தந்தையும் மகளும்/21

விக்கிமூலம் இலிருந்து


21அப்பா! மீன் பிடிக்கிறவர்கள் மீன்பிடிப்பதற்காக மாலையில் போய் காலையில் வருகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பகலில் சூரியன் காய்கிறது. அதனால் தரையும் கடலும் சூடாகின்றன. ஆனால் அவ்விரண்டிலும் தரையே அதிகச் சூடுள்ளதாக ஆகி விடுகிறது. ஆகையால் தரையின் மீதுள்ள காற்றும் அதிக உஷ்ணமாகி விடுகின்றது. விரிவதால் நிறை குறைந்து லிடுகிறது. அதனால் அது மேலே எழும்பிச் செல்லுகிறது. தரையின் மீது வெற்றிடம் உண்டாகவே கடலின் மீது நின்ற காற்று இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காகப் பாயந்து வருகிறது. அப்படி வரும் காற்றைத்தான் நாம் கடற்காற்று என்று கூறுகிறோம். சூரியனுடைய உஷ்ணம் காலை முதல் பிற்பகல் வரை கூடிக்கொண்டு வருவதால் இந்தக் கடற்காற்று பிற்பகல் வரை அடித்துக் கொண்டிருக்கும். அதனால் அந்தச் சமயத்தில் தோணியில் போனால் தோணியை வலித்துக்கொண்டு போகவேண்டும் அது கஷ்டமல்லவா? அதனால்தான் மீன் பிடிப்பவர்கள் மீன் பிடிக்கக் காலையில் போக மாட்டார்கள்.

சூரியன் மாலையில் மறைந்ததும் தரையும் கடலும் உஷ்ணத்தைக் கக்க ஆரம்பிக்கின்றன. அதில் தரையே அதிகச் சீக்கிரமாகக் கக்குகிறது. ஆதலால் தரை மீதுள்ள காற்று கடலை நோக்கி வீசுகிறது. அதனால் மாலையில் தோணியில் போவது எளிதாகயிருக்கும். ஆதலால் தான் மீன் பிடிப்பதற்கு மாலையில் போய்விட்டுக் காலையில் திரும்பி வருகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/21&oldid=1538084" இலிருந்து மீள்விக்கப்பட்டது