உள்ளடக்கத்துக்குச் செல்

கபோதிபுரக்காதல்/பக்கம் 44-53

விக்கிமூலம் இலிருந்து


கோகிலா அழகியல்ல! சாரதா அதைத் தெரிந்துகொண்டாள். என்றாலும், கோகிலத்தின் நடை, உடை, பேச்சில் ஒரு தனி வசீகரம் கண்டாள். கோகிலத்தின் கண்கள் சிலமணி நேரங்களில் சாரதா, கருப்பையா நட்பைக் கண்டுவிட்டன. அவள் வாய், ஒரு நொடியில் விஷயத்தைச் சிங்காரவேலருக்குக் கூறிவிட்டது. அவரது மூளை உடனே சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. சிங்காரவேலரும் கோகிலமும் செல்வக்குடி பிறந்தோர். செல்வத்தை வீண் ஆட்டத்தில் செலவிட்டுப் பிறகு, உல்லாசக் கள்ளராயினர்! கோகிலம் தம் கணவன் வீட்டுக்கு வரவே கூடாது எனக் கண்டிப்பாக உத்தரவிட்டுவிட்டவள், சிங்காரவேலர் முதல் மனைவி பிரிந்த துக்கத்தை மறக்கமுடியுமா என்பவர், தாரமிழந்தவர். இருவருமாகப் பழைய ஜமீன் பெருமையைக் கூறி, ஊரை ஏய்ப்பதும் உலவுவதுமாகவே இருந்தனர்.

ராதா, கருப்பையா உறவு நல்லதொரு தங்கச்சுரங்கம் என்று சிங்காரவேலன் எண்ணினான். அவனுடைய சிந்தனையில் சூதுவலை உடனே வளர்ந்தது. கோகிலத்திடம் கலந்தான்.

“பேஷான யோசனை அண்ணா! சரியான யோசனை!”

“நம் யோசனை எது சரியானதாக இராமல்போய்விட்டது கோகிலம்”

“இந்த ‘விடுமுறை’ வியாபார தோரணையில் நமக்கு மிகச்சிறந்தது.”

“ஆமாம்! நாம் போடப்போகும் ‘முதல்தொகை’ மிகச் சொற்பம், கோடாக் நாதனின் கருணையால், நமக்குக் குறைவே ஏற்படாது” என்றான் சிங்காரவேலன்.

கோகிலம் அண்ணனின் சமர்த்தை எண்ணிச் சிரித்தாள்.

அண்ணனும் தங்கையுமாகச் சிரிக்கும் நேரத்திலே, சாரதா, அங்கு வந்தாள். ‘சிரிக்கும் காரணம் என்னவோ?’ என்று கேட்டாள்.

“நாங்களா சிரிப்பதா! ஏன் அண்ணா நாம் எதற்காகச் சிரித்தோம்” – என்று கோகிலம் கேட்டாள். அவள் கேட்ட கேள்வியும், பேசியவிதமும், சாரதாவுக்கும் சிரிப்பை உண்டாக்கிவிட்டது.

மூவருமாக, விழுந்து விழுந்து சிரித்தனர்! “பேதைப்பெண்ணே சிக்கினாயா” என்று சிங்காரவேலன் எண்ணினான்!!

“குட்டி மகாகெட்டிக்காரியாக இருக்கிறாள். எங்கே நமது கண்களுக்கு விஷயம் தெரிந்துவிடுகிறதோவென்று மிக ஜாக்கிரதையாக நடந்துகொள்கிறாள். அவனாவது பரவாயில்லையென்று எண்ணிக்கொண்டு சில சமயங்களில் அவளை நோக்கி சிரிக்கிறான். கொஞ்சுகிறான். இருவரும் கைப்பிடியாகக் கிடைக்கவேண்டும். அது போட்டோ எடுக்கப்படவேண்டும். அதுதான் என் பிளான். சமயம் வாய்க்கவில்லையே” என்றான் சிங்காரவேலன், கோகிலத்திடம்.

“அண்ணா பெண்கள் எப்போதும் நிறைகுடம் போன்றவர்கள். உணர்ச்சியைத் ததும்பவிடமாட்டார்கள் ஆண்கள் அப்படியல்லவே. நிழலசைந்தாலும், அவள் அசைந்தாள் என்று எண்ணிக்கொண்டு அவதிப்படுவார்கள். இது இயற்கைதானே” என்றான் கோகிலம்.

“அது எப்படியாவது தொலையட்டும். நமக்கு வேண்டியது நடக்க வேண்டுமே” என்றான் வேலன்.

“இது ஒரு பிரமாதமா! நாளை மாலை சாரதா, கருப்பையாவின் தோளைப் பிடித்திழுத்து முத்தமிடும் காட்சியை நீங்கள் போட்டோ எடுக்கலாம். அந்தக் காட்சியை நான் டைரக்டு செய்கிறேன்” என்றாள் கோகிலம்.

சிங்காரவேலன் முகம் சற்று சுளித்தது. கோகிலம் சிரித்துக்கொண்டே, “ஏன் அண்ணா, உமக்கும் சாரதா மீது...” என்று கேலி செய்தாள்.

“தூ! தூ! நான் பெண்கள்மீது ஆசை வைப்பதைவிட்டு வருஷங்களாகிவிட்டன” என்றான் வேலன்.

“சரி! நான் நமது சினிமா காட்சிக்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு கோகிலம் கருப்பையாவைத் தேடிக்கொண்டு தோட்டத்துக்குச் சென்றாள்.

“கருப்பையா! நாளைக்கு நாங்கள் ஊருக்குப் போகிறோம்” என்று சம்பாஷணையைத் துவக்கினாள்.

“ஏனம்மா எங்கள் ஊர் பிடிக்கவில்லையோ?” என்று கருப்பையா கேட்டான்.

“பிடிக்கவில்லையா சரிதான் ரொம்ப அதிகமாகப் பிடித்துவிட்டது. இன்னும் கொஞ்சம் போனால் என் அண்ணனுக்குப் பித்தம் பிடித்துவிடும்போல் இருக்கிறது” என்றாள் கோகிலம்.

“நீங்கள் சொல்வது எனக்கொன்றும் விளங்கவில்லையே” என்றான் கருப்பையா.

“கருப்பையா, நீ எங்கும் வெளியே சொல்லக்கூடாது, மிக ரகசியம். வெளியே தெரிந்தால் தலை போய்விடும்” என்றாள் கோகிலம்.

“என்ன இரகசியம்?” என்று கேட்டான் கருப்பையா.

கோகிலம், அவன் காதில் ‘குசுகுசு’வென ஏதோ கூறினாள். கருப்பையாவின் கண்களில் தீப்பொறி பறந்தது.

“அதனால்தான் கருப்பையா, வம்பு வளருவதற்குள் நாங்கள் போய்விடுகிறோம். அவளோ பாவம், கிழவனின் மனைவி. என் அண்ணனோ, மகா ஷோக் பேர்வழி. பஞ்சு அருகே நெருப்பை வைத்துவிட்டு, ‘பற்றி எரிகிறதே’ என்று பிறகு நொந்துகொள்வதில் என்ன பயன்” என்று வேதாந்தம் பேசிவிட்டு, விஷயத்தை எங்கும் மூச்சுவிடக்கூடாது என்று கோகிலம் கேட்டுக்கொண்டாள். கருப்பையாவுக்குக் கவலை அதிகரித்துவிட்டது. “அடடா! மோசம் வந்துவிடும் போலிருக்கிறதே, என்று கலங்கினான். சாரதா மீது அளவு கடந்த கோபம் அவனுக்கு. சும்மா விடக்கூடாது, கேட்டுத் தீர வேண்டும். சிறுக்கி இவ்வளவு தூரம் கெட்டுவிட்டாளா!” என்று எண்ணி ஏங்கினான்.

கோகிலத்துக்கு, தான் மூட்டிவிட்ட கலகம் வேலை செய்யுமென்று தெரிந்துவிட்டது. தன் சாகசப்பேச்சில் கருப்பையா போன்ற காட்டான்கள் ஏமாறுவது சுலபந்தானே என எண்ணி, அண்ணனிடம் தன் வெற்றியைக் கூறவும் சாரதாவும் கருப்பையாவும் தனியாகச் சந்திக்கும் நேரத்தில், இரசமான காட்சி நடந்தே தீருமெனச் சொல்லவும் சென்றாள்.

செல்வம் ஒருவருக்கு இருந்து மற்றொருவருக்கு இல்லாது போவது அவ்வளவு அதிகமான பொறாமையைக் கிளப்புவதில்லை. அது ‘கொடுத்து வைத்தவன்’, ‘ஆண்டவன் அருள்’, ‘பூர்வ ஜென்ம புண்ய பலன்’ என்ற சமாதானங்களால் சாந்தியாகிவிடும். ஆனால் காதல் செல்வத்தின் விஷயம் அங்ஙனம் அன்று.

“உருகி, உடல் உள்ளீரல் பற்றி” விடும் காதல். சம்மதக் கண்ணொளியால் தணிக்கப்பட்டு, காதல் விளையாட்டுகளால் சாந்தியாக்கப்பட்டு இன்பவெள்ளத்தில் மூழ்கி இருக்கும் ஒருவருக்குத் தன் காதலில் பிறனொருவன் புகுவதாகவோ, கெடுக்கவோ கண்டால் கோபமும் கொதிப்பும் உள்ளத்தின் அடிவாரத்திலிருந்து கிளம்பும்.

பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாலை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால் காதல் நோயில் சிக்கிக்கொண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான், எதுவுஞ் செய்வான், எவர்க்கும் அஞ்சான் எதையுங் கருதான். ஆம்! இன்னமும் மனிதன் மாடமாளிகை கூடகோபுரத்தைவிட, மங்கையின் அன்பையே பெரிதென எண்ணுகிறான். பொன்மணி பொருளைவிட தனது பிரியையின் புன்சிரிப்பே பெரிதெனக் கருதுகிறான். எதையும் இழப்பான், காதலை இழக்கத் துணியான். எது இல்லாமற் போய்விடினும், “இதுதான் நம் நிலை; என் செய்வது” எனத் தன்னைத்தானே தேற்றிக்கொள்வான். ஆனால் மனத்தில் குளிர்ச்சி ஊட்டும் மனோகரி ஒருத்தி இல்லையெனில் அவன் செத்த வாழ்வு வாழ்வதாகவே கருதுவான். பருவமும், பழக்க மிகுதியால் வரும் சலிப்பும் ஒரு சிறிது இக்குணத்தைக் குறைக்கலாம். அடியோடு மாற்றுவதென்பதோ, அந்தக் குணமே வரவொட்டாது தடுத்துவிடுவதென்பதோ முடியாத செயல் ஆகும். கிடைக்காவிட்டால் கிலேசப்படும் உள்ளம், கிடைத்ததைக் கெடுக்க யாரேனும் முற்பட்டால், அவர்களைக் காலடியில் போட்டு மிதித்துத் துவைத்துவிடவே எண்ணும்.

கருப்பையா அந்நிலையில்தான் இருந்தான். அவன் கொண்ட நட்பு, கள்ளத்தனமானதுதான்; துரோகத்தின் மீது தோற்றுவிக்கப்பட்டதுதான்; மருண்ட இளமனத்தை மிரட்டிப் பெற்றதுதான் என்றாலும், “தான் பெற்ற இன்பம் பிறனுக்குச் செல்வதென்றால்” அவமானம் பொறுக்கவில்லை. சிங்காரவேலனுக்கும் ராதாவுக்கும் ஏதோ நடக்கும்போலத் தோன்றுகிறது எனக் கோகிலம் கயிறு திரித்தாள். அது கருப்பையாவின் மனத்தைக் கலக்கிவிட்டது.

மறுநாள் மாலை, தோட்டத்தில் கோகிலம் குறிப்பிட்டபடியே ஊடல் காட்சி ஆரம்பமாயிற்று. கருப்பையா கறுத்து, வியர்க்கும் முகத்துடன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு, வேலியைச் சரிப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் சாரதா வந்தாள். அவள், கோகிலம் செய்துவிட்டுப்போன குட்டிக் கலகத்தையும் அறியாள்; கோடியில் மரமறைவில் ‘கோடாக்’குடன் ஒளிந்துகொண்டு சிங்காரவேலன் இருப்பதையும் அறியாள். அன்றெல்லாம் கருப்பையா முகத்தைக் கோணலாக்கிக்கொண்டும், சிடுசிடுவெனப் பேசிக்கொண்டும் இருந்தது கண்டு ஒன்றும் புரியாது தத்தளித்தாள். அதனை விசாரிக்கவே அங்கு வந்தாள்.

“கருப்பையா...”

பதில் இல்லை.

“கருப்பையா...”

“கந்தன் ஒரு வேலையும் சரியாகச் செய்யமாட்டேனென்கிறான். ஆமாம் அவனுக்கு நிலைமை மாறிவிட்டது. புது கிராக்கி” என்று தோட்டக்காரக் கந்தனைச் சாக்காக வைத்துக்கொண்டு கருப்பையா பேசினான். சாரதாவுக்கு அப்போதுதான் கருப்பையா ஏதோ தன்மீது சந்தேகங்கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது. உடனே கோபமும் வந்தது. இருவரும் கோபித்துக்கொண்டே இருந்தால் என்ன செய்யமுடியும்! அதிலும் அவள் ஒரு பெண்! வழிதவறி நடந்த பெண்!! எனவே, பணிந்துபோக வேண்டியவள் தானே என எண்ணினாள். அந்த ஒரு விநாடியில் அவள் மனக்கண் முன்பு, தனது முன்னாள் நிலையாவும், படமெடுத்ததுபோல் தோன்றிற்று.

ஒருமுறை தவறினாள் – பெற்றோர்கள் தவறவிட்டார்கள் – அதுமுதல், சருக்கு மரத்தில் செல்வதுபோல, நழுவி நழுவி, வழுக்கி வழுக்கி கீழுக்கு வந்து, கடைசியில் திருட்டுத்தனமாகப் பெற்ற ஒரு முரட்டு ஆளுடன் கொஞ்சவேண்டிய நிலையும் வந்ததல்லவா, காரணமின்றி அவன் கொண்ட கோபத்துக்கும் சமாதானம் கூற வேண்டி வந்ததல்லவா – என்று எண்ணியதும் சாரதாவின் கண்கள் தானாகக் கலங்கின.

மெல்ல நடந்து கருப்பையாவை அணுகினாள். அவன் அங்கு மரமென நின்றான். “சொல்லு கருப்பையா என் மீது ஏன் உனக்குக் கோபம். நான் என்ன செய்தேன்” என்று வீட்டு எஜமானி சாரதா காரியஸ்தன் கருப்பையாவைக் கேட்டாள் – காதலால் கட்டுப்பட்டு அல்ல, அவனிடம் கண்மூடித்தனத்தால் கட்டுண்ட காரணத்தால்.

“எனக்கென்னம்மா உங்கள் மீது கோபம். நீங்கள் வீட்டு எஜமானியம்மா நான் கணக்கு எழுதிக் காலந்தள்ளுபவன்” என்று எரிகிற நெருப்பை ஏறத் தள்ளினான் கருப்பையா.

“இதோ, இப்படிப்பார். விஷயத்தைச் சொல்லு, வீணாக என் மனத்தைப் புண்ணாக்காதே” என்றாள் சாரதா, கருப்பையாவின் தோளைப்பிடித்து இழுத்துக்கொண்டே.

கோடியில் இருந்த சிங்காரவேலன், பதுங்கியபடி சற்று அருகிலிருந்த மரத்தின் பின்புறம் நின்றுகொண்டு, கோடாக்கைச் சரிப்படுத்திக்கொண்டான்.

“மனம் புண்ணாகுமா! மகராஜி நீ. நான் இங்கு மாதச் சம்பளத்துக்கு இருப்பவன். என் கோபம் உன் மனத்தைப் புண்ணாக்குமா” என்றான் கருப்பையா.

“விஷயத்தைச் சொல்லுகிறாயா நான் விழுவதற்குக் குளம் குட்டை தேடட்டுமா” என்று உறுதியுடன் கேட்டாள் சாரதா.

“ஐயோ! அம்மா! அப்படி ஒன்றும் செய்துவிடாதே சிங்காரவேலருக்கு யார் சமாதானம் கூறுவது” என்று கிண்டல் செய்தான் கருப்பையா.

சாரதாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது. தனக்கும் சிங்காரவேலுவுக்கும் ஏதோ தொடர்பு ஏற்பட்டதாக எண்ணிக்கொண்டுதான் கருப்பையா கோபித்தான் என்பது தெரிந்து விட்டது. அவளையும் அறியாமலேயே சிரிப்பு வந்தது.

“கருப்பையா விஷயம் தெரிந்துகொண்டேன். நீ நினைப்பது தவறு. ஆண்டவனறிய கூறுகிறேன், சிங்காரவேலுவுக்கும் எனக்கும் துளியும் நேசம் கிடையாது. நீ இதனை நம்பு, வீண் சந்தேகம் வேண்டாம்” என்றாள் சாரதா உறுதியுடன்.

துளியும் தட்டுத்தடங்கலின்றி நிதானமாக சாரதா கூறியதைக் கேட்ட கருப்பையாவுக்குப் பாதி சந்தேகம் போய்விட்டது.

“கோகிலம் சொன்னாளே...” என்று ஆரம்பித்தான்.

“கோகிலம் குறும்புக்குச் சொல்லி இருப்பாள்” என்று கூறிக்கொண்டே, சாரதா, கருப்பையாவின் இரு தோள்பட்டைகளையும் பிடித்துக்கொண்டே அவன் முகத்தை நோக்கியபடி, “கருப்பையா, நான் ஏதோ இப்படிக் கெட்டுவிட்டேனே தவிர, நான் சுபாவத்தில் கெட்டவளல்ல” என்றாள். கருப்பையாவின் மனம் இளகிற்று, சாரதாவின் தலையைத் தடவினான்.

“சாரதா, கண்ணே, உன்னை நான் இழக்கமாட்டேன், உயிர் எனக்கு நீதான்” என்று கொஞ்சினான். சாரதா சிரித்தாள். கருப்பையா அவளை அருகிலிழுத்து முத்தமிட்டான்.

“கடக்” என்ற சப்தமும், “சபாஷ்” என்ற பேச்சும் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். கையில் காமிராவுடன் சிரித்தபடி சிங்காரவேலன் நிற்கக் கண்டனர்.

“ஆ! ஐயோ,”

“என்ன! நீயா!”

“பதறவேண்டாம்”

பெருமூச்சுடன் கருப்பையா நின்றான். உடல் துடிக்க சாரதா நின்றாள். சிரித்துக்கொண்டே சிங்காரவேலன் நின்றான்.

“நான் உல்லாசப் பிரயாணம் செய்வதே, இவ்விதமான அழகு ததும்பும் காட்சிகளைப் போட்டோ எடுப்பதற்குத்தான். இயற்கையின் அழகுகள் எனக்கு மெத்தப் பிரியம். அதனைவிட உணர்ச்சி தரும் உல்லாசக் காட்சிகள் என்றால் நான் விடவே மாட்டேன். மலர் அழகுதான்! போட்டோ எடுத்தாலும் அழகாகத்தான் இருக்கும். ஆனால், அந்த மலரிடம் வண்டு பறந்து சென்று தேன் உண்டு களிக்கும் காட்சி இருக்கிறதே, ஆஹா! நான் என்ன சொல்வேன் அதன் ரம்மியத்தை...” என்று வேலன் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான்.

சிவபூசையில் கரடி புகுந்ததுடன், கவிவேறு பாடினால் எப்படி இருக்கும்!

சாரதா, இந்த ஒரு தோட்டக்காட்சிக்கு மட்டும், நியூ தியேட்டர்சார், பத்தாயிரம் கொடுப்பார்கள். கதாநாயகனைத்தான் மாற்ற வேண்டும். காட்சியில் குற்றமில்லை, நீ மிக அழகுபட நடித்துமுள்ளாய், திகைக்க வேண்டாம். கருப்பையா, முட்டாளுக்கு முத்து கிடைத்ததைப்போல உனக்கு இந்த மங்கை கிடைத்தாள். நீ அதிருஷ்டசாலிதான். ஆனால், நான் உன்னைவிட அதிர்ஷ்டசாலி. உறுமாதே, ஊரார் அறியும்படி இந்தப் படத்தை வெளியிட்டால் உன் கதி என்னாகும். இந்த உல்லாசியின் நிலைமை என்னாகும்!!“

“கப்சிப்!! இங்கே நிற்கவேண்டாம். அதோ யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்கிறது. இன்று இரவு 12 மணிக்கு சாரதா, நீ என் அறைக்கு வரவேண்டும். வேண்டாம் வேண்டாம், நீ வரவேண்டாம் உன்னை நான் தனியாகச் சந்திக்கமாட்டேன். கருப்பையா, நீ வா, சில நிபந்தனைகள் கூறுகிறேன். அதன்படி நீங்கள் நடக்கவேண்டும்” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டு சிங்கரவேலன் போய்விட்டான்.

சாரதாவும் கருப்பையாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

“விதியே! தலைவிதியே” என்று சாரதா விம்மினாள்.

சாரதா யாரோ வருகிறார்கள். கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினான் கருப்பையா.

“என்னடி மெத்த தளுக்குக் காட்டுகிறாய்”

என்று இனிய குரலில் இசைத்துக்கொண்டே கோகிலம் அங்கு வந்து சேர்ந்தாள்.

இரவு கருப்பையா, சிங்காரவேலன் அறைக்குச் சென்றான், மடியில் கூரான ஈட்டியுடன். சாரதாவின் மானத்தையும் தன் மரியாதையையும் வாழ்வையும் அழிக்கக்கூடிய அந்த வேலனின் உயிரைப் போக்கிவிடுவது என்ற முடிவுடன்.

ஒரு கொலை செய்வதற்கு வேண்டிய அளவு உறுதி அவன் முகஜாடையில் காணப்பட்டது.

வேலன், “வா கருப்பையா, சொன்னபடி வந்துவிட்டாயே” எனத் துளியும் தடுமாற்றமின்றிப் பேசினான்.

கருப்பையாவின் கரம், மடியில் சொருகி வைக்கப்பட்டிருந்த ஈட்டி மீது சென்றது.

வேலனின் சூரிய பார்வை, ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை உணர்த்திற்று. ஆனால், அவன் துளியும் அசையவில்லை. படுக்கைமீது உட்கார்ந்தபடியே ஒரு முடிவுக்கு வந்தான்.

சாமர்த்தியமாகக் கருப்பையாவை ஏமாற்ற வேண்டும்.