௮. அரசியல்சீர் வாய்ந்தார் (3)
தமிழாய்ந்த தமிழன்தான்
தமிழ்நாட்டின் முதலமைச்சாய்
வருதல் வேண்டும்.
தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த்
தமிழ்நாட்டில் வாராது
தடுத்தல் வேண்டும்.
நமை வளர்ப்பான் நந்தமிழை
வளர்ப்பவனாம்! தமிழ் அல்லால்
நம்முன் னேற்றம்
அமையாது, சிறிதும் இதில்
ஐயமில்லை, ஐயமில்லை
அறிந்து கொண்டோம். 36
தமிழ் எங்கே, தமிழின் நிலை
என்னஎனத் தாமறியாத்
தமிழர் என்பார்
தமிழர் நலம் காப்பவராய்
அரசியலின் சார்பாக
வரமு யன்றால்
இமைப்போதும் தாழ்க்காமல்
எவ்வகையும் கிளர்ந்தெழுதல்
வேண்டும்! நம்மில்
அமைவாக ஆயிரம்பேர்
அறிஞர் உள்ளார் எனமுரசம்
ஆர்த்துச் சொல்வோம். 37
நகராட்சி சிற்றூரின்
நல்லாட்சி மாவட்ட
ஆட்சி என்று
புகல்கின்ற பல ஆட்சிக்
கழகங்கள் எவற்றினுமே
புகநி னைப்பார்
தகுபுலமை குறிக்கின்ற
சான்றுதர வேண்டுமெனச்
சட்டம் செய்தால்
அகலுமன்றோ தமிழ்நாட்டின்
அல்லலெலாம்? அல்லாக்கால்
அமைதி யுண்டோ ? 38
பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/22
Appearance
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது