தாய்மொழி காப்போம்/இனி விடோம்
8. இனி விடோம்
(18.11.1967)
உலகத்து முதன்மொழியாம் தமிழைத் தங்கள்
உயிர்மூச்சாக் கொண்டிலங்கும் தமிழர் நாட்டிற்
கலகத்தை உருவாக்கும் வெறியர் கூடிக்
கடுகளவுந் தகுதியிலா இந்தி தன்னைப்
பலகட்டுக் கதைகூறிப் புகுத லிட்டார்
படையெடுத்தார், தடியெடுத்தார், பயனே யில்லை
நிலை கெட்டோர் மூன்றுமுறை முயன்றுபார்த்தும்
நினைப்பொன்றும் பலிக்கவில்லை தோல்வி கண்டார்!
முதன்முறையா இந்திமொழி தமிழர் நாட்டுள்
முகங்காட்ட வன்முறையால் நுழைந்த போது
கதவடைத்துத் தடுத்துரைத்தோம்; ஆள வந்த
கடுங்கோலர் சிறைக்கதவைத் திறந்து வைத்தார்;
அதன்கொடுமைக் கஞ்சவிலை புகுந்து நின்றோம்;
அங்கேதான் ஈருயிரைப் பலியாத் தந்தோம்;
இதன்பிறகே அந்தமொழி அஞ்சி ஓடி
இடுப்பொடிந்து வடபுலத்தே கிடக்கக் கண்டோம்.
புறங்காட்டிச் சென்றமொழி மீண்டு மிங்குப்
புகுவதற்குத் துணிவோடு வருதல் கண்டோம்;
திறங்காட்டும் மறவர்குழாம் சாக வில்லை
சிங்கமென இருக்கின்றோம் என்றெ ழுந்தோம்;
அறங்காக்கும் மனமில்லா ஆட்சி யாளர்
அடித்தடித்துத் துரத்திடினும் துணிந்து நின்றோம்;
நிறங்காட்டுஞ் செங்குருதி சிந்தக் கண்டு
நிலைகுலைந்து மறைந்தோடிச் சென்ற திந்தி.
மதியாதார் தலைவாசல் மிதிப்ப தற்கு
மதிகெட்டு வந்தமொழி மானங் கெட்டுக்
கதியேதுங் காணாமல் ஓடித் தோல்வி
கண்டபினும் தன்னகத்தே வாழும் எண்ணம்
உதியாமல், பிறன்வீட்டிற் புகநினைந்தே
உணர்விழந்து மறுமுறையும் அறுபத் தைந்தில்
விதியோடு விளையாட உறவும் ஆட
வீறுநடை யோடிங்கு நுழையக் கண்டோம்.
இனிவிடுத்தால் தமிழ்மொழிக்கும் நமக்குந் தீங்காம்
எனக்கருதித் தமிழகமே கொதித்தெழுந்து
முனைமுகத்துத் தலைநிமிர்ந்து நிற்கக் கண்டோம்;
மூண்டுவரும் மொழிப்போரில் வாழ்வா சாவா
எனநினைத்துத் தமதுயிரைச் சிறிதென் றெண்ணி
இனியதமிழ் காப்பதென உறுதி பூண்டு
தினவெடுத்த போர்மறவர் திரண்டு நின்று
திரும்பிச்செல் திரும்பிச்செல் இந்திப் பெண்ணே
என்றுரைத்துக் கனன்றெழுந்து வீரம் மிக்க
எம்மினத்தார் அணிவகுத்தார்; இந்தி ஆட்சி
கொன்றழித்த பிணக்குவியல் கொஞ்சம் அல்ல;
கொடுங்கோன்மை கட்டவிழ்த்துக் கொண்டு சீறி
நின்றிழைத்த கொடுமைகளும் கொஞ்ச மல்ல;
நெடுந்தவத்தாற் பெற்றெடுத்த பிள்ளை மார்பில்
சென்றடித்த குண்டுகளும் கொஞ்ச மல்ல;
சிறையகத்துப் பட்டோரும் கொஞ்ச மல்லர்;
ஐயிரண்டு திங்களுடல் சுமந்து பெற்ற
அரும்புகளை இழந்தமையால் நொந்த தாயர்
கையிரண்டும் பிசைந்தழுத கண்ணீர் வெள்ளம்
கண்டவர்தம் கல்மனமுங் கரைந்து போகும்;
மையிருண்ட மேகமெனச் செந்நீர் சிந்த
மாணவர்தம் மார்பகத்தே குண்டு பாய்ந்து
மெய்யிருந்த உயிர்குடித்துச் சென்ற தந்தோ!
மேலவர்தம் ஆட்சியில் இம் மாட்சி கண்டோம்!
பன்முறையால் இந்தியினைப் புகுத்த எண்ணிப்
படுதோல்வி கண்டபினும், மக்கள் மன்றில்
புன்முறையால் இழிமொழிகள் பேசக் கேட்டுப்
பொன்றுயிராய்க் குற்றுயிராய்க் கிடந்த போதும்
வன்முறைதான் பேசுகின்றார்; பட்டா ளத்தை
வரவழைப்போம் இந்தியினைத் திணிப்போம் என்ற
பொன்மொழியே உதிர்க்கின்றார்; மக்களாட்சிப்
பூமாலை இவர்கையிற் படும்பா டென்னே!
எப்படியும் இந்தியினைத் திணிப்ப தென்றே
எண்ணிமுடிவெடுத்துள்ளார் வடக்கில் வாழ்வோர்
ஒப்புடைய செயல்செய்ய எண்ண வில்லை;
உயர்ந்தவர்சொல் அவர்செவியில் ஏற வில்லை;
அப்படியே விடுமெண்ணம் எமக்கும் இல்லை
அவரவர்க்குந் தாய்மொழியுண் டென்று ணர்த்தி
இப்படியில் தமிழ்மொழியின் உரிமை காக்க
எழுந்துவிட்டோம் இரண்டிலொன்று பார்த்தே நிற்போம்.
தொன்றுதொட்ட தமிழ்மொழியின் எழுத்துக் கெல்லாம்
தூயவரி வடிவுண்டு தெளிவும் உண்டு
கொன்றுவிட்டுத் தமிழெழுத்தை அவர்தம் தேவ
நாகரியாம் குறுக்கெழுத்தைக் கொணர்வ தற்கே
நின்றுவிட்டார் வடபுலத்தார்; ஒருமைப் பாட்டை #
நிலைநிறுத்தும் நோக்கமென உளறுகின்றார்
நன்றுகெட்ட அவர்நினைவை மாய்ப்ப தற்கு
நாமிங்கு மனத்துணிவு பூண்டு விட்டோம்.