தந்தையும் மகளும்/136A
136Aஅப்பா! நகராட்சியினர் அசுத்தமான இடங்களில் ஒரு வெள்ளைப் பொடியைக் கொண்டுவந்து தூவுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
ஆம், அம்மா! அவர்கள் தூவத்தான் செய்கிறார்கள் அதைத் தூவினால் அசுத்தம் நீங்கி சுத்தம் உணடாய் விடும். அதற்காகத்தான். அது எப்படி என்று கேட்பாய், கூறுகிறேன், கேள்.
அம்மா! அந்தப்பொடியை "நிறம் நீக்கும் பொடி" என்று கூறுவார்கள். பெரிய துணி யந்திர சாலைகளில் துணிகளிலுள்ள சாயத்தை நீக்குவதற்கு அந்தப்பொடியைத் தான் உபயோகிப்பார்கள். அதனால்தான் அதற்கு அந்தப் பெயர்.
அம்மா! சுண்ணாம்புக் கல்லின்மீது தண்ணீரை ஊற்றினால் அது நீறுவதை நீ அறிவாய். அந்த நீற்றில் குளோரின் என்னும் வாயுவைச் சேர்த்தால் நீ கூறும் வெள்ளைப்பொடி கிடைக்கும்.
சாயம் நீக்கவேண்டிய துணியை அமிலநீரில் தோய்த்து அந்தப் பொடிகலந்த நீரில் இடுவார்கள். அப்பொழுது பொடியிலுள்ள குளோரின் வாயு பிரிந்து வந்து துணியிலுள்ள ஹைட்ரோஜன் வாயுவோடு சேர்ந்துகொள்ளும். அதனால் ஆக்ஸிஜன் என்னும் பிராணவாயு தனியாகப் பிரிந்து சாயத்துடன் சேர்ந்து அதை நிறமில்லாத வஸ்துவாக ஆக்கிவிடும். இவ்வாறு துணி நிறம்நீங்கி வெளுத்து விடும்.
இதுபோலவேதான் அந்தப்பொடியை அசுத்தமான இடங்களில் தூவினாலும் பிராணவாயு பிரிந்து வருகிறது, அது நோய்க் கிருமிகளைக் கொல்லக்கூடிய ஆற்றல் உடையது. அதனால் அசுத்தம் போய் சுத்தம் உண்டாய் விடுகிறது.