தந்தையும் மகளும்/173
173அப்பா! நாய்கள் இரவில் ஊளையிடுகின்றனவே அதற்குக் காரணம் என்ன?
அம்மா! இப்பொழுது மனிதனுக்கு இணையற்ற தோழனாயிருந்து உதவி செய்து வரும் நாய்கள் ஆதியில் காட்டிலுள்ள ஓநாய்களாகவே இருந்தன. மனிதன் தான் வேட்டையாடுவதற்கு உதவியாக அவற்றைப் பழக்கி இப்பொழுதுள்ள நாய்களாகச் செய்திருக்கிறான். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எகிப்திய சித்திரங்களில் வரையப்பட்டுள்ள நாய்கள் ஓநாய் உருவமே உடையனவாக இருக்கின்றன.
இவ்வாறு நமது நாய்கள் ஓநாய் வம்சத்தைச் சேர்ந்தனவாக இருப்பதால் அவை அந்தக் காலத்தில் செய்துவந்த சில காரியங்களை இந்தக் காலத்திலும் செய்து வருகின்றன. அம்மா! நாய் படுக்கப் போகும் போது சுற்றிச் சுற்றிவந்து படுப்பதை நீ பார்த்திருப்பாய். அது ஓநாயாக இருந்த பொழுது படுப்பதற்கு புல்லையும் இலைகளையும் படுக்கை போல் செய்துகொண்டது அல்லவா, அந்தப் பழைய வாசனையினால்தான் இப்பொழுது நமது சமக்காளத்தில் படுப்பதானாலும் சுற்றிவந்து படுக்கிறது. அது போலவேதான் நாயானது ஓநாய்கள் இரவில் இரை தேடிப்போகும் போது வீட்டிலிருந்து ஊளையிடுவது போல நம்முடைய வீட்டிலிருந்து கொண்டும் ஊளையிடுகிறது.