுக்குநினைவுதெரிந்து இதுவரை சாத்தனூருக்கு வந்ததில்லை.
"டெல்லியிலே வளர்ந்தாலும் கூடத் துரைசாணியம்மா பிறந்த தெல்லாம் இந்தக் குக்கிராமத்திலேதான்" என்றாள் சுந்தாப் பாட்டி.
சுந்தாப் பாட்டி நடுக் கூடத்தில் போட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள். சுவரோரமாகப் போட்டிருந்த ஒரு நாற்காலியிலே உட்கார்ந்துகொண்டு பத்மாஸனி தன் பூட்ஸுகளைக் கழற்றினாள். கடைத் தெருவுக்குப் போய்விட்டுத் திரும்பிய நான், "வா பத்மா, வா!" என்று வந்தவளை வரவேற்றேன். பிறகு, "பாட்டியும் பேத்தியும் அதற்குள்ளேயே சிநேகமாகி விட்டாற்போல் இருக்கிறது" என்றேன் தமாஷாக.
பத்மாஸனி சிரித்தாள். "பாட்டியும் நானும் ஒண்ணுதான். அம்மாகூட அடிக்கடி சொல்லுவாளே!” என்றாள். கால் 82 பூட்ஸைக் கழற்றிவிட்டு, ஒரு பூட்ஸில் பட்டிருந்த அழுக்கைத் தன் கைக் குட்டையால் துடைத்தாள். " அப்படி என்னடியம்மா உங்கம்மா என்னைப்பற்றிச் சொல்லியிருக்கிறாள்?" என்று விசாரித்தாள் சுந்தாப் பாட்டி. தலைமயிர் பறக்காமல் இருப்பதற்காக அணிந்திருந்த கறுப்பு வலையை அவிழ்த்துக்கொண்டே பத்மாஸனி மீண்டும் சிரித் தாள்."பாட்டிக்கும் பேத்திக்கும் யார் என்ன சொன்ன போதிலும் கோபமே வராது என்று அம்மா சொல்லுவாள்" என்றாள். "அப்படிச் சொல்லுடி மருத்துவச்சியம்மா!" என்றாள் சுந்தாப் பாட்டி. "அம்மாகூடச் சொல்லுவாள்; "ஊரிலே யாருக்குப் பிரசவம் பார்க் என்றாலும் சுந்தாதான் போவாள். அதே மாதிரி என் பெண்ணும் டாக்டருக்குப் படிக்கிறேன் என்கிறது' என்பாள். நான்கூட உன்னைப் போல லேடி டாக்டர்தான், பாட்டி!” "கோபம் வராத இந்தக் குணசாலியைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறவன் மிகவும் புண்ணியவானாக இருக்க வேண்டும். அத்துடன் ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டக்காரனாகத் தான் இருக்க வேண்டும்." பத்மாஸனி கலகலவென்று சிறித்தாள். "சந்தேகம் என்ன, பாட்டி? ரொம்ப அதிர்ஷ்டக்காரனாகத்தான் இருக்க வேண்டும். லாட்டரியிலே லக்ஷம், இரண்டு லக்ஷம் என்றுயாருக் காவது எப்பொழுதாவது கிடைத்து விடும். ஆனால் அதைவிட அதிர்ஷ்டக்காரனாகத்தான் இருக்க வேண்டும், இந்தப் பத்மா ஸனி பாயைக் கல்யாணம் செய்துகொள்கிறவன். ஏனென்றால் நான் கல்யாணமே செய்துகொள்ளப் போவதில்லையே! ' "அது யாரடி அது, பத்மாஸனி பாய்! பாயாமே பாய்! தலைகாணி, மெத்தையில்லாமே !" என்று கேலி செய்தாள் சுந்தாப் பாட்டி. கோபமே வராத பத்மாஸனிக்குக் கூடக் கோபம் வந்து விடும்போல இருந்தது. ஒரு விநாடிதான் ; அதற்குள்ளாகவே சமாளித்துக்கொண்டு விட்டாள். ஆனால் அதைக் கவனிக்காமல் இருந்துவிடுவாளா சுந்தாப் பாட்டி ? “ கோபமே வராது என்று சொன்னாயே உனக்கு, அதுமாதிரிதானாக்கும் இதுவும் !” என்றாள். "பாரேன்!" “ அதுதான் பார்க்கப்போகிறேனே! இந்த மாதிரி கல்யாணமே பண்ணிக்கொள்ள மாட்டேன் என்று சொன்ன வர்கள் ரொம்பப் பேரை நான் பார்த்திருக்கிறேன் " என்றாள் சுந்தாப் பாட்டி. தன் கைப் பையிலிருந்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை எடுத்து அதில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டு, உதட்டுச் சிவப்பைக் கைக்குட்டையால் லேசாக அழித்து விட்டுக்கொண்டு, பத்மாஸனி சொன்னாள்: "இந்த வீட்டிலே காப்பி - கீப்பி உண்டானால் வரட்டுமே!" என் பெண், எட்டு வயசிருக்கும் அவளுக்கு. வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றவள் உள்ளே போனாள். இரண்டு டம்ளரை எடுத்து வந்தாள். "இதில் காப்பி, இதில் கீப்பி " என்று இரண்டு டம்ளரையும் பத்மாஸனியின் முன் வைத்தாள். சுந்தாப் பாட்டி சொன்னாள்: "இது குக்கிராமம்தானேடி யம்மா ; நீ பல் தேய்த்துவிட்டுத்தான் காப்பி சாப்பிடுவா யாக் கும் என்று நினைத்திருப்பார்கள். "பல் தேய்க்கிறதெல்லாம் குளிக்கும்பொழுதுதான்! "அப்படியா? பூட்ஸைத் துடைக்கிற கைக்குட்டை யாலேயே,உதட்டையும் துடைக்கிற நாகரிகத்தைச் சேர்ந்த தாக்கும் இதுவும் !" என்றாள் சுந்தாப் பாட்டி. தெருக் குழந்தைகளெல்லாம் என் வீட்டில் ஏதோ காரியம் இருக்கிற மாதிரி வந்து வந்து போய்க்கொண் டிருந்தன. 84 அவர்கள் நவயுக நாகரிகத்தை அதிகம் காணாதவர்கள் ; பாவம் ! மாலையில்தெருஸ்திரீகளெல்லோரும்டெல்லியிலிருந்துவங்திருந்த பத்மாஸனியைப் பார்க்க வந்துவிட்டுப் போவார்கள். உண்மையிலேயேசாத்தனூர்,குக்கிராமந்தான்என்றுஎண்ணியவனாக நான் சொன்னேன்: "இரண்டுமே கைநகத்தைக் கடிக்கிற நாகரிகத்தைச் சேர்ந்ததுதான் ! "
பத்மாஸனி தன் கை நகங்களைப் பார்த்துக்கொண்டாள். பளபளவென்று வர்ணம் தீட்டப்பட்டிருந்தன, அவள் நகங்கள்; ஆனால் கடிக்கப்பட்ட நகங்கள்தாம். நான் பின்னும் சொன்னேன், “பாட்டியும் பேத்தியும் இப்படி ஆரம்பத்திலேயே சண்டை போட்டுக்கொள்கிறீர்களே ?" " சண்டையா ராஜா, இதெல்லாம்?" என்றாள் சுந்தாப்பாட்டி. சண்டையில்லை மாமா, சண்டையில்லை. ஒருவரை ஒருவர்" அறிமுகம் செய்துகொள்ளுகிறோம்" என்றாள் பத்மாஸனி. பிறகு என்னைப் பார்த்து ஆங்கிலத்தில் சொன்னாள்: "இந்தப் பாட்டி ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரி என்று "எங்கம்மா சொல்லுவாள். நான் பேசுகிறதெல்லாங்கூட இந்தப் பாட்டி மாதிரியேதான் பேசுகிறேன் என்று சொல்லுவாள் " என்றாள். பத்மாஸனி இதை என்னிடம் சொன்னதில் தவறில்லை.. ஆனால் இதை ஆங்கிலத்தில் சொன்னதுதான் தவறு. சுந்தாப் பாட்டிக்குப் புரியக்கூடாது என்றால் ஆங்கிலமும் ஹிந்தியும் தவிரவேறுஎந்தப்பாஷையில்வேண்டுமானாலும்சொல்லியிருக்கவேண்டும். சுந்தாப்பாட்டி ஆங்கிலம் பேசமாட்டாள் ; ஆங்கில வார்த்தைகளைக் கூட அதிகம் உபயோகப்படுத்த மாட்டாள். ஆனால் யார் என்ன பேசினாலும் புரிந்துகொண்டு விடுவாள். மிடில் ஸ்கூல் ஹெட்மாஸ்டரின் மனைவியாக நாற்பது வருஷம் வாழ்க்கை நடத்தியவள் அல்லவா? அதிலும் வீட்டி லேயே நடந்த ஸ்கூல். தவிரவும் அந்தக் காலத்து மிடில் ஸ்கூல் என்றால்...... மிடில் ஸ்கூல் ஆங்கிலப் பரீக்ஷைத் தாள்களுக்கு' இந்தக் காலத்து பி. ஏ. மாணவன் கூட விடை எழுதத் திணறி விடுவானே !
நான் பத்மாஸனிக்கு எதுவும் பதில் சொல்லாமல், சுந்தாப் பாட்டியைப் பார்த்தேன். சுந்தாப் பாட்டி சொன்னாள்: தஸ் புஸ்னு நீ படித்திருக்கிற இங்கிலீஷிலே இரண்டு வார்த்தை பேசிவிட்டால், நான் பயந்து போய்விடுவேன் என்றுநினைத்தாயா? நீயும் கெட்டிக்காரிதான் - நானும் கெட்டிக்காரிதான்-உங்கம்மாவும் கெட்டிக்காரிதான். உனக்குப் பிறக்கப்போகிற பெண், பேத்தி, எல்லாருமே, உன்னைப் போலவும் என்னைப்போலவும் கெட்டிக்காரியாகத்தான் இருப்பார்கள் |" பத்மானி பதில் சொல்லவில்லை. "டில்லிக்குப் போனால் என்ன? அதற்கப்பால் சீமைக்குப் போனால்தான் என்ன? பிறந்து நாலு வருஷம் இந்தக் கால்களிலே படுத்துக்கொண்டு, எண்ணெய் தேய்க்கிற போதெல்லாம் 'வராட்டு வராட்டு' என்று முகம் சிவக்க அழுத ஜன்மந்தானேடி யம்மா இது!" என்றாள் சுந்தாப் பாட்டி, பத்மாஸனி இதற்குப் பதில் சொல்லவில்லை. சுந்தாப் பாட்டியுடன் பேசுவதென்பது அவளுக்கு ஒரு புதிய அநுபவமாக அமைந்துகொண் டிருந்தது. "இந்தக் கொள்ளுப் பேத்திக்குப் பெண் பிறந்தாலும், நீதானே பாட்டி எண்ணெய் தேய்த்துவிடப் போகிறாய் ? என்றேன் நான். "நானா? நான் அதுவரையிலும் இருப்பேன். அதற்கப்புறம் அந்தப் பேத்திக்குப் பேத்தி பிறக்கிற வரைக்குங்கூட இருப்பேன். ஆனால் டாக்டருக்குப் படித்து பெரிய மருத்துவச்சி யாகிவிட்ட துரைசாணியம்மா, தனக்குத்தானே பிரஸவம் பார்த்துக்கொண்டு விட்டாலும் பார்த்துக்கொண்டு விடுவாள் ! இந்தக் கர்நாடகத்தைக் கிட்ட, அண்டவிடுவாளோ, என்னவோ?" என்றாள் சுந்தாப் பாட்டி.
"குறைப்பட்டுக்கொள்ளாதே பாட்டி, உனக்காகவாவது நான் கல்யாணம் பண்ணிக்கொண்டு அடுத்த வருஷமே பிள்ளையைப் பெற்றுக்கொள்கிறேன்" என்றாள் பத்மாஸனி. இதைச் சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தாள்.
நானும் சொன்னேன் : "ஆமாம் பாட்டி, நீ குறைப்பட்டுக் கொள்ளாதே! பத்மாஸனி படித்த பெண்தான் என்றாலும், நம் வீட்டுப் பெண் இல்லையா? ஏதாவது கொஞ்சம் நல்ல குணங்களும் இருக்கும் என்றேன்.
"நல்ல குணங்கள் நாலு பழகிக்கொண்டு போகலாம் என்றுதானே, லீவுக்கு இரண்டு மாசம் பாட்டியிடம் தங்கிவிட்டுப் போக வந்திருக்கிறேன் என்றாள் பத்மாஸனி. “ஏன் பாட்டி! இந்தப் படித்த பெண்களெல்லாமே......!" என்று நான் ஆரம்பித்தேன். "நிறை குடம் தளும்பாதடி, தளும்பாது! நிறையாத குடந்தான் தளும்பும். எனக்குக்கூட, அந்தக் காலத்திலேயே ஒருத்தி, மாட்டுப் பெண்ணாக வந்து வாய்த்தாளே, அவளும் படித்த பெண்தான் ...” என்று ஆரம்பித்து நிறுத்தினாள் பாட்டி.
"கதையா பாட்டி? சொல்லு” என்று கேட்டவாறே பத்மாஸனியும் பாட்டியின் பக்கத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்து, கொண்டாள்.
"கதையில்லையடி அம்மா, கதையில்லை!" என்றாள் பாட்டி.
“சொல்லு, பாட்டி!" என்றேன்.
ஊஞ்சலை லேசாக ஆட்டிக்கொண்டே சுந்தாப்பாட்டி சொன்னாள்.
"எனக்கு ஸ்ரீனிவாசன், ஸ்ரீனிவாஸன் என்று உருப்படாத பிள்ளை ஒன்று இருந்தது. பெயர் மட்டும் லக்ஷ்மிகரமாக இருந்ததே தவிர அவனிடம் மூதேவிதான் குடியிருந்தாள். அப்பாவுக்கோ அம்மாவுக்கோ வீட்டிலிருந்த மற்றப் பெரியவர்களுக்கோ சிறிதும் அடங்காத பிள்ளை.
குழந்தையாக இருக்கும்போது முதலே வீட்டிலேயும் வெளியிலேயும் அவனுக்கு எப்போதும் ஓயாத ஒழியாத சண்டைதான். அவன் உடம்பில் காயமில்லாத நாள் கிடையாது. ஊர் வம்பு, ஊர்ச் சண்டை எல்லாவற்றையும் விலை கொடுத்தும் விலை கொடுக்காமலும் வாங்கி வந்து விடுவான். அவனை நம்ம வீட்டுப் பிள்ளை என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கும்.
கெட்டிக்காரன்தான். ஆனால் அவனுக்குப் படிப்பே வரவில்லை. பள்ளிக்கூடத்து வாத்தியார் வீட்டுப் பிள்ளைக்கே பாடமும் படிப்பும் வரவில்லையே என்று ஊரார் கேலிசெய்தார்கள்.
கல்யாணம் பண்ணி வைத்தாலாவது பையன் திருந்திவிட மாட்டானா என்று எனக்கும் உங்கள் கொள்ளுத் தாத்தாவுக்கும் ஆசை. அவனுக்குப் பத்து வயசு நடக்கும்போதே ஒரு நல்ல இடத்தில் பார்த்துக் கல்யாணம் செய்துவிட்டோம். பிரபலமான ஒரு பண்டிதர் வீட்டுப் பெண் - சாஸ்திர விற் பன்னர் வீட்டுப் பெண் - அலமேலு என்று பெயர். கல்யாணத்தின்போது அவளுக்கு ஏழு வயசு இருக்கும்.
கல்யாணமான பிறகுங்கூட ஸ்ரீனிவாஸன் அப்படி ஒன்றும் திருந்திவிடவில்லை. பாடம்,படிப்பு ஒன்றுமில்லாமல் தத்தாரி யாகத் திரிந்துகொண் டிருந்தான். துடுக்கும் குறையவில்லை அவனுக்கு; திமிரும் ஏறிக்கொண் டிருந்தது. ஊரிலே அவன் அடிபடாத நாளே கிடையாது. வாத்தியார் வீட்டுப் பிள்ளை என்று எத்தனை நாள்தான் எத்தனை பேர் சலுகை தருவார்கள் ? என்றைக்காவது உயிருக்கே ஆபத்து வந்துவிடப்போகிறதே என்று நான் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் இருந்தேன்.
வயசு ஆக ஆக அவனுடைய அக்கிரமங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. 'நம்மாலாகாது; மனைவி வந்த பிறகு திருந்துகிறானா, பார்க்கலாம்!" என்று அலமேலுவை வரவழைத்து வைத்துக்கொண்டேன். அப்போது அவளுக்கு வயசு பதின்மூன்று இருக்கும்.
பெண்டாட்டி வீட்டுக்கு வந்தபிறகுங்கூட ஸ்ரீனிவாஸன் திருந்தவில்லை. அப்படியேதான் இருந்தான். அலமேலு அழகி, அறிவுள்ளவள்தான். ரொம்பவும் அடக்கமானவள், அவன் நம் வீட்டுக்கு வந்து நாலைந்து வருஷங்களுக்குப் பிறகுதான் எனக்கே தெரியும் — அவள் தகப்பனார் பண்டிதர் அல்லவா? தமிழும் சம்ஸ்கிருதமும் முறையாகத்தன் பெண்ணுக்குச் சொல்லித் தந்திருந்தார். படித்ததிலே பெருமை உண்டு அந்தப் பெண்ணுக்கு; ஆனால் ஜம்பம் இல்லை. குணங்களிலும் அறிவிலும் நிறைந்திருந்தாள் அவள்.
என் மூத்த பிள்ளைக்கும் மூன்றாவது பின்ளைக்கும் சர்க்கார் இலாக்காக்களில் வேலையாயிருந்தது. அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்தார்கள். இருந்ததை வைத்துக்கொண்டு கிராமத்தோடு பழைய ஆளாகவே முப்பது வயசு இருந்தான் ஸ்ரீனிவாசன். ஊர்வம்பு, ஊர்ச் சண்டை, கோர்ட்டு விவகாரம்—இதுதான் அவனுக்கு ஆயுசுள்ள வரையில் வேலை. அவனுக்கு ஒரே ஒரு பிள்ளைதான் பிறந்தது. அந்தப் பிள்ளை பிறப்பதற்கு முன் என் கணவர் இறந்துவிட்டார். அலமேலுவின் தகப்பனாரும் இறந்துவிட்டார்.
என் வீட்டிலே லக்ஷணமாக அலமேலு பதினைந்து பதினாறு வருஷங்கள் இருந்தாள். பிறகு ஸ்ரீனிவாஸன் திடீரென்று ஏதோ ஜுரத்தில் அல்பாயுஸாகப் போய்விட்டான். மீளாத அந்தத் துக்கத்தில் விழுந்த பிறகுதான் அலமேலுவின் அரிய குணாதிசயங்கள் எனக்கே சரிவரத் தெரிய வந்தன. தன்னுடைய ஒரே பிள்ளையை வைத்துக்கொண்டு இதே அக்கிரகாரத்தில் அலமேலு நாலைந்து வருஷம் இருந்தாள். பிறகு அந்தப் பிள்ளை மேல் படிப்பு படித்தது. —நல்ல வேளை படிப்பில் அது அம்மாவைக் கொண்டிருந்தது; அப்பாவைக் கொண்டில்லை.
அந்த அலமேலுவைப் போலப் படித்த பெண்ணையும் நான் பார்த்ததில்லை ; அடக்கமான பெண்ணையும் நான் பார்த்ததில்லை.
****
கதையைச் சொல்லி முடித்ததும் சுந்தாப் பாட்டியின் கண்களிலே நீர் துளித்திருந்ததை நான் கவனித்தேன். எனக்குப் பெரியப்பா ஸ்ரீனிவாசன் கதை தெரியும். எதற்காக அதை இப்போது சுத்தாப்பாட்டி தன் கொள்ளுப் பேத்திக்குச் சொன்னாள் என்று எனக்குப் புரியவில்லை.
பத்மாஸனி கேட்டாள் : " அது சரி, அலமேலு படித்தவள்தான். ஆனால் அவள் படிப்பெல்லாம் பயனடையவில்லையே!"
"பல் துருத்திக்கொண் டிருக்கிற மாதிரி படிப்பும் துருத்திக் கொண்டிருந்தால்தான் பிரயோசனப்பட்டதாக அர்த்தமோ? என்று கேட்டாள் சுந்தாப்பாட்டி.
துருத்த வேண்டாம். ஆனால் மூடனைத் திருத்த முடியாத படிப்பு...?"
"உனக்கு ஒரு மூடன் புருஷனாக வரணும். அவனை நீ திருத்துகிறதை நான் பார்க்கணும்" என்றாள் சுந்தாப்பாட்டி.
அது சரி, பாட்டி ! இருந்தாலும் உன் கதை என்னவோ எனக்குத் திருப்தியாக இல்லை " என்றாள் பத்மாஸனி.
நான் என்ன?உன்னைப்போல் புஸ்தகம் படித்தவளா? கதை சொல்ல எனக்கென்ன தெரியும் ? நம் வீட்டுக் கதை ஒன்றைச் சொன்னேன் " என்றாள் சுந்தாப்பாட்டி. ஒரு நிமிஷம் கழித்து அவள் சொன்னாள்: "'இந்தக் காலமானால் விவாகரத்து, ஜீவனாம்சம் என்று அமர்க்களப்படும். அந்த நாளில் அடக்கமாக இருந்து குப்பை கொட்டி, மூடனான ஒரு கணவனுடன் வாழ்ந்து பிள்ளையைப் பெற்றெடுத்துப் படிக்க வைத்து..........
"சரி, இப்போது அந்த அலமேலுவும் அவளுடைய பிள்ளையும் எங்கே இருக்கிறார்கள்?" என்று கேட்டாள் பத்மாஸனி.
அலமேலுவின் பிள்ளைக்குப் பெயர் உங்கள் கொள்ளுத் தாத்தா பெயர்தான். சீமைக்கெல்லாம் போய்விட்டு வந்து இப்பொழுது ஒரு மெடிகல் கல்லூரியில் பிரபலப் பேராசிரியராக இருக்கிறான் " என்றாள் சுந்தாப் பாட்டி.
"யாரு? மெடிகல் கல்லூரியிலா? டாக்டர் சுப்ரமணியனா? ஆமாம், இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்னாடிகூடப் பத்திரிகைகளில் அமர்க்களப்பட்டதே! எனக்குக்கூட ஞாபகம் இருக்கிறது! என்றாள் நெற்றியை அழகாகச் சுளித்துக் கொண்டு பத்மாஸனி.
"நாளைக்கு அம்மாவும் பிள்ளையும் இங்கே லீவுக்குத் தங்குவதற்காக வருகிறார்கள் ' என்றாள் சுந்தாப் பாட்டி.
"ஏது? எனக்குக் கூடத் தெரியாதே" என்றேன் நான். விஷயம் புரிய ஆரம்பித்தது எனக்கு.
"ஏதேது, என் லீவு வீணாகப் போகாது என்றாள் பத்மாஸனி.
"வீணாகப் போகிறதாவது? லீவு கல்யாணத்திலேதான் முடியும்.சுந்தாப் பாட்டி மனசு வைத்தால் அதற்கப்புறம் அதிலேயிருந்து யாராவது தப்ப முடியுமா?" என்று கேட்டுக்
கொண்டே சமையல் உள்ளே யிருந்து என் மனைவி வந்தாள்.
பத்மாஸனி, "யாருக்குக் கல்யாணம்?" என்று கேட்டாள்.
"உனக்கு மாமாவாகணும் அவன். வயசு முப்பதாகிறது. இன்னும் கல்யாணமாகவில்லை" என்றாள் சுந்தாப்பாட்டி.
"நான் கல்யாணமே..." என்று ஆரம்பித்த பத்மாஸனி. பாய், ஏதோ யோசனையில் ஆழ்ந்தவளாகப் பாதி வாக்கியத்தில் நிறுத்தினாள்.
நான் அவளைப் பார்த்தேன். எவ்வளவு படித்தவளாக இருந்தால்தான் என்ன? சுந்தாப்பாட்டியின் சூழ்ச்சியிலிருந்து. அப்படி ஒன்றும் சுலபமாகத் தப்பிவிட முடியாது என்று எனக்குத் தெரியும்.
<hr class="wst-rule wst-rule- " style="color:inherit;width:5em;" />