பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


இருக்கவேண்டும், என்பதையே நோக்கமாகக் கொள்ளதை விட, மக்களையும் கொள்கையையும் மதித்து நம்பிக்கையுடன் பேசும் நோக்கம் சிறந்தது--மேலானது.

தீயினார் சுட்ட புண் ஆறும்--நாவினார் சுட்ட புண் ஆறாது என்ற வள்ளுவர் வாக்கு, தனிப்பட்ட உரையாடலுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்--பேச்சு மேடையிலே ஆறிய புண் அதிகம். நாவினால் சுட்டவடுப் பெற்றதாக எண்ணிக் கல் வீசினோர், 'நல்வழி கண்டோம்' அவர் உரையால் என்று, பிறிதோர் நாள் உணர்ந்து, கல் தூக்கிய கரத்தால் கனத்த மாலையைத் தூக்கிவரும் காட்சிகள் நிரம்பிய விசித்திரபுரி மேடை.

எனவே, பேசும் பொருள் பயன்படத் தக்கதாகவும், வீனான வீம்புக்கு வித்திடாத வகையிலும் அமைத்துக் கொள்வது நல்லது. இனித்தே ஆகவேண்டும் என்று முயன்றால், சதங்கையும் ஜாலரும் தேடித் தீரவேண்டிவரும்.

இனிமையுங்கூட கொள்கையின் உறுதியிலேயிருந்து பிறப்பதுதான்-- கொள்கையை விட்டுக் கொடுப்பதால் வராது.

வள்ளுவர் வாக்கின்படி பேச்சு அமைவதற்கு வள்ளுவர் வாக்கின்படி கேட்பவர்களும் அமையவேண்டும். பேசுபவருக்கு முறை கூறிய வள்ளுவர், கேட்பவருக்கும் முறை கூறி இருக்கிறார்.

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு."

ஆனால் நடைமுறையில் இந்தக் குறள் இல்லை. மெய்ப் பொருள் காண்பதறிவு என்றார் திருவள்ளுவர். மெய்ப் பொருள் காண்பதரிது என்று ஆகிவிட்டது நிலைமை.

இனி, பேச்சு கருத்தின் தொகுப்பு, ஆகையால் பேச்சு பயனும், சுவையும் தருவதாக இருக்க, கருத்துக்களைக் கவனித்தாக வேண்டும். கருத்து சிந்தனையின் விளைவு;