புணரியலோ, சொற்புணர்ச்சிகளைத் திட்டம்பட வகுக்காமல், பெரும்பாலும் தவிர்ப்பும் (Exception) உறழ்ச்சியும் படவே வகுத்துக்கூறும். இதனால், மாணவர்க்குத் தெளிவான அறிவு பிறப்பதில்லை. ஆதலால், கட்டுரைக்கு வேண்டிய இலக்கணங்களை மட்டும் இயன்றவரை சுருக்கமாகவும், விளக்கமாகவும் கற்பிப்பின், மாணவர்க்குப் பயன்படுமென்றெண்ணி, பல ஆண்டுகளாக ஆயத்தம் செய்து இந்நூலை எழுதத் துணிந்தேன். மாணவர் பிழைகள் பெரும்பாலும் எழுத்துப் பிழையும் சொற்பிழையுமாயிருத்தலின், அவற்றை நீக்குவதற்குப் பலவழிகள் இந்நூனெடுமையுங் கையாளப்பட்டுள. எடுத்துக்காட்டாக, ரகர றகர வேறுபாடுகளையும் வலிமிகும் இடங்களையும் நோக்குவார்க்கு இவ்வுண்மை எளிது புலனாகும்.
இப்பதிப்பில் பல திருத்தங்களும் பல புதுச்சேர்க்கைகளும் நிகழ்ந்துள்ளன.
மாணவர் மனத்தில் அழுந்தப் பதியுமாறும், அவ்வப் பகுதிக் கேற்றவாறும், ஆங்காங்கு வழிமொழிதலாகவுள்ள சில சொற்களும் சொற்றொடர்களும் கூறியது கூறலாயின், அறிஞர் அதனைப் பொறுத்தருள்க.
இப்புத்தகத்தின் திருத்தம்பற்றிய கருத்துக்களை எவரேனும் தெரிவிப்பின், அவற்றை நன்றிய அடுத்த பதிப்பிற் பயன்படுத்திக்கொள்வேன்.
சென்னை 20-1-1944.
ஞ.தேவநேயன்