உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடரங்கு/மகாத்தியாகம்

விக்கிமூலம் இலிருந்து

மகாத் தியாகம்

“தான் ஆடாவிட்டாலும் சதை ஆடத்தானேடா செய்கிறது......... என்ன செய்ய?” என்றார் கிழவர்.

“இதோ பார் அப்பா! இந்த வயசில் நீ இன்னமும் என்னால் கஷ்டப்பட்டுக்கொண் டிருப்பது சரியல்ல; நியாயமல்ல. நீ உன் பாட்டைப் பார்த்துக்கொள். ஏதோ சர்க்கார் தயவு பண்ணித் தருகிற பென்ஷன் வருகிறது, உனக்குப் போதும்...” என்றான் ராஜாமணி.

“பிரமாதப் பென்ஷன்தான்... இருபத்தெட்டு ரூபாய்” என்றார் கிழவர்.

“பிரமாதமோ பிரமாதமில்லையோ, அது போதும் உனக்கு. தவிரவும் அந்தப் பென்ஷன் குறைந்ததும் என்னாலேதானே. இருபது ரூபாயைக் கம்யூட் பண்ணிப் பணமாகக் கொடுத்தே. கடைசியாக, அதையும் தீர்த்துவிட்டேன். நான் தொட்டதெல்லாம் ஏனோ துலங்கவே மாட்டேன் என்கிறது...” என்றான் ராஜாமணி.

“போக வேண்டியதெல்லாம் போகட்டும்” என்றார் கிழவர். அவர் மனசிலிருந்த ஆத்திரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட அவருடைய குரலில் தொனிக்கவில்லை.

“நீ என்னை விட்டுப் பிரிந்து தனியாக இருப்பதுதான் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த வயசில் என் கஷ்ட நஷ்டங்களில் உன்னையும் பங்கெடுத்துக்கொள்ளச் சொல்வது சரியல்ல. காலம் வராதா? நல்ல காலம் வந்ததும் மறுபடியும் சேர்ந்துகொள்வது!” என்றான் ராஜாமணி.

“சின்னப் பையனுக்குச் சொல்ற மாதிரி ஏதேதோ சொல்றயே! வயசு அறுபத்துநாலு ஆயிடுத்து, போன சித்திரைக்கு. இந்த மார்கழி மாசம்வரை தாங்கினால் பெரிசு...”

“சாகறத்துக்கு ஆசைப்படற மாதிரி பேசறயே!”

"சாகறத்துக்கு யாருடா ஆசைப்பட்றா? வயசு அறுபத்து நாலு ஆச்சே! படற கஷ்டமெல்லாம் பட்டாச்சு, போகலாமின்னா மனசு கேக்கறதா ? கேக்க மாட்டேன் என்கிறது. இப்படியே இருக்கலாமே, இருந்துண்டே இருக்கலாமேன்னு தான் இருக்கு" என்றுர் கிழவர்.

ராஜாமணி அவரை நிமிர்ந்து பார்த்தான். அவன் தகப்பனார் கெட்டிக்காரர்தான். அதாவது ஒரு காலத்தில் கெட்டிக்காரராக இருந்தவர்தாம். இப்பொழுது அறிவு மழுங்கிவிட்டது. மற்றப்படி புலன்கள் அதிகமாக அடங்கிவிடவில்லை. கண் தெரிந்தது-பல்லெல்லாம் சரியாகத்தான் இருந்தது; இன்னமும் நாலு மைலானாலும் பாராட்டாமல் நடந்து வருவார். தெய்வசித்தம் அப்படியானால் அவர் இன்னும் பத்து வருஷங்ககள் சுகமாக இருக்கலாம்.

ஆனால் அவருக்குக் கஷ்டமெல்லாம் அவர் பிள்ளையால் ஏற்பட்டதுதான். அதை ராஜாமணியே ஒப்புக்கொண்டான்.

"மார்கழி, தை என்று கணக்குப்பண்ணாதே அப்பா. எனக்கு இதுவரையில் நேர்ந்த கஷ்டங்களை எல்லாம் விட அது மகாப் பெரிய கஷ்டமாகிவிடும்," என்றான் ராஜாமணி.

உண்மையிலேயே அது மகாப் பெரிய கஷ்டமாகத்தான் போய்விடும். முதலில் அப்பா மூலம் கிடைத்துக்கொண்டிருந்த பென்ஷன் தொகை போய்விடும்.

கிழவர் கிருஷ்ணசாமி சாஸ்திரி சொன்னார்: "இத்தனை வயசு இருந்தாச்சு. எனக்கு இனிமேல் கஷ்டம் நஷ்டம் வந்தாலுங்கூடத் தொடாதுன்னுதான் சொல்லணும். உன்னைத் தவிர வேறு யார் எனக்கு? வேறே எங்கே போய் நான் எப்படிச் சௌகரியமாக இருக்க முடியும்? எங்கே போய் நான் எதற்காக உசிர் வச்சுண் டிருக்கணும்? நீ கஷ்டப் படறச்சே, உன் கண்ணில் படாமே, உன்னுடன் இருக்காமல் நான் சுகப் படணும்னு நினைக்கப்படுமாடா?"

ராஜாமணி பதில் எதுவும் சொல்லவில்லை. கிழவருக்குப் போக வேறு இடம் இல்லைதான். அதுதான் எல்லாவற்றிலும் மகா கஷ்டமாகப் போய்விட்டது. போ என்று நிர்த்தாக்ஷிண்யமாக எப்படிச் சொல்வது?

"கஷ்டமோ நஷ்டமோ நானும் பட்டுண்டு உன்னோடே இருப்பதுதாண்டா எனக்குச் சுகம்" என்றார் கிழவர்.

ராஜாமணி தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டான்: 'நீ போற வரையிலும் என் கஷ்டங்களும் என்னைவிட்டு அகலா. நீ போன பிறகுதான் என் நிலைமையும் திருந்தும் என்று தோன்றுகிறது. அது உன் அதிர்ஷ்டமோ என் அதிர்ஷ்டமோ, எப்படிச் சொல்றது?' பிறகு உரக்கச் சொன்னான்: "என்னோடே இருந்து நீ என்ன சுகத்தைக் கண்டு விட்டயோ? இனிமேல் என்ன சுகத்தைக் காணப் போறியோ, அது கடவுளுக்குத்தான் வெளிச்சம்" என்றான். அவன் குரல் எதிர்பாராத துக்கத்தால் சற்றுக் கம்மியது. அவன் கண்கள் கண்ணீரால் மங்கின. அவன் உள்ளத்திலே ஓர் ஏக்கம் குடி புகுந்தது. உணர்ச்சி வேகம் அவன் உடலை ஒரு தாக்குத் தாக்கி உலுக்கியது. "சீ ! இதுவும் ஒரு வாழ்க்கையா!" என்று தன்னையே நொந்துகொண்டான்.

****

ன் தகப்பனாருடைய அறுபத்துநாலு வருஷ வாழ்க்கையும், தன்னுடைய முப்பத்தைந்து வருஷ வாழ்க்கையும் அவன் கண்முன் திரை ஓடின.

தன் ஆதி நாளையக் கதையை எல்லாம் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகளே அவனுக்குப் பல தடவைகளில் சொல்லியிருந்தார். அதப் பாதாளத்திலிருந்து கரையேறி மெல்ல மெல்ல அடி வைத்து அவர் ஒரு சிறு சிகரத்தை எட்டிப் பிடித்தவர். ஆனால் அந்தச் சிறு சிகரத்தின் மேல் கூட அவரால் அதிக நேரம் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டது. அச் சிகரத்தை அடுத்திருந்த சிகரத்தை நோக்கி இரண்டடி எடுத்து வைத்திருந்தால் போதும்; நிலைத்துக்கொள்ளலாம். ஆனால் ஓரடி எடுத்து வைத்தால் ஒன்பதடி சறுக்கிவிட்டது. முன்னேற ராஜாமணி அவருக்கு உதவியிருக்க வேண்டும். அந்த விஷயத்தில் ராஜாமணி அவருக்குச் சற்றும் உதவவில்லை என்பது மட்டுமல்ல; அவர் சறுக்கி விழ அதிகம் உதவினான்.

அவர் மகன் ராஜாமணியின் வாழ்க்கை...... 'சே ! அதுவும் ஒரு வாழ்க்கையா !' என்றீருந்தது இருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகளுக்கு.

அறுபத்துநாலு வருஷ வாழ்க்கையில் அவர் கண்டு அநுபவித்த சுக வாழ்வெல்லாம் ஏழெட்டு வருஷங்களுக்குமேல் இராது. அதற்குப் பிறகு வந்துபோன வருஷங்களை எல்லாம் அவர் அந்த ஏழெட்டு வருஷ இன்ப ஞாபகங்களோடுதான் ஒட்டிக்கொண் டிருக்கும்படி நேர்ந்துவிட்டது.

அவரே எத்தனையோ தரம் தம் தகப்பனாரைப்பற்றி ராஜா மணியிடம் சொல்லி யிருந்தார். "என் அப்பா நல்லவர்தாம். ஆனால் அவருடைய ஒரே ஒரு கெட்ட பழக்கம் அவர் வாழ்க்கையை மட்டுமன்றி என் வாழ்க்கையையும் பாழாக்கி விட்டது. அவர் ஸ்திரீ லோலர், அவர் அந்தக் காலத்துக்குச் சற்றுச் சிறப்பாகவே சம்பாதித்தார். சம்பளத்தைப் போல நாலைந்து மடங்கு அதிகமாகவே கடன் வாங்கித் தாசிகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார். அவர் இறந்த பிறகு என் இருபது வருஷ சம்பாத்தியம் பூராவும் கொடுத்து நான் அவர் பட்ட கடன்களைத் தீர்க்க வேண்டியிருந்தது. அந்த இருபது வருஷங்களில் ஏழை இந்தியாவில் என் போல ஏழை வாழ்வு வாழ்ந்தவன் யாரும் இருக்க மாட்டான் என்பது நிச்சயம்” என்பார். கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள்.

"அந்த வறுமையில் எனக்குத் தைரியமும் ஆதரவும் தந்தது என் தாய்தான். மகாலக்ஷ்மி என்றுதான் அவளைச் சொல்ல வேனும். வேறு என்ன சொல்ல முடியும்? அவளுக்கும் கணவன் கொடுத்து விட்டுப்போன பிரசாதம் நீங்காத வியாதி ஒன்றுதான். என்ன பொறுமை! என்ன சாமர்த்தியம்......" என்பார் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள். ராஜாமணி சொல்வான், "வியாதியோ வியாதியில்லையோ, பாட்டி தன் கணவனுடன் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் ஈடு செய்யக்கூடிய வழியிலே உன்னோடு-தன் பிள்ளையோடு, திருப்திகரமான வாழ்வு வாழ்ந்துவிட்டாள்!"

கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகளுக்கே இது பெரிய பெருமை தான். அந்தத் தாயின் மனம் கோணமல் நடந்துகொள்வது அவருக்குச் சாத்தியமாக இருந்தது, அவர் மனைவியின் உதவியால் தான். மாமியாரே போற்றிய மாட்டுப்பெண் அவள். ஆனால் அவளைப்பற்றி எல்லாம் நன்றியுடன் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள் நினைப்பது கூடக் கிடையாது. அவளைப்பற்றி நினைக்க ராஜாமணிக்கு இடமேயில்லை. அவனுடைய சிறு வயசிலேயே அவள் இறந்துவிட்டாள். பத்து வயசுக்குப் பிறகு தன் தாயை அறிய ராஜாமணிக்குச் சந்தர்ப்பமே தராமல் போய்விட்டாள்.

அவள் கணவனுக்கும் மாமியாருக்கும் கணவனின் தம்பிமார்களுக்கும் திருப்திகரமாக எப்படியோ நடந்துகொண்டு வாழ்க்கை நடத்திவிட்டாளே தவிர, அவ்வளவாகக் கெட்டிக்காரியல்ல. ஏழெட்டுக் குழந்தைகள் பெற்றெடுத்தாள். அவற்றில் மூத்தது ஒரு பெண்ணும் கடைசிக் குழந்தை ஒரு பிள்ளையுந்தான் மிஞ்சியது. பெண்ணுக்கு உரிய காலத்தில் உரியபடி கல்யாணம் செய்து வைத்தார் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள். ஆனால் அந்தப் பெண்ணின் அதிர்ஷ்டம் சரியாக இல்லை. மகா சுயநலக்காரர்களான அவள் கணவனும், கணவனின் தாயுமாகச் சேர்ந்து, பெண்ணின் நடத்தை சரியாக இல்லை என்று கதை கட்டிவிட்டு அவளைப் பிறந்த வீட்டுக்கே திருப்பியனுப்பி விட்டார்கள். இதைவிடப் பெரிய துக்கம் தாய்க்காரிக்கு வேறு என்ன வேண்டும்?

எப்போதுமே பலவீனமாக இருந்த தாய் தன் பெண் வீடு திரும்பிய இரண்டொரு வருஷங்களுக்குள்ளாகவே மன முடைந்து இறந்துவிட்டாள். தன் தகப்பனுக்கும் தம்பிக்கும் அதிகக் கஷ்டம் கொடுக்கக்கூடாது என்று எண்ணியவள் போல, அந்தப் பெண்ணும் தன் தாய் இறந்து நாலைந்து வருஷங்களுக்குள்ளாகவே இறந்துவிட்டடது, அவள் அப்படி இறந்துவிட்டது பற்றி ராஜாமணிக்கோ அவன் தகப்பனாருக்கோ ஒன்றும் துக்கம் இல்லை. இருந்து சகிக்க முடியாத கஷ்டங்களை அனுபவித்துக்கொண் டிருப்பதைவிட, அவள் போய்விட்டதே மேல் என்றுதான் இருவருக்கும் தோன்றிற்று. இருந்தாலும் சில சமயங்களில் அந்தப் பெண்ணினுடைய அர்த்தமற்ற வாழ்க்கையை அவர்களால் நினைக்காமல் இருக்க முடிந்ததில்லை.

ராஜாமணி செய்கையற்றுப் போனதற்கெல்லாம் அடிநாளிலிருந்து இதை ஒரு காரணமாகச் சொல்லலாம். அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் அக்கா, வீட்டில் இருந்தாள். தாயின் மரணம் -தொடர்ந்து சகோதரியின் மரணம்! 'என் செயலால் ஆவது இனி ஒன்றும் இல்லை' என்று செயலற்று விட இளம் பிராயத்திலேயே கற்றுக்கொண்டு விட்டான் ராஜாமணி. முடிவு காணாத தத்துவ விசாரங்களைத் தவிர அவனுக்கு வேறு ஒன்றும் கை வரவில்லை.

கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகளின் தம்பிமார்கள் இருவரும் சகல விதங்களிலும் தங்கள் அண்ணாவுக்கும், தங்கள் அண்ணா பிள்ளைக்கும் எதிர்மாறான குணங்கள் உள்ளவர்கள். மூத்தவரைப் பீடித்த மாதிரி குடும்பக் கவலைகள் ஆரம்பமுதலே அவர்களைப் பீடிக்கவில்லை. அவர்கள் அந்தக் குடும்பத்தில் வேர் ஊன்றவே யில்லை என்று கூடச் சொல்லலாம். அவர்கள் வேர் ஊன்றாமலே. முத்தண்ணாவின் செலவில் வளர்ந்து மரமாகிப் பூத்துக் காய்த்தும் விட்டார்கள்.

அவர்கள் வடக்கே வெவ்வேறு இடங்களில் மிகவும் சௌகரியமாக இருந்தார்கள். 'முத்தண்ணா அவர்களில் யாரையாவது பார்ப்பது மாமாங்கத்துக்கு ஒரு முறைதான். முத்தண்ணாவின் குடும்பக் கவலைகளோ கஷ்டங்களோ அவர்களைத் தொடவே இல்லை. யாரோ மூன்றாவது மனுஷனைப்பற்றி நினைப்பது போலத்தான் அவர்கள் முத்தண்ணாவைப் பற்றி நினைத்தார்கள் என்று சொல்வது மிகையாகாது.

இதுபற்றி ராஜாமணிக்கு ரொம்பவும் கோபம். விஷயம் தெரிந்தது முதல் அவன் தன் சிற்றப்பன்களிடம் போவது கூடக் கிடையாது. ஆனால் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள் இதை எல்லாம் பாராட்டுகிற மாதிரி காட்டிக்கொள்வது கிடையாது; "அவர்கள் என்னை லட்சியம் செய்யா விட்டால் என்ன? எங்கேயாவது நன்றாக இருந்தால் சரிதான்" என்று சொல்லுவார். ஆனால் அவருக்கும் மனசில் இது ஒரு பெரிய குறைதான்.

ஓரொரு சமயம் ராஜாமணியே சொல்லுவான்: "நம்மோடு சேர்ந்துகொண்டார்களானால் அவர்களையும் நம்முடைய துரதிருஷ்டம் பிடித்துக்கொண்டாலும் பிடித்துக் கொண்டுவிடும். சேராமல் இருப்பது நல்லதுதான். அவர்களாவது சௌகரியமாக இருக்கட்டும்" என்பான்.

கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள் அறுபத்து நாலு வருஷங்களில் ஒரு தவறுகூடச் செய்ததில்லை. மனசில் உறுத்தக் கூடியதாக ஒரு தவறுகூடச் செய்ததில்லை என்பது அவருக்கு மிகவும் ஆறுதல் அளித்த விஷயம்.

"அப்பாவின் வாழ்க்கையிலிருந்து ஒன்றுதான் நான் கற்றுக்கொண்டேன். ஸ்திரீகள் விஷயத்தில் கெட்டவனாக இருப்பவன். குடும்பத்துக்கு லாயக்கற்றவன் என்று கண்டு கொண்டேன். ஸ்திரீலோலனாக இருப்பவன் தன் வாழ்வு மட்டுமல்ல, தனக்குப் பின் வருகிற சந்ததியின் வாழ்வையும் குலைத்து விடுகிறான் என்று அறிந்துகொண்டேன். ஸ்திரீகள் விஷயத்தில் நல்லவனாக இருப்பது என்று அன்றே தீர்மானித்துக்கொண்டுவிட்டேன் நான்."

ஸ்திரீகளைப் பற்றிய மட்டிலுந்தான் என்றில்லை. மற்ற எல்லா விஷயங்களிலுமே அவர் நல்லவராகவே தம் வாழ்நாட்களைக் கழித்துவிட்டார். யாரும் அவரைப்பற்றிக் குறை கூறவே துணிய மாட்டார்கள். அவர் புறம் கூறியதில்லை; பிறர் சொத்துக்கு ஆசைப்பட்டதில்லை; பிறருக்குக் கெடுதல் நினைத்ததுமில்லை, செய்ததுமில்லை. அவர் பிறர் காரியங்களில் கலந்து கொண்டதுமில்லை. தாம் உண்டு தம் காரியம் உண்டு என்று இருந்துவிட்டவர்.

நல்லவர்களுக்கு இகபோகத்தில் எதுவும் கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டு, கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள்.

"மற்றதெல்லாம் பாழ்த்துவிட்டது உண்மைதான் என்றாலும், எனக்கு எஞ்சியிருப்பது ராஜாமணி. அவன் தலைப்பட்டு என் துக்கங்களையெல்லாம் துடைத்துவிடுவான். அவன் உள்ள வரையில் எனக்கு என்ன கஷ்டம்!” என்றுதான் ஆரம்பத்தில் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள் எண்ணினார். அவர் அப்படி எண்ணியதில் தவறு ஒன்றும் இல்லையே! ஒரு நாளில் அறுபது நாழிகை நேரமுமா இருட்டாகவே இருந்துவிடும்?

இதுதான் விசேஷம். நாளில் அறுபது நாழிகை நேரமும் இருட்டாகவே இருந்துவிட்டது என்பது மாத்திரமல்ல, அடுத்த நாளும் இருட்டிலேயே தொடங்கிற்று!

ராஜாமணி நன்றாகவேதான் படித்தான், திருப்திகரமாகவே தான் பரீட்சைகளில் தேறினான். சூட்டோடு சூடாக ஒரு வேலையிலும் அமர்ந்தான். 'என் கஷ்டங்களெல்லாம் தீர்ந்தன' என்று எண்ணிக் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள் மனம் பூரித்தார்.

ஆனால் அந்தப் பூரிப்பு ஏழெட்டு மாசங்களுக்குக்கூட நீடிக்கவில்லை. ராஜாமணிக்குத் திடீரென்று வேலை போய்விட்டது. காரியாலயத்தில் ஓர் அயோக்கியன் செய்த காரியம் அஜாக்கிரதையுள்ள ராஜாமணியின் தலையில் சுமத்தப்பட்டது. ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டிய ராஜாமணி தெய்வாதீனமாகத் தப்பித்துக்கொண்டான்.

சில நாட்களிலேயே ராஜாமணிக்கு மீண்டும் வேலை கிடைத்தது. செய்கையற்று, தான் செய்யாத காரியங்களுக்கெல்லாம் அளவு மீறிய தண்டனையை எதிர்பார்த்த வண்ணமே ராஜாமணி தன் வேலையைச் செய்தான்; நாட்களைக் கடத்தினான். தண்டனை ஒன்றும் கிடைக்கவில்லை. இச் சமயம்—வேலை சீக்கிரமே போய்விட்டது. சாமர்த்தியமான வேலைக்கு லாயக்கற்றவன் என்பது அவன் காரியாலயத்தில் அவனைப்பற்றி ஏற்பட்ட அபிப்பிராயம்.

இதற்குள் ராஜாமணியைப் பற்றிக் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள் வைத்திருந்த நம்பிக்கைகளும் ஆசைகளும் படிப்படியாக இறங்கிக்கொண்டே வந்துவிட்டன. தம்முடைய கடைசித் துயரத்தை ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ளத் தயாரானார் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள்.

இடையில் ராஜாமணிக்குக் கல்யாணம் ஆயிற்று. மீண்டும் தகப்பனுக்கும் பிள்ளைக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை பிறந்து விடும்போல் இருந்தது. மிகவும் நல்ல இடத்தில் எப்படியோ எக்கச் சக்கமாக நேர்ந்துவிட்டது அது. ராஜாமணிக்குக் கல்யாணம் ஆயிற்று. அழகான பெண், பணக்கார வீட்டுப்பெண். அந்தக் கல்யாணத்திற்குப் பிறகு ராஜாமணிக்குங்கூட வாழ்க்கையில் ஒரு பிடிப்பு உண்டாவது போல் இருந்தது. மீண்டும் மனிதனாக வாழ்க்கை நடத்திவிடுவது என்று தீர்மானித்தவனாக ராஜாமணி, பல வருஷங்களுக்கு முன் விட்ட இடத்திலிருந்து. அடி எடுத்து வைத்து முன்னேற முயன்றான். மனைவி என்கிற புதுத் தெம்பின் உதவியால் இரண்டொரு படிகள் ஏறக்கூட ஏறினான்.

ஆனால் அந்த மனைவி என்கிற தெம்பு அதிக நாள் இருக்கவில்லை. கல்யாணமான இரண்டாவது வருஷத்தில் டைபாய்டில் படுத்தாள். கணவன் மனசில் ஏராளமான ஏக்கங்களைப் போராட விட்டுவிட்டு அவள் ஒரு நாள் போய்விட்டாள்.

அதற்குப் பிறகு ராஜாமணி தலை நிமிரவே யில்லை. விதியுடன் போராடத் தனக்குத் தெம்பு இல்லை என்று தீர்மானித்து விட்டான். வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிவிட முயன்றான். கிழத் தகப்பனுக்காகத்தான் அவன் வாழ்க்கையுடன் ஒட்டிக் கொண்டிருந்தான் என்றுகூடச் சொல்லலாம்.

அவனைத் தூண்டிவிடக் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகளுக்குத்தான் எங்கிருந்து, இவ்வளவும் ஆனபிறகு தெம்பு வரும்? ஒரு சமயம் தம் பிள்ளைக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைக்க முயன்றார். அந்தப் பேச்சு காதில் விழுந்ததும் தம்பிள்ளை தம்மைப் பார்த்த பார்வையை அவரால் ஆறு வருஷங்களுக்குப் பிறகு இன்னமும் மறக்க முடியவில்லை.

சாவை எதிர்பார்த்துக்கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதைத் தவிர அவருக்கு வேறு ஒன்றும் வாழ்க்கையில் சாத்தியமில்லை. ஆனாலும் சாவு என்று எண்ணினால் அவர் மனசு துணுக்குற்றது. அறுபத்துநாலு வயசிலும் அவர் மரணத்தை வரவேற்கத் தயாராக இல்லை.

****

ராஜாமணியினுடைய சிந்தனைகளில் கிழவரின் குரல் குறுக்கிட்டது. "போ! போய்க் காரியத்தைப் பாரு. குளி. சாப்பிடலாம்" என்றார் கிழவர்.

ராஜாமணி எழுந்தான். கொடியில் இருந்த துண்டை எடுத்துக்கொண்டு அவன் கிளம்பும் சமயம் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள் சொன்னார்: "மார்கழி, தை என்று தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறேனே தவிர, சாவை இன்றே வரவேற்க எனக்குத் தைரியம் இல்லை."

ராஜாமணி சற்றுத் தயங்கினான்; "ஏனப்பா இன்றைக்கு இப்படிப் பேசறே!" என்றான்.

கிழவர் அவன் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால் அவர் மனசில் ஒரு விஷயம் அன்று பளிச்சிட்டது. 'என் துரதிருஷ்டந்தான் என் பிள்ளையையும் இப்படி விடாமல் பாதிக்கிறது. நான் போய்விட்டால் ஒருவேளை அவன் சுகமாகவே இருப்பான். அது சாத்தியமே!' என்று எண்ணினார். அந்த எண்ணம் அவர் மனசிலே விசுவரூபம் எடுத்தது.

தம் பிள்ளை தம்மையே பார்த்துக்கொண்டு நின்றதைப் பார்த்தார் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள்: "போ, போய்க் குளித்துவிட்டு வா, எனக்குப் பசிக்கிறது" என்றார்.

ராஜாமணி பதில் சொல்லாமல் மனம் நிறைந்தவனாகச் சென்றான். கிணற்றிலிருந்து நாலு குடம் ஜலம் இழுத்துவிட்டுக்கொண்டபின்தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. சற்று முன் அவன் மனசில் ஓர் எண்ணம் தோன்றியது: 'அவர் போனபிறகுதான் எனக்கு நல்ல காலம் தொடங்கும்' என்ற அந்தச் சிந்தனையின் எதிரொலி அவர் மனசிலும் எழுந்திருந்தால்......? கிணற்றில் விட்ட குடத்தை அப்படியே விட்டு விட்டுத் துண்டால் தலையைப் பரபரப்பாகத் துடைத்துக் கொண்டு உடம்பிலிருந்து ஈரம் சொட்டச் சொட்டக் கூடத்துக்கு வந்தான்.

நடுக் கூடத்தில் தெற்கு வடக்காகத் துணியை விரித்துக் கொண்டு படுத்திருந்தார் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள். அவர் முகத்தில் ஒரு புன்னகை படர்ந்திருந்தது.

"அப்பா" என்றான் ராஜாமணி. பதில் சொல்லுவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவர் பதில் சொல்லவில்லை.

பிரேதத்தைத் தொட்டுப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை ராஜாமணிக்கு. ஈரத் துணியால் முகத்தை மூடிக்கொண்டு,கூடத்துத் தூணில் சாய்ந்தான் ராஜாமணி. அவன் ஈர முதுகிலிருந்து ஜலம் தரையில் ஓடியது.

"முதலில் தாய் இருந்தாள்-கடைசியில் பிள்ளை இருந்தான். அவர்களுக்கென்று தியாகம் செய்வது அவருக்குச் சாத்தியமாக இருந்தது. எனக்கு யார் இருக்கிறார்கள்? யாருக்கென்று நான் என்ன தியாகம் செய்வதற்காக உயிர்வாழ வேண்டும்?" என்று தன்னையே கேட்டுக்கொண்டான் ராஜாமணி.

இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை.

"வயசு முப்பத்தைந்துதான் ஆகிறது. நானும் அவர் வயசு வரை இருக்கும்படி நேர்ந்துவிட்டால்......?"

இந்தக் கேள்விக்கும் பதில் ஏது ?

அவன் மீண்டும் சுய நினைவு பெற்றபோது, இருட்டத் தொடங்கிவிட்டது.


"https://ta.wikisource.org/w/index.php?title=ஆடரங்கு/மகாத்தியாகம்&oldid=1526876" இலிருந்து மீள்விக்கப்பட்டது