14
குன்று அத்தனை இரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்.53
எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்கு,
கழுதை மேப் பாழ் ஆயினும்,ஆகும்.54
பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப் பாழ்
பொன்—தொடி மகளிரும் மைந்தரும் கூடி,
நெல் பொலி நெடு நகர் ஆயினும் ஆகும்.55
மண அணி அணிந்த மகளிர் ஆங்கே
பிண அணி அணிந்து, தம் கொழுநரைத் தழீஇ,
உடுத்த ஆடை கோடியாக,
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.56
இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே.57
இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே.58
நல்லஞாலமும் வானமும் பெறினும்,
எல்லாம் இல்லை, இல் இல்லோர்க்கே.59
தறுகண் யானைதான் பெரிதுஆயினும்,
சிறு கண் மூங்கில் கோற்கு அஞ்சும்மே.60
குன்றுடை நெடுங்காடூடே வாழினும்,
புன் தலைப் புல்வாய் புலிக்கு அஞ்சும்மே.61
ஆரையாம் பள்ளத்தூடே வாழினும்,
தேரை பாம்பிற்கு மிக அஞ்சும்மே.62
கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின்
கடும் புலி வாழும் காடு நன்றே.63
சான்றோர் இல்லாத் தொல் பதி இருத்தளின்,
தேன் தேர் குறவர் தேயம் நன்றே.64
காலையும் மாலையும் நான்மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே.65
குடி அலைத்து, இரந்து, வெங் கோலொடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே.66