௧௩. அறத்தலைவர்
அறத்தலைவர் செயத்தக்க
அறமிந்நாள் தமிழ்காத்தல்
அன்றோ? தங்கள்
நிறத்தியலை நிலைநிறுத்தித்
தமிழ் அழிக்க நினைப்பாரின்
செயலை, நீவிர்
மறத்தலினும் கேடுண்டோ ?
மடத்திலுறு பெரும்பொருளநச்
செந்தமிழ், சீர்
பெறச்செலவு செய்தலினும்
பெறத்தக்க பெரும்பேறு
பிறிது முண்டோ ! 61
கல்லாரின் நெஞ்சத்தே
கடவுள்நிலான் என்னுமொழி
கண்டு ளீரே
நில்லாத கடவுளைநீர்
நிலைத்திருக்கும் படிச்செய்யத்
தமிழர் நாட்டில்
எல்லாரும் தமிழ்கற்க
என்செய்தீர்? செயநினைத்தால்
இயலா தேயோ?
தொல்லையெலாம் போமாறு
தூய்மையெலாம் ஆமாறு
தொண்டு செய்வீர்! 62
செந்தமிழிற் புதுப்புது நூல்
விளைப்பதற்குச் செல்வத்தைச்
செலவு செய்தால்
நந்தமிழ்நா டுயராதோ!
நலிவெல்லாம் தீராவோ!
பொருளை அள்ளித்
தந்தாரே முன்னாளில்
தமிழ்நாட்டார் உம்மிடத்தில்,
தலைமை யேற்று
வந்தீரே அரசியல்சீர்
வாய்ந்தாரை வசப்படுத்தி
வாழ்வ தற்கோ? 63