உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்மொழி காப்போம்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை

என் தந்தையார் கவியரசர் முடியரசனாரின் படைப்புகள் பல நூல்வடிவில் வெளிவராமல் இருந்த நிலையில், அவற்றை வெளியிட விரும்பிப் பல தொகுதிகளாகப் பிரித்துத் தொகுத்து அவற்றில் ஒன்றாகிய 'தாய்மொழி காப்போம்' எனும் இத் தொகுப்பிற்கான தலைப்பையும் 'போராட்ட உணர்வு வேண்டும்' எனும் முன்னுரையையும் கவிஞரிடம், 1990ஆம் ஆண்டே பெற்றும், பல சூழல்களாலும், எந்தை நெடுங்காலமாக உடல் நலிவுற்றிருந்ததாலும், நூல் தொகுப்பிற்கான அறிவுரைகளை அவர் வழங்க இயலாததாலும், இத் தொகுப்பை வெளியிட இயலாமல் இருந்தது.

இந்நிலையில் 1998ஆம் ஆண்டு தந்தை மறைந்துவிட்டார். பின்னர் 2001ஆம் ஆண்டு சென்னை தமிழ் மண் பதிப்பகம் மூலம் இந்நூலை முதல் பதிப்பாக வெளிக் கொணர்ந்தேன்.

இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலங்களிலும், பிறமொழி ஆளுமையைக் கண்ட கொதிப்பிலும், தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி செலுத்த வேண்டும் என்ற துடிப்பிலும் கவிஞரின் நெஞ்சக் குமுறலில் வெடித்துச் சிதறியவை. இவைகளில் கவியரங்கத் தலைமையேற்றவை ஒரு சில; மற்றவை பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை.

தாய்மொழி காப்பதற்குத் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இந்நூலை வாளும் கேடயமுமாய்த் தம் கைகளில் ஏந்த வேண்டுகின்றேன்.

உலகின் முதன் மொழியும், தொன்மொழியுமாகிய நம் தென் மொழியைத் தமிழராகிய நாம் போற்றிப் பாதுகாக்கத் தவறி வருகின்றோம். செம்மொழியாம் நம் மொழியின் அருமை பெருமை களைப் பிறநாட்டார் அறிந்த அளவு கூட நம்மில் பலர் அறிய வில்லை. நாம் இப்படியே நம் தாய் மொழியைப் புறக்கணித்தோமானால் காலச்சுழற்சியில், தமிழ், தமிழன் என்ற அடையாளமே இல்லாத நிலை ஏற்படும். முன்னொரு காலத்தில் 'தமிழ்' என்று ஒரு மொழி இருந்தது எனவும், இம்மொழி பேசியவர்கள் 'தமிழர்' எனவும், எதிர்காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் கூடப் படிக்க இயலாது.

சாதிக்குச்சங்கம் வைத்துச் சண்மையிட்டு அழியும் தமிழர்கள், நம் மொழி, இனம் அழிந்தபின் அவர்கள் சாதியை எங்கே போய்த் தேடுவர்?

நாம் பிறமொழியை அழிக்க நினைக்கவில்லை. பிறமொழி எதையும் கற்கக் கூடாது என்றும் கூற வில்லை, பிறமொழி நம்மீது திணிக்கப்படு வதைத்தான் எதிர்க்கின்றோம். நம் மொழியைப் பிறர் மீது திணிக்கவில்லை; நம் மொழியைக் காக்கத்தான் துடிக்கின்றோம்.

தாய்மொழிப் புறக்கணிப்பு நம்மவர் செய்வது போல உலகின் எம்மொழியினரும் செய்வதில்லை. பிறமொழியினர், தம் தாய் மொழியைப் போற்றிப் பயிற்று மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் வளர்த்து முன்னேறுகின்றனர். உலகில் உள்ள பல நாடுகளிலே தாய்மொழியைத் தவிர்த்துப் பிறமொழியைப் பயன் படுத்துவதை அவமானமாகக் கருதுகின்றனர். ஆனால் அடிமை எண்ணம் கொண்ட தமிழ் நாட்டினர்தாம், அரைகுறை ஆங்கிலச் சொல் கலந்து பேசுவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். செருமனியில், செருமானிய மொழியை விடுத்து, ஆங்கிலத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தினால், நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை விதிக்கப்படுகிறது. சப்பானியர்கள் தங்கள் தாய் மொழியைப் போற்றியதன் விளைவாகவும், தாய்மொழியில் கல்வி கற்றதன் பயனாகவும்தான், உலகப் பெருவல்லரசான அமெரிக்காவையே அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் இன்று வென்றுகொண்டிருக்கின்றனர். எந்த நிலையிலும் அவர்கள் பிறமொழிக்குப் பல்லக்குத் தூக்குவதில்லை. அவர்களை யெல்லாம் 'மொழி வெறியர்' என்றோ, 'குறுகிய மனத்தினர்' என்றோ யாரும் கூறுவதில்லை. இங்கோ தமிழர்களைத் “தமிழில் பேசுக, எழுதுக, கற்க" என்றால் அதனைக் கேலி செய்கின்றனர். என்னே கொடுமை? எங்ஙனம் தமிழன் உருப்படுவான்?

"என்று தணியும் இந்தப் பிறமொழி மோகம்?" என்று கதறிப் பாட இன்று பாரதியார் இல்லை, ஆனால்.... இதோ முடியரசனார் கவிதை இருக்கிறது. கதறி அழ அல்ல; குமுறி எழ; சிங்கமெனச் சீறி எழ.

கவிச்சிங்கம் முடியரசனார் அவர்கள் தமிழ்மேல் தீராத்தாகம் கொண்டவர். இத்தொகுப்பில் உள்ள கவிதை ஒவ்வொன்றும் அவரின் தாய்மொழிப் பற்றினைப் பறைசாற்றும். தாய்மொழி காப்பதில் கவிஞரின் புரட்சி உணர்வை, எழுச்சியை இக் கவிதைகளைப் படிப்போர் அறிவது மட்டுமல்லாது, அவர்தம் உள்ளமும் பாயும்; சிங்கமெனச் சீறி எழும்; எழுக, வெல்க!

தாய்மொழி காப்போம்! முத்தமிழுக்கு முடிசூட்டுவோம்!


19, 3ஆம் வீதி, காந்திபுரம்,
அன்பன், காரைக்குடி - 630 001

அன்பன்,
மு.பாரிமுடியரசன்


முடியரசன் குடில்
569, பூங்கொடிவீதி,
சூடாமணி நகர்,
காரைக்குடி- 630003