உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்மொழி காப்போம்/போராட்டவுணர்வு வேண்டும்

விக்கிமூலம் இலிருந்து

போராட்டவுணர்வு வேண்டும்

செருமன் நாட்டுக் கிறித்துவ அடிகளார் 'சீன்சிலோபாக்' என்பவர், ஆசிய நாடுகளிற் சுற்றுப் பயணம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே அவர்க்கு வரவேற்பளித்த 'கான்டர்பரியார்' என்னும் அடிகளார், “இவ்வளவு சிறப்பு வாய்ந்த பேரறிஞரான அடிகளாரை ஓர் உயர்ந்த மொழியிலே நான் வரவேற்க விரும்புகிறேன். அப்படி வரவேற் பதற்கேற்ற உயர்ந்த மொழியான இலத்தீன் மொழியில் வரவேற் பிதழைப் படித்துத் தருகிறேன்" என்று கூறி வரவேற்பிதழைப் படித்துக் கொடுத்தார்.

வரவேற்பை ஏற்றுக் கொண்ட அடிகளார், 'உள்ளன் போடு என்னை வரவேற்க வேண்டும் என்பதற்காக ஓர் உயர்ந்த மொழியில் வரவேற்பளித்தீர்கள். நானும் என் உள்ளன்பைக் காட்ட ஓர் உயர்ந்த மொழியிற்றான் நன்றி கூற வேண்டும், அப்படிப்பட்ட உயர்ந்த மொழியாகிய தமிழ் மொழியிலேதான் எனது நன்றியைச் சொல்ல வேண்டும்' என்று கூறித் தமிழால் நன்றி கூறினார்.

இத்தாலி நாட்டறிஞர் 'போப்பையர்' தமிழின் பாற் கொண்ட பற்றினால் தம்மைத் தமிழ் மாணவன் என்று தமது கல்லறையிற் குறிப்பிடுமாறு சொன்னார். மதத்தைப் பரப்ப வந்த 'கால்டுவெல்' அடிகளாரின் மனத்தைக் கவர்ந்து கொண்டது தமிழ். இத்தாலி நாட்டுப் பேரறிஞர் 'பேசுகி'யை வீரமா முனிவராக்கி வென்றாண்டது தமிழ். சோவியத்து நாட்டுத் தோழர் 'ரூதின்' செம்பியன் ஆனார். செந்தமிழ்ப் பற்றால் 'இலக்கியச் செல்வப் பெருக்குடைய தமிழர்களாகிய நீங்கள் ஏன் இன்று வறியர் போலக் கிடக்கிறீர்கள்?” என 'ஈரான்' அடிகளார் ஏத்திப் புகழ்ந்தார்.

இவ்வாறு பிறநாட்டு நல்லறிஞரையெல்லாம் வாயாரப் புகழ வைத்த பெருமை வாய்ந்த தமிழ் மொழிக்கு முற்றுரிமை படைத்த இத்தமிழ் நாட்டிலேதான் "தமிழா இனவுணர்வு கொள், தமிழா மொழியுணர்வு கொள்", என்ற முழக்கம் நாற்புறமும் பறைசாற்றப்படுகிறது. 'தமிழே வேண்டும்; எங்குந் தமிழ், எதிலுந்தமிழ், எல்லாந் தமிழ்' என்ற உரிமை வேட்கை ஒருபால் ஒலிக்கிறது. அதே நேரத்தில் 'யாதும் ஊரே யாவருங் கேளிர் என உலகப் பொதுமையும் மாந்தப் பொதுமையும் பேசிய தமிழ்மகன், இனமென்றும் மொழி யென்றும் பிரித்துப் பேசுவது குறுகிய மனப்பான்மையன்றோ? வெறுப் புணர்வை வெளிப்படுத்துவதன்றோ?' என்ற ‘ஞானோபதேச’மும் பரப்பப்படுகிறது.

மொழிப்பற்றும் இனப்பற்றும் குறுகிய நோக்க மென்றோ பிறர்மேற் காட்டும் வெறுப்புணர்ச்சி யென்றோ விளம்புவது, தன்னலத்தை உள்ளடக்கிய தகவிலாக் கூற்றாகும். மற்றவர் விழித்துக் கொள்வரேல் தமது நலத்துக்குக் கேடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சவுணர்வே அவ்வாறு திரிபுரை கூற வைக்கிறது. இனவுணர்வும் மொழியுணர்வும் இல்லா மாந்தன் தமிழகத்தைக் தவிர வேறு எங்கே யிருக்கின்றான்? ஏனைய நாட்டினர் இனவுணர்வும் மொழியுணர்வும் இயல்பிலே உடையராய்ப் பரந்த மனப்பான்மை பேசுவர். தமிழன் ஒருவன்தான் தன்னையும் தாய் மொழியையும் மறந்துவிட்டுப் பரந்த மனப்பான்மை பேசிப் பாழாவான்.

தாய்மொழிப் பற்றுடைமை குறுகிய நோக்கமென்று கூறினால், காந்தியடிகள் தம் தாய் மொழியாகிய குசராத்தி மொழியிற்பற்று வைத்திருந்தது குறுகிய நோக்கமா? இரவீந்திரநாத் தாகூர் தம் அன்னை மொழியில் அன்பு வைத்திருந்தாரே, அது குறுகிய நோக்கமா? “தாய் மொழிப் பற்றுத்தான் தாய்நாட்டுப் பற்றுக்கு அடிப்படை” என்று தமிழ்ப் பெரியார் திரு.வி.க. தெளிந்துரைத்தது குறுகிய நோக்கமா? “மூச்சு இரைக்க அடி வயிற்றிலிருந்து கடுமையான ஒலிகளை எழுப்பிப் பொருள் விளங்காத ஒரு நிலையில் வடமொழியில் உன்னைப் பாடுகிற நிலைமையை எனக்கு ஏற்படுத்தாமல், நல்ல தமிழில் - இன்பத் தமிழில் உன்னைப் பாடுவதற்கு எனக்கு அருள் புரிந்த ஆண்டவனே உன்னை நான் போற்றுகிறேன்; நன்றி செலுத்துகிறேன” என எழுதியுள்ள இராமலிங்க அடிகளார் குறுகிய நோக்கினரா?

சூரியநாராயண சாத்திரியார் தமது பெயரைப் பரிதிமாற் கலைஞன் எனத் தமிழிற் பெயர்த்து வைத்துக் கொண்டாரே அது குறுகிய நோக்கமா? “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்குங்காணோம்” எனப் பாடிய பாரதியுமா குறுகிய நோக்கினர்?

“தமிழன் என்றோ ரினமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்”

என்று நாமக்கல் கவிஞர். வெ. இராமலிங்கனார் கூறவில்லையா? தமிழ் மொழியிற் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுது வது பற்றியும் பேசுவது பற்றியும் கருத்து வேறுபாடு நம்மவரிடையே தலைதூக்கி நிற்கிறது. கலக்கலாம் என்று வாதிடுவோர், சோவியத்து ஒன்றியத்தை உருவாக்கிய சிற்பி வி.ஐ.இலெனின் சொற்களைக் கண்விழித்துப் பார்க்கட்டும்.

“நாம் உருசிய மொழியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். தேவையின்றி அயன்மொழிச் சொற்களை எடுத்தாளும் போதும் தவறாகவே ஆண்டு வருகிறோம். உருசிய மொழியில், NEDOCHOTY, NEDOSTATKI, PROBELY என்றும் சொற்கள் இருக்கையில் அயன் மொழிச்சொற்களை நம்முடைய மொழியில் ஏன் எடுத்தாள வேண்டும்?....... தேவையின்றி அயன்மொழிச் சொற்களைப் பயன் படுத்துவதன் மீது ஒரு போரையே தொடுக்கவேண்டிய நேரம் இது வன்றோ?” உலகத் தொழிலாளரை ஒன்றுபடுத்தப் போராடிய இலெனின் சொற்கள்தாம் இவை. இனியேனும் மொழிக்கலப்பாளர் திருந்துவரா?

மொழியின் உரிமைக்கும் இனத்தின் விடுதலைக் கும் உரத்த குரல் எழுப்புவதுதான் இயற்கைக் கூறு. இனமும் மொழியும் அடிமைப்பட்டுக் கிடக்க அதனை மறந்தோ மறைத்தோ உலகப் பொதுமை பேசுவது இயற்கைக்கு முரண்பட்டதாகும். நடுவு நிலைமையுடன் எண்ணிப் பார்க்கும் எவரும் அம் முரண் பாட்டை ஏலார். இனமும் மொழியும் ஏற்றம் பெறுமிடத்தேதான், பொது மையோ புதுமையோ நிலைத்தவையாக உண்மையானவையாக மிளிர இயலும். இன்றேல் பொதுமையும் புதுமையும் வெறுமையாகும். ஆதலின் மொழியுணர்வு கொள்க, மொழித் தொண்டு புரிந்தோரைப் போற்றி இனவுணர்வு கொள்க.

இதனை யுணர்ந்து கொண்ட தமிழ்நாடு இந்த நல்வழியில் முனைந்து நிற்பது வரவேற்கத் தக்கதே. ஏய்ப்பும் எதிர்ப்பும், தடுப்பும் மறுப்பும் ஏற்படுங்கால் அஞ்சலும் துஞ்சலுங் கெடுத்து, மயக்கமும் தயக்கமும் விடுத்து, ஆண்மையும் வாய்மையுங் கொண்டு, அவற்றை எதிர்த்துத் தகர்த்தல் வேண்டும். தன்னிலை மறந்து தமிழ்மகன் மெய்ந்நிலை பெறுதல் வேண்டும். இத்தகு போராட்டவுணர்வு ஒன்றுதான் இன்று தேவை. இத்தேவையை உணர்ந்தே அதற்கேற்ற பாடல்கள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. மேலும் தமிழுக்குத் தொண்டு செய்த பெரியார்கள் பற்றிய பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன, தமிழ் காக்க அவை உறுதுணையாகும் என்பதால். உணர்க! எழுக! வருக! தாய்மொழி காப்போம். காரைக்குடி


காரைக்குடி
1.11.1990 அன்பன்
முடியரசன்