இராக்கெட்டுகள்/வாழ்க்கைத் துறைகள்
13. வாழ்க்கைத் துறைகள்
இராக்கெட்டுக்கள், எதிர்ப்பு ஏவுகணைகள் (Guided missiles) இவைபற்றிய உற்பத்தி மிகவும் புதியது. இந்த உற்பத்திப்பெருக்கத்தில் பங்குகொள்ள விழையும் இளைஞர்கட்குப் பல சிறந்த எதிர்கால வாய்ப்புகள் உள்ளன. இதில் பல்வேறு வாழ்க்கைத் துறைகளும் உள்ளன. இத்துறைகள் யாவும் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சியூட்டும் தன்மையுள்ளனவாக அமைந்துள்ளன. இன்றைய கிலேயில் இத்துறையில் பணியாற்றும் உண்மையான நிபுணர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது; இவர்கள் யாவரும் போருக்குரிய ஏவுகணைகளைத் திட்டமிடுவதிலும் அவற்றை அமைப்பதிலுமே பங்கு கொண்டுள்ளனர். அமைதிக்கால விண்வெளித் தேட்டத்தில் (Exploration of space) இன்னும் பெரிய அளவில் முயற்சிகள் மேற் கொள்ளப்பெறவில்லை.
எதிர்ப்பு ஏவுகணைகள் மிகவும் சிக்கலான அமைப்புக் களைக் கொண்டவை. பல அறிவியற்பகுதிகளின் அறிவிய லறிஞர்கள், பொறியியல் வல்லுநர்கள் இவர்களடங்கிய ஒரு பெரிய குழுவினலேயே (Team) அவற்றைத் திட்டமிடுதல் கூடும். ஆகவே, இந்தத் தொழிலில் எந்தக் குறிப்பிட்ட பகுதி தமக்குக் கவர்ச்சியாக உள்ளது என்பதை இளைஞர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இங்குக் “காற்றுச் சட்டங்களையும்” (Air frames), ஆற்றல் கிலேயங்களையும் அமைப்பதற்குப் பொறியியல் வல்லுநர்கள் தேவை; வழி காட்டிக் கருவித்தொகுதிகளே நிறுவுவதற்கு மின்னியல் நிபுணர்கள் (Electronic experts) தேவை; எரி பொருள்களைத் தேர்ந்து தயார் செய்வதற்கு வேதியியலறிஞர்கள் வேண்டும். இவர்களைத் தவிர எல்லாவகைத்தொழில் துறைகளிலிருந்தும் பதினைந்து இலட்சத்திற்கு மேற்பட்ட கருவிகளின் உறுப்புக்களைத் தயார் செய்யும் ஆண்களும் பெண்களும் தேவை. இந்த உறுப்புக்கள் ஏதாவதோர் ஆயுத அமைப்பில் இடம் பெறுகின்றன.
பிறவாழ்க்கைத் துறைகளைப் போலவே, இங்கும் சிறந்த தகுதிகளைப் பெற்றிருப்போருக்கு எதிர்கால வாய்ப்புக்கள் காத்துக் கொண்டுள்ளன. பெரும்பாலான தொழில்களுக்குப் பல்கலைக்கழகப் பட்டம் இன்றியமையாததாக உள்ளது. ஆனால், பல்கலைக்கழகப் பயிற்சியின்றியே விரைந்து செயற்படும் மூளையையும் சரி நுட்பத்திறனுடன் பணியாற்றும் இயல்பும் பெற்றுள்ள ஓர் இளைஞன் மின்னியல் முறையில் செயற்படும் கணக்கிடும் பொறிகளை இயக்கவும், குடையும் கருவியமைப்பினைச் சுழற்றவும், தொலை ஒலிப்பான் (Telemetering) ஏற்குங் கருவிகளைக் கையாளவும் கற்றுக் கொள்ளலாம். இவை யாவும் இராக்கெட்டு வளர்ச்சியில் பெரும்பங்கு பெறுகின்றன.
தொழில் நுட்பத்திறனோ அதுபற்றிய அறிவோ இல்லாதவர்கட்குக் கூட இத்துறையில் ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன. இராக்கெட்டுகள், ஏவுகணைகள் இவற்றைச் செலுத்தும் துறையில் எண்ணிறந்தோர் தேவைப்படுகின்றனர். விமானப் படையினர், தரைப் படையினர், கப்பற் படையினர் இவர்கள் யாவரும் ஏவுகணைகளை இயக்குவதில் கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில், இந்த ஏவுகணைகள் இன்று துப்பாக்கிகள், டார்ப்பிடோக்கள், விமானிகளுடன் கூடிய ஒரு சில வகை வான ஊர்திகள் இவற்றின் இடங்களைப் பெற்றுவிட்டன. நல்ல பயிற்சி பெற்றுவிட்டால் அவர்கட்காக எண்ணற்ற அலுவல்கள் (Jobs) காத்துக்கொண்டுள்ளன.மனிதர்களைக் கொண்ட துணைக்கோள்களை இயக்கும் தொழிலிலும், இன்று அமைக்கப்பெற்று வரும் விண் வெளியில் செல்லும் விமானங்களே இயக்கும் தொழிலிலும் இன்னும் வாய்ப்புக்கள் தக்கவாறு ஏற்படவில்லை. இதில் பங்கு பெறும் விமானிகள் மிகச்சிறந்த, நிபுணர்களாக இருத்தல் வேண்டும். இதில் பங்குபெற்று வல்லவர்களாக விரும்பும் இளைஞர்கள் பெளதிக இயல், வேதியியல், கணிதஇயல், வானநூல், மருத்துவ இயல் ஆகிய துறைகளில் தேர்ச்சிபெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இவற்றுக்கு மேல் இவர்கள் இராக்கெட்டுத் துறையிலும் மேலான கல்வியினைப் பெறுதல் வேண்டும்.
இன்று விண்வெளிப் பயணஇயலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலோர் பொறியியல் வல்லுநர்களாகவே உள்ளனர். குறிப்பாக மூன்று துறைகளைச் சேர்ந்த பொறியியல் நிபுணர்கள் திட்டமிட்டு, உருவமைத்து, இறுதியாக இராக்கெட்டுக்களே அமைக்கின்றனர். அமெரிக்காவிலும் இரஷ்யாவிலும் இன்று இத்தகைய கல்வியினைப் பல்கலைக்கழகம் அளித்து வருகின்றது.
ஒரு சமயம் சோவியத் அறிவியலறிஞர் ஒருவர் இரஷ்யாவில் எங்காவது ஓரிடத்தில் வாழ்ந்து வரும் சிறுவன் ஒருவன் சந்திரனில் கைவீசி நடக்கும் முதல் மனிதனுக இருக்கலாம் என்று கூறியதாகப் படிக்கின்ருேம். அவர் சொன்னது தவருகவும் இருக்கலாம். அவர் குறிப்பிட்ட சிறுவன் பிரிட்டனிலும் இருக்கலாம் : அமெரிக்காவிலும் இருக்க நிறைய வாய்ப்பு உண்டு. இந்திய மண்ணில் பிறந்த உங்களில் ஒருவனுகவும் ஏன் இருத்தல் கூடாது?