கபோதிபுரக்காதல்/பக்கம் 34-43
இவனுடைய சேட்டைகள் எதுவும், சாரதாவின் புருஷனுக்குத் தெரியாது. சாரதா உணர்ந்து கொள்வதற்கே, சில நாட்கள் பிடித்தன. உணர்ந்த பிறகு திகைத்தாள். விஷயத்தை வெளியில் சொல்லவோ பயமாக இருந்தது. ‘மகா யோக்கியஸ்திதான் போடி! கலியாணமான உடனே, எவனையோ கட்டி முத்தமிட்டாய். பாவம் அந்தக் காரியஸ்தன் உனக்காக எவ்வளவோ பாடுபட்டு கணவனுடன் சேர்த்து வைத்தான். இப்போது அவன்மீது பழி போடுகிறாய்” என்று தன்னையே தூற்றுவார்கள் என்று சாரதா எண்ணினாள். அதுமட்டுமா! காரியஸ்தனைக் கோபித்துக்கொண்டால், தன் கணவனிடம் ஏதாவது கூறி, அவர் மனத்தைக் கெடுத்துவிடுவான் என்று பயந்தாள். இந்தப் பயத்தை சாரதாவின் தாய் அதிகமாக வளர்த்துவிட்டாள். எனவே, கருப்பையாவின் சேட்டையை முளையிலேயே கிள்ளிவிட சாரதாவால் முடியவில்லை. கருப்பையா பாடு கொண்டாட்டமாகிவிட்டது. சரி! சரியான குட்டி கிடைத்துவிட்டாள் என்று அவன் தீர்மானித்துவிட்டான்.
அவனுடைய வெறி வினாடிக்கு வினாடி வளர்ந்தது; “சாரதா நம்மைக் கவனிக்க மாட்டாயே, தயவு இல்லையே” என்று கேட்பான், சிரித்துக்கொண்டே. “என்ன வேண்டும் கருப்பையா சொல்லேன்” என்பாள் சாரதா. கருப்பையா பெருமூச்சுவிடுவான். “கொஞ்சம் தாகந்தீர, உன் கையால் தண்ணீர் கொடம்மா” என்பான். ராதா விசாரத்துடன் நீர் தருவாள். “ஏனம்மா முகம் வாட்டமாக இருக்கிறது” என்பான். “ஒன்றுமில்லையே” என்று கூறுவாள் ராதா. “அம்மா! நீ முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டால், என் மனம் படாதபாடு படுகிறது” என்று தன் அக்கறையைக் காட்டுவான் காரியஸ்தன்.
“உன்னுடைய சிவப்பு மேனிக்கு அந்த நீலப்புடவை கட்டிக்கொண்டு, வெள்ளை ஜாக்கெட் போட்டுக்கொண்டு, ஜவ்வாது பொட்டு வைத்து நிற்கும்போது, அசல் ரவிவர்மா ஓவியம் போல இருக்கிறது என் கண்களுக்கு” என்பான்.
இவ்விதமாக, கருப்பையா, மிக விரைவில் முன்னேறிக்கொண்டே போனான். ஆனால் ஜாடை செய்து, சாரதாவைப் பிடிக்க அதிக நாட்களாகும் என்பதைத் தெரிந்துகொண்டு, வாய் திறந்து கேட்டுவிடுவதே மேல் என எண்ணினான் அதற்கும் ஒரு சமயம் வாய்த்தது.
முதலாளி பக்கத்து ஊருக்குப் போனார். ஒரு பாகப் பிரிவினை மத்தியஸ்த்துக்காக, வர இரண்டு நாட்கள் பிடிக்கும்; அந்த இரண்டு நாட்களில் காரியத்தை எப்படியாவது முடித்துவிடத் தீர்மானித்துவிட்டான், கருப்பையா.
மாலை நேரம். தோட்டத்திலே சாரதா பூப்பறித்துக்கொண்டிருந்த சமயத்தில் கருப்பையா அங்குப் போனான். சாரதாவுடன் பேச ஆரம்பித்தான். சற்றுத் தைரியமாகவே, “சாரதா நீ நல்ல சாமர்த்தியசாலி.”
“நானா! உம்! என்ன சாமர்த்தியம் கருப்பையா என் சாமர்த்தியம் தெரியாதா, எட்டு மாதம் சீந்துவாரற்றுக் கிடந்தவள் தானே.”
“சீந்துவாரற்றா! அப்படிச் சொல்லாதே, உன் அழகைக் கண்டால் அண்ட சராசரத்தில் யார்தான் சொக்கிவிட மாட்டார்கள்.”
“போ; கருப்பையா, உனக்கு எப்போதும் கேலிதான்”
“கேலியா இது? நீ கண்ணாடி எடுத்து உன் முகத்தைக் கண்டதில்லையா?”
“சரி! சரி! நாடகம்போல் நடக்கிறதே”
“ஆமாம்! நாடகந்தான். காதல் நாடகம்.”
“இது என்ன விபரீதப் பேச்சு கருப்பையா, யார் காதிலாவது விழப்போகிறது.”“நான் சற்று முன்ஜாக்கிரதை உள்ளவன். தோட்டக்கார முனியனை, நாலு மணிக்கே அனுப்பிவிட்டேன் கடைக்கு.”
“நீ ஏதோ தப்பு எண்ணம் கொண்டிருக்கிறாய், கருப்பையா தயவுசெய்து அதனை விட்டுவிடு. நான் அப்படிப்பட்டவளல்ல”
“சாரதா! நான் இனி மறைக்கப் போவதில்லை உன்னை எப்படியாவது கூடவேண்டுமென நான் தவங்கிடந்து வந்தேன். இன்றுதான் தக்க சமயம்.” என்று கூறிக்கொண்டே சாரதாவின் கரத்தைப் பிடித்துக் கொண்டான்.
சாரதா திமிறினாள். பூக்கூடை கீழே விழுந்தது. மலர்கள் மண்மீது சிதறின. சாரதாவின் கண்களிலே நீர் பெருகிற்று, கருப்பையாவின் கரங்கள் அவள் உடலைக் கட்டிப் பிடித்துக்கொண்டன. அவனுடைய உதடுகள், அவள் கன்னத்தில் பதிந்தன. அந்த முத்தங்களின் ஓசை கேட்டு, பறவைகள் பறந்தன. சாரதா, கருப்பையாவிடம் சிக்கி விட்டாள்.
“சாரதா, ஜென்மம் இப்போதுதான் சாபல்யமாயிற்று. அடி பைத்தியமே; ஏன் இவ்வளவு நடுங்குகிறாய், பயப்படாதே. இந்தக் கருப்பையாவைச் சாமான்யமாக எண்ணாதே. நான், இந்த இன்பத்துக்காக எவ்வளவு பாடுபட்டேன். எத்தனை நாள் காத்துக்கொண்டிருந்தேன் தெரியுமா? தேனே நான் இதற்காகத்தானே உன்னை தாய் வீட்டிலிருந்து இங்கு வரும்படிச் செய்தேன்” என்று களிப்பாய், கருப்பையா கூறினான். சாரதாவின் ஆடையைப்பற்றி இழுத்தான். கன்னங்களைக் கிள்ளினான். “ஒரே ஒரு முத்தம் இன்னும் ஒன்று– ஆம்? இப்படி, பலே பேஷ்” என்று கொஞ்சினான்.
சாரதா மயக்கத்தில் ஈடுபட்டவள்போல, அவன் இஷ்டப்படி நடந்தாள். அன்று தோட்டத்தில் சாரதா தனது மூன்றாவது பிறப்பு பெற்றாள்.அவளுடைய கன்னிப்பருவம் காதலைக் கண்டது! அது கருவிலேயே மாண்டது, அவளுடைய இரண்டாம் பிறப்பு கணவனுக்கு மனைவியாக வாழ்க்கையில் ரசமின்றி இயந்திரம் போல இருந்தது. அன்று தோட்டத்தில் சாகசக்கார கருப்பையாவிடம் சிக்கியதால் அவள் மூன்றாம் பிறப்பு வெளிக்குக் கற்புக்கரசியாகவும் மறைவில் பிறருக்குப் பெண்டாகவும் இருக்கும் வாழ்வைப் பெற்றாள்.
கணவனுக்கும் அவளுக்கும் மணமாயிற்று என்பதைத் தவிர வேறு பிணைப்பு இல்லை. அவன், அவள் கழுத்தில் தாலியைக் கடடினானே தவிர மனத்திலே அன்பு என்ற முத்திரையைப் பதியவைக்கவில்லை. எனவே, அவள் கணவனிடம் கலந்து வாழ்வதைத் தனது கடமை, உலகம் ஏற்படுத்திய கட்டு எனக்கொண்டாளே தவிர, அதுவே தன் இன்பம் என்று கொள்ளவில்லை.
பரந்தாமனை மணந்திருந்தால், அவளைப் பதைக்கப்பதைக்க வெட்டினாலும் பாழும்கிணற்றில் தள்ளினாலும் பயப்பட மாட்டாள். பிறனுடைய மிரட்டலுக்குக் காலடியில் கோடிகோடியாகப் பணத்தைக் குவித்தாலும் நிமிர்ந்து நோக்கியிருக்க மாட்டாள் மற்றொருவனை. அவள் காதற்செல்வத்தைப் பெறவில்லை. இவள் இன்பக்கேணியில் புகவில்லை. எனவே அவள் வாழ்க்கையில் இவனிடம் எளிதில் வழுக்கி விழுந்தாள்.
உலகம் தன் குற்றத்தைத் தெரிந்துகொள்ளாதிருக்கும் மட்டும் கவலை இல்லை என்று எண்ணினாள்.
‘இனி, இந்த உலகில், ஜோராக வாழவேண்டும். சொகுசாக உடுத்தி, நல்ல நல்ல நகைகள் போட்டுக்கொண்டு, கணவர் கொண்டாட ஆனந்தமாக வாழவேண்டும். அதற்கு காரியஸ்தன் தயவிருந்தால் கணவனைச் சரிப்படுத்த முடியும். காரியஸ்தனோ தன் காலடியில் கிடக்கிறான். இனி தனக்கென்ன குறை! என்று எண்ணினாள் சாரதா. சாரதா புது உருவெடுத்தாள் உடையிலே. தேடித்தேடி அணிந்தாள். நகைகள் புதிதாகப் போட்டாள். ஒரு நாளைக்குப் பத்துமுறை முகத்தை அலம்புவாள், நிமிடத்திற்கொருமுறை கண்ணாடி முன் நிற்பாள். வலியச்சென்று புருஷனிடம் கொஞ்சுவாள். அவள் சரசம்புரியத் தொடங்கினாள். கிழக்கணவன் அவள் வலையில் வீழ்ந்தான். கேட்டதைத் தந்தான். சாரதாவே கண்கண்ட தெய்வம் என்றான். ஆனால் அவன் அறியான் பாபம், அவள் கற்பை இழந்த சிறுக்கியானாள் என்பதை.
மயிலும் மாதரும் தமது அழகைப் பிறர் காணவேண்டுமென்ற எண்ணத்துடன் இருப்பதாகக் கவிகள் கூறுவர். மயிலின் தோகை அவ்வளவு வனப்புடன் இருக்கும்போது அது பிறர் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து கிடப்பின் பயன் என்ன? கண்டோர் மனத்தில் களிப்பை உண்டாக்கும் ஒப்பற்ற பணியை அழகு செய்கிறது. அந்த அழகு, அன்றலர்ந்த பூவிலுண்டு! அந்தி வானத்திலுண்டு. அதரத்தில் தவழும் அலங்காரப் புன்சிரிப்பிலுண்டு, கிளியின் கொஞ்சுதலில், குயிலின் கூவுதலில், மயிலின் நடனத்தில், மாதரின் சாயலில் உண்டு! சிற்பத்தில் உண்டு. ஆனால் அதன் சிறப்பை முழுதும் காணவல்லார் மிகச்சிலரே. ஆனால் மாதரின் எழில் அத்தகையதன்று. அது கண்டவரை உடனே களிக்கவைக்கும் தன்மையது. காற்று வீசும்போது குளிர்ச்சி தருகிறேன் பாரீர் எனக் கூவுமா! அதன் செயல் நமக்கு அந்த இயற்கையான எண்ணத்தை உண்டாக்கும். அதுபோலவே, எந்த மாதும், ‘என் அழகைக் கண்டாயோ!’ எனக் கேளார், ஆனால் தம் அழகைப் பிறர் கண்டனர், களித்தனர் என்பது அவர்களுக்குத் தெரியும். அதிலே பூரிப்பும் பெருமையும் அடையாத பெண்கள் மிகமிகச் சொற்பம்.
ஆனால், அழகு, களிப்பதற்கு எங்ஙனம் உதவுகிறதோ அதைப்போலவே பிறரை அழிக்கவும் செய்கிறது. எனவேதான், புலவர்கள், மாதர்களின் விழியிலே அமிர்தமும் உண்டு. நஞ்சும் உண்டு என்றனர்.
இசைந்த உள்ளத்தை எடுத்துக்காட்டும் விழி, அமிர்தத்தை அள்ளி அள்ளி ஊட்டும்! இல்லை, ‘போடா! மூடா! எட்ட நில்!’ – என்ற இருதயத்துக்கு ஈட்டி போன்ற பதிலைத் தரும் விழிகள் நஞ்சுதரும்! ஆம்! அமிர்தம் உண்டு ஆனந்தப்பட்டவர்களுமுண்டு; நஞ்சு கண்டு நலிந்தவர்களுமுண்டு! ஒரே பொருள் இருவகையான செயலுக்குப் பயன்படுகிறது! ஆனால் சாரதாவின் கண்கள் அமிர்தத்தையும் ஊட்டவில்லை, நஞ்சையும் தரவில்லை! இயற்கையாக எழும் எண்ணத்தை அடக்கி, மடக்கி, மாற்றிக்காட்ட அவளது கண்கள் கற்றுக்கொண்டன!
உண்மையான அன்பு கனிந்திருந்தால், அக்காரிகை தன்னைக் காதலன் நோக்கும்போது தலைகுனிந்து நிற்பாள். பளிங்குப் பேழையின் மூடியை மெதுவாகத் திறப்பாள். கண் சரேலெனப் பாயும் காதலன்மீது! நொடியில் மூடிக்கொள்ளும்! இடையே ஒரு புன்சிரிப்பு, மின்னலெனத் தோன்றி மறையும்!
காதலற்று, வேறு எதனாலேனும், பொருள் காரணமாகவோ, வேறு போக்கு இல்லை என்ற காரணத்தாலோ, கட்டுப்பட்ட காரிகை, தன்னுடன் பிணைக்கப்பட்டுள்ளவன் தன்னைக் காணும்போது, உள்ளத்தில் களிப்பு இருப்பினும் இல்லாது போயினும், பற்களை வெளியே காட்டியும் அவன் அப்புறம் சென்றதும் முகத்தில் மெருகற்றுச் சோர்வதும் உண்டு! தானாக மலர்ந்த மலருக்கும் அரும்பை எடுத்து அகல விரித்ததற்கும் உள்ள வித்தியாசம் இங்கும் உண்டு!
சாரதா மலராத மலர்! அரும்பு! முள்வேலியில் கிடந்தது. கருப்பையா அதனை அகல விரித்தான்! அவன் ஆனந்தமடைந்தான். ராதா ஆனந்த மடைந்ததாக நடித்தாள்! அந்நடிப்பே அவனுக்கு நல்லதொரு விருந்தாயிற்று! நடிப்பும் ஒரு கலைதானே!
கருப்பையாவுக்கும் சாரதாவுக்கும் கள்ள நட்பு பெருகி வருவதைக் கணவனறியான். நல்ல தோட்டம், அழகான மாடு, கன்று இருப்பது கண்டும் பெட்டியைத் திறந்ததும் பணம் நிரம்பி இருப்பதைப் பார்த்தும் பெருமை அடைவதைப்போலவே தன் அழகிய மனைவி சாரதாவைக் கண்டு பெருமையடைந்தான்.
“என் சாரதா குளித்துவிட்டு, கூந்தலைக் கோதி முடிக்காது கொண்டையாக்கி, குங்குமப் பொட்டிட்டு, கோவில் போகும்போது லட்சுமியோ, பார்வதியோ என்று தோன்றுகிறது. பூஜா பலன் இல்லாமலா எனக்கு சாரதா கிடைத்தாள்” என்று அவள் கணவன் எண்ணினான்.
அந்த லட்சுமி தனது செல்வத்தை, இன்பத்தை, கருப்பையாவுக்குத் தருவதை அவன் அறியான். அறியவொட்டாது அபின் தடுத்தது. நாளுக்கு நாள் அபினின் அளவும் அதிகரித்தது. கள்ள நட்பும் பெருகிவந்தது. இவ்வளவு சேதியும் பரந்தாமன் செவி புகவில்லை.
அவன் செவியில்,
“காயமே இது பொய்யடா நல்ல காற்றடைத்த பையடா” என, கருணானந்த யோகீசுரர் செய்துவந்த கானமே புகுந்தது. பரந்தாமன் ஒரு பாலசந்நியாசியாகக் காலந்தள்ளி வந்தான். காதலைப் பெறமுடியவில்லை. கருத்திலிருந்து சாரதாவை அகற்ற முடியவில்லை. அன்று மருண்டு, ஊரை விட்டோடி, பாழும் சத்திரத்தில் படுத்துப் புரண்டு, கள்ளரைக் கண்டு கலங்கி, கடுக நடந்து தோப்புக்குள் புகுந்து துயின்ற நாள் தொட்டு பரந்தாமன் ஊர் ஊராக அலைந்தான்! காவிகட்டியவர்களை எல்லாம் அடுத்தான்! “சாந்தி வேண்டும் சுவாமிகளே! உலக மாயையினின்றும் நான் விடுபட அருளும் என் ஐயனே! உண்மை நெறி எதுவெனக் கூறும் யோகியே!” என்று கேட்டான் பலரிடம்.
கருணானந்த யோகீசுரர், தமது சீடராக இருப்பின், “சின்னாட்களில் கைலை வாழ் ஐயனின் காட்சியும் காட்டுவோம்” எனக் கூறினார். பரந்தாமன், சிகை வளர்த்தான். சிவந்த ஆடை அணிந்தான். திருவோட்டைக் கையிலெடுத்தான்.
“சங்கர சங்கர சம்போ, சிவ சங்கர, சங்கர சம்போ” என்று கீதம் பாடியபடி கிராமங்கிராமமாக யோகீசுரருடன் சென்றான்.
“சாரதா! ஒரு விசேஷம்!”
“என்ன விசேஷம்?”
“நம் வீட்டுக்கு விருந்தாளிகள் வருகின்றனர் நாளைக்கு!”
“யார் வருகிறார்கள்!”
“சென்னையிலிருந்து எனது உறவினர் ஒருவர் வருகிறார். சிங்காரவேலர் என்பது அவர் பெயர். அவருடன் கோகிலம் என்ற அவர் தங்கை வருகிறாள். அவர்கள் மகா நாசுக்கான பேர் வழிகள். பெரிய ஜமீன் குடும்பம்!”
“வரட்டுமே, எனக்கும் பொழுது போக்காக இருக்கும்”
“கோகிலத்தை நீ கண்டால் உடனே உன் சிநேகிதியாக்கிக் கொள்வாய். நன்றாகப் படித்தவள் கோகிலம்.”
“படித்தவர்களா! சரி சரி! எனக்கு அல்லியரசானிமாலை தவிர வேறு என்ன தெரியும்? என்னைப் பார்த்ததும் அந்தம்மாள், நான் ஒரு பட்டிக்காட்டுப் பெண் என்று கூறிவிடுவார்கள்.”
“கட்டிக் கரும்பே நீயா, பட்டிக்காட்டுப் பெண்–” என்று கூறிக்கொண்டே ராதாவின் ரம்மியமான கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான் கணவன்.“இதுதானே உங்கள் வழக்கம்! இது என்ன தவடையா ரப்பர் பந்தா, இப்படிப் பிடித்துக் கிள்ளுவதற்கு. வரட்டும் அம்மா, சொல்லுகிறேன், நீங்கள் செய்த வேலையை....” என்று கொஞ்சினாள் ராதா.
“அடடா! பாபம் கன்னம் சிவந்துவிட்டதே! சாரதா, கிள்ளினதற்கே இப்படிச் சிவந்துவிட்டதே...”
“போதும் நிறுத்துங்கள் விளையாட்டை. நான் பூப்பறிக்கப்போக வேண்டும்” என்று கூறிவிட்டு, சாரதா, தன் கணவன் தன்னிடம் வசியப்பட்டு இருப்பதை எண்ணிப் பெருமை அடைந்தபடியே தோட்டத்துக்குச் சென்றாள். அங்குக் கருப்பையா காத்துக்கொண்டிருந்தான்.
“ஏது ரொம்ப குஷிதான் போலிருக்கு!” என்று கூறிக்கொண்டே, ராதாவின் கரங்களைப் பிடித்து இழுத்தான்.
“இது என்ன வம்பு! விடு கருப்பையா, அவர் வந்துவிட்டால் என்ன செய்வது?” என்று கூறிக் கையை இழுத்துக்கொண்டாள், அந்த வேகத்தில் வளையல் உடைந்து கீறிக்கொண்டதால், பொன்னிற மேனியில் செந்நிற இரத்தத் துளியும் வந்தது.
“பார்! நீ செய்த வேலையை” என்று கரத்தைக் காட்டினாள்.
“சூ! மந்திரக்காளி! ஓடிப்போ!” என்று கூறிக்கொண்டே, கருப்பையா, அந்தக் கரத்திற்கு முத்தமிட்டான். அவன் அறிந்த மந்திரம் அது!
“ஒரு சங்கதி கருப்பையா! நாளைக்கு விருந்தாளிகள் வருகிறார்கள். நாம் சற்று ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். யாரோ ஜமீன்தாராம்; அவர் தங்கையாம். இருவரும் வருகிறார்களாம்” என்று எச்சரித்தாள்.
அன்றிரவு ராதாவுக்கு நாளைக்கு எந்தக் கலர் புடவை உடுத்திக்கொண்டால் அழகாக இருக்கும். கார்டு கலர்ச் சேலையா, ரிப்பர் பார்டர் சேலையா, மயில் கழுத்து கலரா, மாதுளம் பழநிறச் சேலையா. ஜவ்வாது இருக்கிறதா, தீர்ந்து விட்டதா என்ற யோசனைதான்.
மாதுளம்பழ நிறச்சேலை கட்டிக்கொண்டால்தான் நன்றாக இருக்கும் என முடிவு செய்தாள். உடனே முகம் மாறிற்று. ஆம்! முதன்முதலில் பரந்தாமனைக் காணும்போது மாதுளம்பழ நிறச்சேலைதான் கட்டிக்கொண்டிருந்தாள் சாரதா!
பழைய நினைவுகள், தோணி ஓட்டையில் நீர் புகுவதுபோல விரைவில் புகுந்தன. தோணி கடலில் அமிழ்வதைப்போல அவள் துக்கத்தில் ஆழ்ந்தாள். தலையணையில் நீர் கண்கள் குளமாயின! அவளது வாசனை திரவியப் பூச்சுவேலை சேறாகிவிட்டது. சாரதா தனது உண்மைக் காதலை நினைத்து உள்ளம் கசிந்தாள். உறக்கமற்றாள்! மறுநாள் காலை முகவாட்டத்துடன் விருந்தாளிகளை வரவேற்றாள்!
சிங்காரவேலுக்கு, அந்த முகவாட்டமே ஒரு புது மோஸ்தர் அழகாகத் தெரிந்தது. கோகிலம், கத்தரிப் பூக்கலர்ச் சேலைதான் சாரதாவுக்கு ஏற்றது என்று யோசனை கூறினாள். விருந்தாளிகள் வந்த ஒருமணி நேரத்திற்குள் சாரதாவிடம் வருஷக்கணக்கில் பழகினவர்கள்போல நடந்துகொண்டனர். ஒரே பேச்சு! சிரிப்பு!! கோகிலத்தின் குட்டிக் கதைகளும் சிங்காரவேலின் ஹாஸ்யமும் ராதாவுக்குப் புதிது! அவை அவளுக்குப் புதியதோர் உலகைக் காட்டிற்று. அதிலும் அந்த மங்கை புகுந்தாள்!
ஒருமுறை வழிதவறிவிடின் பிறகு எவ்வளவோ வளைவுகளில் புகுந்தாகத்தானே வேண்டும்.
அத்தகைய ஒரு வளைவு! சிங்காரவேலர் – கோகிலா பிரவேசம்!