தந்தையும் மகளும்/22
22அப்பா! இடியும் மின்னலும் உண்டாகும் சமயத்தில் மரத்தடியில் நிற்கக்கூடாது என்று கூறுகிறார்களே. அதற்குக் காரணம் என்ன?
அம்மா! நாம் சாலையில் நடந்து போகும்போது இடியும் மின்னலும் உண்டாகுமானால் நாம் நனைந்து போகாமல் இருப்பதற்காக மரங்களின் அடியிலே போய் நிற்பது வழக்கம். ஆனால் அது தவறு, அபாயகரமானது
மழை பெயயும்போது மேகங்களிலுள்ள மின்சாரம் மழைத் தாரைகளின் வழியாகக் கீழே இறங்கும். அந்த மழை மரத்தில் விழுமானால் மரத்துள் இறங்கி மரத்தைப் பிளந்து விடும். நாம் இடியும் மின்னலும் உண்டாகும் போது மரத்தடியில் நின்றால் மழைத் துளியுடன் இயங்கும் மின்சாரம் மரத்தினூடு இறங்காமல் நம்முடைய உடம்பின் வழியாகப் பாய ஆரம்பித்து விடும். அதற்குக் காரணம் மின்சாரம மரத்தின் வழிச் செல்வதைவிட அதிக எளிதாக நம்முடைய உடம்பு வழியாகச் செல்லக்கூடியதாக இருப்பதுதான்
ஆதலால் நாம் சாலையில் செல்லும்போது இடியும் மின்னலும் உண்டாகுமானால் உடனே மரங்களில்லாத வெட்டவெளிக்குச் சென்றுவிடுவதே நல்லது.
அம்மா! மரத்தைவிட உடம்பு மின்சாரத்தை அதிகமாகக் கிரகிக்கக் கூடியதாக இருப்பதால் நீ இடியும் மின்னலும் உண்டாகும் போது வண்டியில் பிரயாணம் செய்ய நேர்ந்தால் நீ அதன் பின்னால் சாய்ந்து உட்காராமல் நிமிர்ந்தே உட்காரு, அப்படி உட்கார்ந்தால் வண்டியில் இறங்கும் மின்சாரம் உடம்பில் விடாமல் தரைக்குச் சென்றுவிடும்.
அம்மா! நீ வீட்டிலேயே இருந்தாலும் சன்னல் அருகிலோ, நிலைக்கண்ணாடிப் பக்கத்திலோ நிற்காதே. அந்த மாதிரிச் சமயங்களில் அறையின் நடுவில் பாயின் மேலோ கம்பளியின் மேலோ நிற்பதுதான் மிகவும் நல்லது. அம்மா! நீ இதை எல்லாம் மறந்துவிடாதே