உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 அப்பாத்துரையம் – 11


இராஷ்டிரகூடர்

இராஷ்டிரகூட மரபினர் எட்டாம் நூற்றாண்டுக்குமுன் சிற்றரசராகவே இருந்தனர். இரண்டாம் இந்திரன் ஒரு சாளுக்கிய இளவரசியை மணந்திருந்தான், அடுத்த அரசனாகிய தந்திதுர்க்கன் மேற்குச் சாளுக்கியரை வென்றுற பேரரசு நிறுவினான். இவன் வெற்றிகள் 748, 758 ஆகிய ஆண்டுகளுக்குரிய கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றன. 768, 772 ஆகிய ஆண்டுகளில் வாழ்ந்த முதலாம் கிருஷ்ணனே புகழ்பெற்ற எல்லோராக் குகைச்சிற்பங்களை வகுத்தவன் என்று அறியப்படுகிறது. 783-ல் துருவன் மேலைக்கங்க அரசன் சிவமாரனைச் சிறைப்படுத்தினான்.

மூன்றாம் கோவிந்தன் (783-814) பெரும் போர்வீரன். கிழக்குச் சாளுக்கிய அரசன் விஜயாதித்தியனுடன் அவன் செய்த போர்கள் மிகப்பல. அத்துடன் இவன் குஜராத்தையும் கேரளத்தையும் வென்றான். குஜராத்தில் அவன்கீழ்ஆண்ட அவன் தம்பி மூன்றாம் இந்திரன், பின்னால் தனிக் கூர்ஜர மரபு கண்டான்.

முதலாம் அமோகவர்ஷன் (814-877) புதல்வி சங்காவைப் பல்லவ அரசன் மூன்றாம் நந்திவர்மன் மணஞ்செய்து கொண்டான்.

அமோகர்வஷனுக்குப் பின்வந்த அரசர்கள் வலி குன்றியவரா யிருந்தனர். கடைசி இராஷ்டிரகூட அரசன் இரண்டாம் கர்க்கலன் அல்லது நாலாம் அமோகவர்ஷன் (972-3) கீழைச்சாளுக்கிய மரபினனான தைலப்பனால் வீழ்த்தப் பட்டான். இராஷ்டிரகூட மரபு இதனுடன் முடிவடைந்தது.


கேசரி மரபினர்

வடகிழக்கில் கலிங்க நாட்டில் காரவேலனுக்குப் பின் ஒரு சில அரசர் பெயர்களே நமக்குத் தெரியவருகின்றன. கலிங்கத்தின் வடபகுதியில் இன்றைய ஒரிசாவில் கேசரி மரபினர் 10ஆம் நூற்றாண்டுவரை ஆண்டதாகக் கல்வெட்டு மரபு குறிக்கின்றது.

கி.பி. 615-ல் கலிங்கரிடமிருந்து வேங்கிநாட்டைக் கீழைச்சாளுக்கியர் கைப்பற்றி ஆண்டனர்.