உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/107

விக்கிமூலம் இலிருந்து


107 அப்பா! சென்னையில் லைட்ஹவுஸில் உள்ள பெரிய கோபுரத்தில் இரவு நேரங்களில் ஒரு வெளிச்சம் தெரிகிறதே, அதன் காரணம் என்ன?

அம்மா! அதை ஆங்கிலத்தில் "லைட் ஹவுஸ்" என்றும் தமிழில் "கலங்கரை விளக்கு" என்றும் கூறுவார்கள். அது எதற்காக வைத்திருக்கிறார்கள் தெரியுமா? இரவு நேரத்தில் கடலில் பிரயாணம் செய்யும் கப்பல்களில் உள்ளவர்களுக்கு இன்ன இடத்தில் கரையிருக்கிறது என்று தெரிய வேண்டாமா? தெரிந்தால்தானே கரையில்வந்து மோதிக்கொள்ளாதவாறு கப்பலை ஒட்ட முடியும்? நாம் சாலையில் போகும்போது சாலைகளிலுள்ள விளக்குகள் நம்மைச் சாலையின் ஓரங்களில் போய் விழுந்து விடாதபடி பாதுகாக்கின்றன அல்லவா? அதுபோல் கப்பல்களைப் பாதுகாப்பதற்காகக் கடற்கரையில் பெரிய கோபுரம்போல் கட்டி அதன்மீது பிரகாசமான விளக்கை ஏற்றிவைக்கிறார்கள். இந்த மாதிரி இந்தக் காலத்தில் செய்கிறார்கள் என்று எண்ணாதே. அம்மா!,உனக்குக் கோவலன் கதை தெரியுமே, அதை எழுதிய இளங்கோவடிகள் காலத்தில்கூட அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே நம்முடைய நாட்டில் இருந்திருக்கிறது. அவர் தாம் செய்த சிலப்பதிகார நூலில்

"இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை விளக்கம்"

என்று கூறுகிறார்.

அந்தக் காலத்தில் உயரமான பனையைக் கரையில் நட்டு அதன் தலையில் பந்தம்போல் விளக்கேற்றி வைத்திருந்தார்கள் என்று தெரிகிறது. அந்த விளக்கு சிறிது தூரம்தான் தெரியும். ஆனால் லைட்ஹவுஸில் வைத்திருக்கும் விளக்கு பலமைல் தூரம்வரை தெரியும். அதன் காரணம் சொல்லுகிறேன், கேள்.

அம்மா! நடுவிலே ஒரு பெரிய விளக்கு ஏற்றி வைப்பார்கள். அமெரிக்க நாட்டிலே உள்ள கலங்கரை விளக்கத்திலுள்ள விளக்கு 90 லட்சம் மெழுகுவத்திகள் ஒன்றாகக் கொடுக்கும் ஒளி தருமாம். அந்தப் பிரமாண்டமான ஒளியும் வெகுதூரம்வரை தெரிவதற்காக அதை பெரிய குழல்போன்ற லென்ஸின் மத்தியில் வைத்திருக்கிறார்கள். அந்தக் குழல் லென்ஸ் 8 அடி உயரமும் 6 அடி அகலமும் உடையதாகும். அது மட்டுமன்று.

அந்த ஒளி வெகுதூரம் தெரிந்தாலும் அதுதான் கலங்கரை விளக்கம் என்று கப்பல் பிரயாணிகள் தெரிந்து கொள்வதற்காக அந்தக் குழல் லென்ஸின் ஒரு பகுதியை கறுப்பாக்கி வைத்துக்கொண்டு அதை இரவு முழுவதும் விளக்கைச் சுற்றிக் சுழன்றுகொண்டே இருக்குமாறு செய்கிறார்கள் அதனால் கப்பலில் உள்ளவர்களுக்கு முதலில் ஒளி தெரியும்;பிறகு சில செக்கண்டு நேரம் ஒளி தெரியாது, பின்னர் மறுபடியும் ஒளி தெரியும். இதையும் நீ சென்னையில் பார்த்திருக்கிறாய் அல்லவா? இவ்வாறு ஒளியானது விட்டு விட்டுத் தெரிவதால் இது தான் கலங்கரை விளக்கம் என்று அறிந்து கொள்வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/107&oldid=1538283" இலிருந்து மீள்விக்கப்பட்டது