பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


மைகூடத் தீட்டி அழகுபார்த்ததுண்டு--ஆனால் அது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு--'அவர்' இருந்த போது.

அவர் தந்த செல்வம் 'அக்கரை' சென்று ஆண்டு இருபதுக்கு மேலாகி விட்டன--அரும்பு மீசைக்காரனாகச் சென்றான்--அன்னை அப்போது அழ முடிந்தது--இப்போது? அதற்கும் சக்தி வேண்டுமே, இல்லை!

துக்கம்--ஏக்கம்!
நிலைத்துவிட்ட திகைப்பு!
தரித்திரத்தின் கடைசிக் கட்டம்

இவைகளின் 'நடமாடும் உருவம், அந்த மூதாட்டிக் கிழவியைக் கண்டால், "ஐயோ பாவம்!" என்று பரிதாபம் பேசியகாலம்கூட மடிந்து போய் விட்டது--எத்தனை நாளைக்குத்தான் பரிதாபச் சிந்து பாடியபடி இருக்க முடியும்!!

மலையின் கெம்பீரம்-- மதியின் அழகொளி--மேகக் கூட்டத்தின் மோகனம் இவைப்பற்றியே, பேசிக் கொண்டும் ரசித்துக் கொண்டும், சதா சர்வகாலமும் இருக்க முடிவதில்லையே, இந்தச் சஞ்சல மூட்டையைப் பற்றியா, சிந்தனையை எப்போதும் செலவிட்டபடி இருக்க முடியும்!

'பாட்டியம்மா பாட்டி ஆகி, பிறகு 'கிழவி'யாகி பிறகு ஏ! யாரது!' ஆகி, பிறகு போ, போ! போ!' என்றாகி, பிறகு 'இதேதடா தொல்லை' என்றாகி,பெரிய சனியன் என்றாகி, பிசின், இலேசில் விடாது" என்றாகி, இப்போது கவனிப்பார், கவலைப்படுவாரற்ற ஓர் உருவமாகி விட்ட நிலை!