உள்ளடக்கத்துக்குச் செல்

புதியதோர் உலகு செய்வோம்/ஏழு அறங்கள்

விக்கிமூலம் இலிருந்து
2. ஏழு அறங்கள்

காந்தியடிகள் ஏழுவகை அறங்களை நல்லதொரு மக்கள் சமுதாயம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூடாது என்று மொழிந்த குற்றங்கள் -

1. கொள்கையில்லாத அரசியல், 2. பக்தியில்லாத இறைவழிபாடு, 3. ஒழுக்கமில்லாத கல்வி, 4. நாணயம் இல்லாத வாணிபம், 5. மனிதநேயம் இல்லாத அறிவியல் வளர்ச்சி, 6. உழைப்பில்லாத செல்வம், 7. மனச்சாட்சிக்கு ஒப்புதலில்லாத இன்பம்.

இந்த ஏழு குற்றங்களில் ஒன்று இருந்தாலும் சமுதாயமாகிய மரத்தில் பூச்சிகள் அப்பி, பலன் கொடுக்கும் உயிர்த்தன்மையை உறிஞ்சிவிடும். இந்நாள் நாம் அரசியல் விடுதலை பெற்று அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில், புதிய நூற்றாண்டின் தலைவாயிலில் நிற்கிறோம். மேற்குறிப்பிட்ட ஏழு குற்றங்களையும் உட்கொண்டு திணறும் மக்களாட்சியில் தத்தளிக்கிறோம்.

கத்தியின்றி, இரத்தமின்றி, அஹிம்சை, சத்தியம், தியாகம் என்ற வேள்வியில் காந்தியடிகள் இந்திய மக்களை ஈடுபடச் செய்தார். இருநூறு ஆண்டுக்காலம் நம்மை ஆட்சி செய்த அந்நிய நாட்டவரிடம் இருந்து பகைமை இல்லாத நட்புறவுடனேயே நாம் விடுதலை எய்தினோம்.

ஆனால், சோதரராக வாழ்ந்த வாழ்வில் குத்தப்பட்டு இரத்த வெள்ளம் பெருக்கெடுக்க, முழுமையாக இருந்த ஒரு நாட்டு சமுதாயமும் நாடும் பிளவுபட்டது. அண்ணல் அன்றே இந்த நாட்டின் மாசற்ற எதிர்காலத்தின் மீது அவநம்பிக்கையை வெளியிட்டுவிட்டார் எனலாம்.

நூறாண்டு கடந்து வாழ்வேன் என்று மொழிந்திருந்த அவர், தம் எழுபத்தொன்பதாம் அகவையிலேயே, ‘ராம்’ என்ற சொல் உதட்டிலிருந்து பிரியும்போதே உயிரும் உடலைவிட்டுப் பிரிய, ஒரு சக மனிதனின் கைத் துப்பாக்கிக்கு இரையானார். இந்தத் துவக்கமே சூசகமாக இத்துணை அறங்களும் அழியும் சூழலுக்கு வித்திட்டதோ?

கொள்கையற்ற அரசியல் ஒரு தனி மனிதர் மக்களிடம் எவ்வகையிலேனும் செல்வாக்குப் பெறுவதிலிருந்து தொடங்குகிறது. இந்தச் செல்வாக்கு, அந்தத் தனிமனிதரின் ஏனைய அறம் சார்ந்த பண்புகளால் நிலை பெறுவதாக இருந்தால், அந்தச் செல்வாக்கை, அதிகாரக் குவிப்புக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கமாட்டார்.

ஆனால் அந்தச் செல்வாக்கு நவீன மக்கள் தொடர்பு சாதன உத்திகளில் மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடும் சுயநலவாதியான மனிதனையும் வந்தடைகிறது. அவன் மக்கள் தலைவனாகி, மக்களாட்சிக்குத் தேவையான பெரும்பான்மையை அவனைத் தலைமைப்பீடத்தில் ஏற்றுக் கொண்ட அரசியல் கட்சிக்குப் பெற்றுத் தந்துவிடுகிறான். இதை நாம் அநுபவபூர்வமாக அறிந்துவிட்டோம்.

மக்களாட்சியில், அதன் குடிமக்களுக்குத் தேவையான அடிப்படைக் கல்வியும், சுயாட்சி பற்றிய அரசியல் பிரக்ஞையும் இல்லாமலே இங்கே பெரும்பான்மைக் குடிமக்களும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாடகங்கள் நடந்து முடிகின்றன.

மாறாக, அறம் சார்ந்த பண்புகளால் ஒரு தனி மனிதர் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தால், அந்தச் செல்வாக்கு அதிகாரக் குவிப்புக்கு இடமளித்திருக்காது.

அவர் மக்களனைவரையும் மனித நேயக் கண்ணோட்டத்துடன் கல்வி பெறச் செய்திருப்பார். சமத்துவம் என்ற நிலையை எய்த ஒழுக்கம் சிறந்த பண்பாடாகப் போற்றப்பட்டிருக்கும். இறைவழிபாடு பேதம் காணும் சமயச் சடங்குகளையும், புற சின்னங்களையும் முனைப் பாக்கியதாக ஆடம்பர நிகழ்ச்சிகளாக மக்களைக் கூட்டும் உத்தியாக மாறி இருக்காது. வாணிபம் பொருளியல் வளர்ச்சியுடன், அனைத்துப் பிரிவினரின் இன்றியமையாத தேவைகளை நிறைவேற்றக்கூடியதாகச் செழித்திருக்கும். இந்த வளமையில், மனித நேய உறவுத் தொடர்புகள் பேராசையும் வஞ்சகமும் மோசடியும் தலைதூக்காத அளவில் ஏற்றம் பெற்றிருக்கும். அறிவியல் வளர்ச்சி, சமுதாயத்தின் கடைகோடி மனிதன் வரையிலும் தொடர்புள்ளதாக, உழைப்புக்கு மேன்மையும் கெளரவமும் அளிப்பதாகப் பயனடைந்திருப்போம். மனிதவள ஆற்றல் சமுதாயத்தை மேம்படுத்தும். செல்வம் மக்களனைவரும் பயன்பெற, பங்கீடு சமமானதாகவே இருக்கும். இத்தகைய சமுதாயத்தில் மனிதர், தமக்கு இயல்பான, நியாயமான இன்பங்களைத் துய்க்க முடியும். ஸத்யமேவ ஜயதே-மாந்தர் அனைவரும் சமம் - வயது வந்தோர் அனைவரும், ஆண், பெண், ஊனமுற்றோர் உட்பட இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் பங்கு கொள்கின்றனர் என்ற கொள்கைகள் இந்நாள் வெறும் கொடிக் கொள்கைகளாக, நடப்பியலில் செல்லரித்த சிதிலங்களாக எஞ்சியுள்ளன.

காலம் காலமாக ஆட்சிபீடங்களுக்காகவே மனிதரை மனிதர் குத்திக் கொன்றிருக்கின்றனர். சகோதரர்கள், தந்தை, தாய், பிள்ளை என்று வெட்டி மடிந்திருக்கின்றனர். சூழ்ச்சிகள், சதிகள் எல்லாம் இராஜதந்திரம் என்ற பட்டுப் போர்வைக்குள் மறைக்கப்பட்டிருக்கின்றன.

முடியாட்சியில் தான் அத்தகைய கேடுகளுக்கு இடமிருக்கும்; மக்களாட்சி, மக்களே மக்களை, மக்களுக்காக ஆண்டு கொள்வது என்ற முறையில் எதேச்சாதிகாரத்துக்கு இடமில்லை என்று நம்பி எதிர்பார்த்தது பொய்த்துவிட்டது.

கொள்கையில்லாத அரசியல் கட்சிகள், தனிமனிதர்களுள் சுயநலங்களைக் கொழுக்க வைக்கும் சூதாட்டங்களில் ஈடுபடுவதனால் எத்துணை விபரீதங்கள் ஏற்படுமோ, அத்துணையும் ஏற்பட்டிருக்கின்றன.

இப்போது, கடிகாரத்தைத் திருப்பி வைப்பது சாத்தியமா? எங்கிருந்து, எப்படி இந்தச் சமுதாயத்தில் இந்நாள் வேரோடிப் போன தீமைகளைக் களைந்து நல்ல உயிரோட்டத்தை ஏற்படுத்த முடியும்?

1. பூச்சி விழுந்து சேதமாகிவிட்ட பயிரைக் காப்பாற்றச் சக்தியைச் செலவழிப்பது ஒருபக்கம் இருந்தாலும், இனி தலை நீட்டும் பயிரை, அதே பூச்சிகள் தொற்றாமல் காப்பாற்றிப் பாதுகாக்க வேண்டியது இன்றியமையாத முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கு முதல் படி, குடும்பம் என்ற அமைப்பைச் செம்மையாக்க வேண்டும். அடுத்த படி, கல்விச்சாலைகள் வருங்காலச் சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

குடும்பம் என்ற அமைப்பு, ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கும் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், ஆணுக்குச் சந்ததி பெருக்கவும் அமைந்ததென்று கொள்ளப்படுகிறது. இது முற்றிலும் சரியன்று. ஆண் முதன்மைச் சமுதாயத்தில் அவனுக்குத் துணையாக இருந்து,அவன் தேவைகளைனைத்தையும் குறிப்பறிந்து நிறைவேற்றி வைக்கவும், ஆண் மக்களைப் பெற்றுத் தரவும் பெண் படைக்கப்பட்டிருக்கிறாள் என்ற கருத்தே நிலைப்படுத்தப்பட்டது. குடும்பம் என்ற அமைப்பில் அவன் நாயகன்; அவளும் மக்களும் அவனுக்கு அடங்கியவர்கள். அதுவும் பெண் மக்களுக்கு எந்த உரிமையும் சலுகையும் இல்லை.

அந்நாள் ஆணாதிக்கக் கோட்டையாக இருந்த குடும்ப அமைப்பில் இந்நாள் மாறுதல்கள் வந்துவிட்டன. பெண் ஊமையாய் உழைப்புப் பாவையாய் பிள்ளை பெறும் இயந்திரமாக அந்நாள் இயங்கினாள். இந்நாட்களிலே, அவள் குடும்பத்தின் பொருளாதார உற்பத்தியில் ஆணைப் போல பங்கு பெற கல்வியும் அறிவாற்றலும் பெற்றிருக்கிறாள். கூட்டுக் குடும்ப அமைப்புகள் இந்நாள் தகர்ந்துவிட்டன. எனவே, குடும்பம் என்ற அமைப்பில், மக்களைப் பெற்று நல்ல சமுதாயக் குடிமக்களாக உருவாக்கும் பொறுப்பு இருவருக்குமே உரியதாகிறது. மனையறம் என்பது பெண்ணுக்கு மட்டுமே என்ற நியதி இன்று பொருந்தாது. குடும்பம், மக்கள் சார்ந்த எல்லாப் பொறுப்புகளையும் பற்றி முடிவு செய்யும் உரிமை அவளுக்கும் உண்டு. பெண், உழைப்புக்கும் உடல் போகத்துக்கும் உரிய ஆணின் உடமை என்ற ‘இலக்கணம்’ முதலில் தகர்க்கப்பட வேண்டும். குடும்பப் பராமரிப்பு, வீடு, துணிமணிகள் சுத்தம் செய்தல், சமையல் போன்ற அனைத்துப் பணிகளுமே இருபாலரும் பகிர்ந்து கொள்ளும் கடமையாக இருக்க வேண்டும். பாலியல் சார்ந்து அவள் பலவீனமானவள், எந்த நிலையிலும் அவள் ஆணின் ஆளுகைக்குள் தான் இருக்க வேண்டும் என்ற கருத்தைத் திணிக்கும் ஆணாதிக்கப் போக்கும், பொருளியல் சார்ந்து அவளைப் பொருளுக்காக மட்டுமே பேரம் பேசும் திருமண வழக்கங்களும் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு ஆண்துணை அவசியம் என்று கருதுமளவுக்கு ஆணுக்கும் பெண் துணை அவசியமே. ஒரு பெண் சமுதாயத்தில் தனித்து வாழ விரும்பினால் அதைச் சமுதாயம் ஏற்றுக் கொண்டு அவளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.

இத்தகைய மனிதநேய அடிப்படையிலான மதிப்பைப் பெண்ணுக்கு அளிப்பதன் வாயிலாக, குடும்ப அமைப்பில் குழந்தைகள் நல்ல மனவளத்துடனும் உடல் வளத்துடனும் உருவாக முடியும். சமஉரிமை, சமத்துவம் என்ற பண்பை, இத்தகைய குடும்பச் சூழலில் குழந்தைகள் சுவாசிக்க முடியும்.

அடுத்ததாக, பிறவி எடுத்த எல்லா மக்களுக்கும் இன்றியமையாத கல்வியைப் பார்ப்போம். இந்நாட்களில் எல்லோருக்கும் கல்வி என்ற கொள்கை நூற்றுக்கு நூறு உண்மையாக இல்லை. அந்தக் கல்வியும் முற்றிலும் வணிகமயமாகி, மக்கள் சமுதாய வளர்ச்சியைக் கூறு போடவே உதவுகிறது. பல்வேறு தட்பவெப்பச் சூழல் கொண்ட பிரதேசங்கள் அடங்கிய இந்தியத் துணைக் கண்டத்தில், பல சமயங்கள், சாதிகள், மொழிகள்,இனங்கள் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். என்றாலும் இவர்கள் அனைவரும் ஒரே கலாசாரச் சரட்டினால் இணைக்கப்பட்டிருக்கின்றனர் என்றால் தவறில்லை. இந்த உண்மையை, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணம் செய்யும்போதும், மேற்கு மாநிலங்களில் இருந்து கிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்யும்போதும் ஒருவரால் நன்கு உணர முடியும். இந்நாட்டில் வேரூன்ற வந்த பல்வேறு சமயங்களும்கூட, இந்தியத் தன்மை கொண்ட சமயங்களாக மக்களை ஒன்றச் செய்துவிட்ட சிறப்பையும் உணர முடியும். புறச்சின்னங்களுக்கப்பால் இந்த ஒருமைப்பாடு காலம் காலமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தச் சிறப்பு, இன்றைய சுயநல அரசியல் இலாபங்களுக்காகக் குலைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சீர்குலைவு, சின்னஞ்சிறு பிஞ்சுகளின் தாய்மொழியறிவில், பெற்றோர், உறவினர், சூழல் என்று உலகை உணரும் உந்துதல்களில் கூடச் சுமையைக் கூட்டும் வாணிபக் கல்விக் கட்டாயங்களில் பிரதிபலிக்கிறது.

எவ்வகையிலேனும் பொருளிட்டுதலே கல்வியின் பயன் என்ற இலக்கை நோக்கிய கட்டாயப் போட்டிப் பந்தயங்களுக்கு இன்றைய தலைமுறையின் சுயமான அறிவு வளர்ச்சியும், இயல்பான மலர்ச்சிகளும் பலியாக்கப்படுகின்றன.

அந்நியர் நம்மை ஆண்ட காலங்களில் குழந்தை, மழலைக் கல்வியைத் தாய், பாட்டி, என்ற பரம்பரையில், அன்புடனும் பாச உரிமையுடனும் சுதந்தரமாக ஆடியும் பாடியும் மிக இயல்பாகப் பெற்றது. பின்னர் எழுத்தறியும் கல்வி, தாய்மொழியிலேயே புகட்டப்பட்டது.

இந்நாட்களில் கூட்டுக் குடும்பச்சூழல் இல்லை; பணிக்குச் செல்லும் தாயால் மகவுக்குப் பாலூட்டக்கூட முடியாத நிலையில் தடுமாறுகிறாள். நமது வருங்காலச் செல்வம் இன்றைய குழந்தைகளே என்ற நோக்கில், தாய்மார் குழந்தைகளைப் பெற்றபின் குறைந்தபட்சம் ஒன்றரை அல்லது இரண்டு வயது வரையிலும் பராமரிக்கத் தகுந்தபடி அரசு பொறுப்பேற்கத் தாயாருக்குப் பணி விடுப்புச் சலுகை வழங்க வேண்டும். பின்னரும், இதற்கென்றே சிறப்புக் கல்விப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் கண்காணிப்பில் மழலைப் பள்ளிகள், ஆங்காங்கு கட்டாயக் கல்விக்கு முன்னோடி இடங்களாக அமைக்கப்பட வேண்டும். இந்த மழலைப் பள்ளிகளில் ஆண்-பெண், சாதி, சமயம், ஏழை, பணக்காரர் என்ற எந்தப் பாகுபாடும் இருக்கலாகாது. வசதிபடைத்த பெற்றோரிடம், அவரவர் வருவாய்க்கேற்ப பொருளும், வசதிகளில்லாத பெற்றோருக்கு எந்தக் கட்டணமும் இல்லாமலும், அந்த வித்தியாசத்தைக் குழந்தைகள் உணர இடமில்லாத வகையிலும், மழலைப் பள்ளிகள் இயங்க வேண்டும்.

இப்பள்ளிகள், நாடு முழுவதும் ஒரே மாதிரியில், ஒரே சீராக இயங்க அந்தந்தப் பிரதேச மொழியே - தாய்மொழியே கல்விப் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும். சிறுவர் ஒரே சமயத்தில் நாலைந்து மொழிகளைக் கற்க முடியும் என்றாலும், தாய்மொழி மட்டும்தான், வெளியீட்டுத் திறனை இயல்பாக ஊக்குவிக்கும் முதல் மொழியறிவாகக் குழந்தையைப் பிற உலகுடன் தொடர்பு கொள்ளச் செய்கிறது. அந்த இயற்கை முறையைப் பற்றி எறிந்துவிட்டு, வீட்டிலும் வெளியிலும் பழக்கமில்லாத வேற்றுமொழியை, அந்த மொழியே தாய்மொழியில்லாத ஒர் ஆசிரியரைக் கொண்டு பிஞ்சு நெஞ்சங்களில், மூளைகளில், கைகளில் திணிக்கும் கட்டாயம் இந்நாள் சுதந்தர இந்தியாவில் நடைமுறையாக்கப்பட்டிருக்கிறது. கட்டாயமாக்கப்படும் வேற்று மொழிப் பயிற்றுக்கல்வி, பிள்ளைகளின் இயல்பான படைப்புத்திறன், கூரிய அறிவு, சிந்தனையாற்றல் என்ற ஊற்றுக்கண்களில், வெளிப்பட வழியில்லாமலேயே மூடிவிடுகின்றன. தாய், தாய்மொழி, தாய்நாடு என்று எந்த உணர்வும் இல்லாமல், பொருள், பொருள் என்ற இலக்கிலேயே தாங்கள் பெற்றிருக்கும் அறிவியல் திறமைகளை அடகு வைப்பதற்குத் துணிகிறார்கள்.

மாறாக, அடிப்படையில் தாய்மொழியறிவும், இயல்பான திறமைகளின் உந்துதல்களும் தடைபடாமல் வெளிப்படும்போது, உலகை, பல நுட்பங்களை, மேலும் பல்வேறு மொழிகளைக் கற்றறியும் திறமையும் சிறப்பாகவே கூடும். இதனால், இந்நாட்களில் இன்னும் எழுத்தறிவே பெற்றிராமல் இருக்கும் அடித்தளப் பெற்றோரின் மக்களும், எளிதில் அடிப்படைக் கல்வியில் தேர்ச்சி பெற்று, வேற்று மொழியில் அறிவியல், தொழில் நுட்பக் கல்வியில் பயிற்சி பெறவும் முன்னேற்றமடைவர். பின் தங்கிய வகுப்புக் குழந்தைகளுக்குச் சிறப்புப் பயிற்சிகள் கொடுக்க, ஆசிரியர்-மாணாக்கர்-என்ற விகிதம், குறைவானதாக இருக்க வேண்டும். பாடச்சுமை, புத்தகங்கள், சோறு, தண்ணீர்ச் சுமைகள் என்று பிஞ்சுகளை முதுகு வளையும், கை இழுக்கும் சுமைகளிலிருந்து விடுபடச் செய்வது கட்டாயமானதொரு திருத்தம் மழலைப் பள்ளிகளில், ஐந்து வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளிகளில், தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது, புத்தகச்சுமைகள் தேவையில்லாமலிருக்கும். ஒவ்வொரு பள்ளியிலும், தண்ணீர்- குடிநீர் குழந்தைகளுக்குக் கிடைக்கச் செய்வதும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

இந்தப் பள்ளிகள் ஒரே மாதிரியான பாடங்கள், பயிற்சிகள் என்று அந்தந்த இடத்தின் தேவைக்கேற்ப நிறுவப்படும்போது, எந்தப் பெற்றோரும் எந்தப் பள்ளியிலும் குழந்தைகளைச் சேர்க்கலாம். எனவே, வீட்டுக்கு அருகாமையிலுள்ள பள்ளியே குழந்தைக்கு உரியதாக்கப்படும். காலை நேரத்தில், சாலைகளில், கோழிக்குஞ்சுகளைப்போல் குழந்தைகளையும், புத்தகப்பை, தண்ணீர்குப்பிகள் தொங்கும் வண்டிகளும் நெருங்கும் அபாயங்களும் தவிர்க்கப்படலாம்.

பெண் மக்களைத் தரம் தாழ்த்தும், உடலுழைப்பைக் கேவலப்படுத்தும், தொழில், சாதி என்று பிரிவும் தரந்தாழ்த்துதலும் கற்பிக்கும் பாடப்புத்தகங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

இறையுணர்வு, ஒரு மனிதரின் நல்லொழுக்கத்துக்கு அடிநாதமாக இருந்து வருகிறது. இந்த உணர்வு, ஒரு தனிச் சமயச் சொத்தாகக் கற்பிக்கப்படாமல், உலகனைத்தும் பரந்த உயிர்களிடத்துக் காட்டும் நேயமாக, சக மனிதரை எக்காலத்தும் நேசிக்கும் மனிதாபிமானமாக, உயர் பண்புகளை மனதில் பதிய வைக்கும் வாசகங்கள் - பல சமயங்களில் இருந்தும் எடுத்துக் கோக்கப்பட்ட மணிக்கோவைகள், இன்ன சமயம் என்ற வண்ண பேதம் கற்பிக்கப்படாத நிலையில் ஒழுக்கக் கல்விப் பாடங்களாக அமைய வேண்டும். இந்த ஒழுக்கமே வருங்காலக் குடிமக்களின் வாழ்வுக்கு ஆதார சுருதியாக அமையும்.

பெற்றோரும், ஆசிரியருமே வருங்கால சந்ததியினரின் முன்மாதிரிகளாக இளம் மனங்களில் பதிந்து போகின்றனர். எனவே, இளம் பருவத்திலும், பின்னர் எழுச்சிமிகுந்ததாக வளர்ச்சி பெறும் குமரப்பருவத்திலும், பெற்றோர், ஆசிரியர் காட்டும் அன்பும், நட்பும், குணநலன்களுமே பிள்ளைகளின் சீரான மலர்ச்சிக்கு உத்தரவாதமாகத் திகழ்கின்றன. சண்டையிடும் பெற்றோரும், ஒருவரை மற்றவர் ஏமாற்றும், பொய் சொல்லும் வழக்கங்களும், மது, சூது, போன்ற தீமைகளும், நல்ல பிள்ளைகளை உருவாக்க முடியாத தடைக்கற்கள் எனலாம். சமூகக் கொடுமைகளான தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், வன்முறைகள் ஆகியவை எந்தக் குடும்பத்திலும் தலைகாட்டலாகாது. ஆசிரியர், புகைபிடிப்பதும், மதுவருந்துவதும், வசைச் சொற்கள் பொழிவதும், பிள்ளைகளையும் அதே வழிக்கு இட்டுச் செல்லும்.

3. அடுத்து, ஒரு குடியரசு நாட்டின் மக்களின் அறிவு வளர்ச்சியிலும், உருவாக்கத்திலும் மக்கள் தொடர்பு சாதனங்களாகிய பத்திரிகைகள், வானொலி, சினிமா, சின்னத்திரை ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. சுதந்தரம் பெற்று ஐம்பதாண்டுகளுக்கு மேலாகியும் இந்நாட்டு மக்களிடம் இருக்கும் எழுத்தறியாமையை முற்றிலுமாக ஒழித்துவிட முடியவில்லை. எனவே வானொலிக்கு மக்களை மூலைமுடுக்கெல்லாம் தேடிச் சென்று தொடர்பு கொள்ளும் சாதனம் என்பதில் ஒரு சிறப்பிடம் உண்டு. ஆனால், பொழுதுபோக்கு, களிப்பூட்டல் என்ற அம்சத்தை அதிகமாகப் பெற்றிருக்கும் காட்சி ஊடகங்கள் மக்களிடையே வானொலியைக் காட்டிலும் அதிக செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. இந்நாட்களில் தொலைக்காட்சிப் பெட்டி, அன்றாட உணவுக்கும் குடிநீருக்கும் உத்தரவாதம் இல்லாத குடிசை வாழ்மக்களிடையேகூட முன்னுரிமை பெற்றிருக்கிறது. வான் வழி வரும் எந்தத் தாக்கத்துக்கும் அரசு கட்டுப்பாடு எல்லைகளை வகுக்க முடியாது. எனவே விளம்பரம் என்ற கருப்புக்கட்டியைக் கவரும் ஈக்கள் போல், போட்டி போட்டுக் கொண்டு மக்களின் மனதைக் கீழ்முகமாக இழுக்கும் நிகழ்ச்சிகளும் காட்சிகளும் மடலவிழ்கின்றன.

இந்த ஆக்கிரமிப்பில், குஞ்சு குழந்தைகள், ஆண் பெண், முதியவர் ஈறாக அனைத்து வர்க்கத்தினரும் அடக்குகின்றனர் என்றால் மிகையில்லை.

எழுதுகோலை ஆயுதமாகக் கொண்டு இயங்கும் படைப்பாளரும், சிந்தனையாளரும், சமுதாயத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகின்றனர். ஒரு பள்ளி ஆசிரியர், வகுப்பறையில் மட்டுமே செயல்படுகிறார். ஆனால் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாகத் தம் படைப்பாற்றலை, சிந்தனை வண்மையை வெளிப்படுத்தும் இலக்கிய ஆசிரியர், பரந்த வெளி உலகிலும் தம் செல்வாக்கைப் பதிக்கிறார். இவர்கள், பொருள், புகழ் என்ற நோக்கில் சோரம் போகும் தீமை இந்நாள் சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது,

இந்நாள், தகவல்-அறிவுக்களஞ்சியமாக, பலநோக்குப் பயன்பாட்டுச் சாதனமாக கூடிவிட்ட கணினியும்கூட, தொலைக்காட்சிபோல், வெறும் களிப்பூட்டும் பண்பாட்டுச் சீரழிவுக்கான சாதனமாக மாறிவிடுவதும் கூடத் தவிர்க்க முடியாதது என்று அண்மையில் ஒர் அன்பர் குறிப்பிட்டார். பெண்களையும் சிறார்களையும் பயன்படுத்தி, இந்த வணிக அமைப்புகள், நவீன விளம்பர உத்திகளாக, கட்டறுத்து விடப்படும் பாலியல் விகாரங்களையும், வன்முறைத் தாக்குதல்களையுமே ஒளிபரப்புகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நுகர்பொருள் வாணிபத்தை மிகச் செல்வாக்குடன் அடிப்படைத் தேவைகளே நிறைவேறாத மக்களின் மீது திணிக்கின்றன.

இந்திய இலக்கியம் - குறிப்பாகத் தமிழ் இலக்கியம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டதென்றாலும், சென்ற நூற்றாண்டுகளில்தான் அது ஜனநாயகத்தன்மை கொண்டதாக, சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மந்திரங்களுக்கேற்ப கனவு கானும் படைப்புகள் மலர்ந்திருக்கின்றன. என்றாலும், கொள்கையற்ற அரசியல் எல்லாப் பிற துறைகளிலும் புகுந்து குலைத்திருப்பது போல், எழுத்துத் துறையையும் வணிகமயமாக்கி, அதன் அடிநாதத்தைக் குலைத்து வருகிறது.

கவிஞருக்கும் கலைஞருக்கும் தன்மானம் உண்டு. முடிமன்னரானாலும் உண்மைக்குப்புறமாக எழுதுகோலை வளைக்கமாட்டார். இந்நாட்களில், எழுது கோல்கள், அவற்றின் உரிமையாளரை, சமுதாயத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் மனோபாவத்திலிருந்து பிரித்து, ‘தான்’ என்ற உயர்கொம்பில் ஏற்றி வைப்பது ஒன்றே குறியாக, அகமும் புறமும் ஒன்றாத வெறும் தந்திர வித்தைகளுக்கு இரையாகின்றன.

இந்நாள் மண், நீர், காற்று, ஆகாயம், வெற்றிடம் என்று ஐம்புலன்களும் மாசுபடுகின்றன. பெண் கருக்கள் மனித இனத்தில் அழிக்கப் பெறுகின்றன.

வரும் நூற்றாண்டில் இந்தத் தீமைகளுக்கான வேர்களைக் கெல்லி எறிவதே எம் கடமையாக இருக்கிறது. எழுதுகோல்களைப் பிடிப்பவர்கள், புனைகதையோ, காவியமோ, கவிதையோ, வானொலி நிகழ்ச்சியோ, திரைக் காட்சிக்கான சித்திரங்களோ எதுவாயினும், நழுவி விழும் ஆதார சுருதியைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும். மானுடத்தைக் கீழ் முகமாக்கும், பூமியைச் சீர்குலைக்கும், காற்றை மாசுபடுத்தி, வெற்றிடத்தைக் கரும்புகையாக்கும் அழுக்கை உமிழமாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

- புத்தாயிரம் கருத்தரங்கு
சென்னை.