பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


இப்படிப்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள் செய்து கொள்வதுப, சீர்திருத்தத் திருமணங்களைப் பரப்புவதும் அறிவுத்துறையில் நாம் முன்னேறுவதற்கான அடிப்படைகளில் முக்கியமானதாகும், சீர்திருத்தம் திருமணத்திலிருந்து துவங்குவது. வாழ்வில் நல்லதொரு நிகழ்ச்சியாகும். எனவே இதைக்கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லையென்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

உலகம் அறிவுத்துறையில் எவ்வளவோ முன்னேறி இருந்துங்கூட இந்த நாடு மட்டும் உலக முன்னேற்றத்துடன் ஒட்ட முன்னேறாது பழமையிலே பெருமை கண்டு பின்தங்கிக் கிடக்கிறது என்று குறிப்பிட்டேன்.

இதனை நாம் நாட்டில் தினமும காணும் காட்சிகளிலிருந்தே காணலாம். அண்மையில் வடநாட்டில் கடந்த கும்பமேளா என்ற விழா எதைக் குறிக்கிறது? அதில் நடந்த நிர்வாண ஊர்வலம் எதைக் காட்டுகிறது? அல்லது இன்னமும் இந்த நாட்டில் காட்டுமிராண்டித்தனம் மக்களிடம் இருக்கிறது என்பதைத்தானே காட்டும்! இத்தகைய காட்சியைக் காணும் எந்த வெளி நாட்டானும் நம்மைப்பற்றி எவ்வளவு கேவலமாக எண்ணுவான்!

இதைப்போலவே, நான் அடிக்கடி குறிப்பிட்டுவரும் கோவைக்கு அடுத்துள்ள காத்தாமடை என்கிற ஊரில் நடக்கும் அர்த்தமற்ற ஆபாசத் திருவிழாவும் இருக்கிறது! அங்கே அனுமார் ஆவேசமாடும் ஒரு சாமியார் வாயிலிட்டு மென்று கீழே துப்பும் எச்சில் வாழைப் பழத்தைப் புசிப்பதால் பிள்ளைப்பேறு கிடைக்குமென்று நம்பி, எத்தனையோ பெண்கள் எடுத்துப் புசித்துவருகிறார்களே! இதெல்லாம் சரியா? இந்தக் காலத்திற்கும் தேவைதானா?