உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 87

தற்கால நகரங்களைப் போலவே மருதநிலமும் முன்பே வளர்ந்துவிட்ட பொருள் வளம், பண்பு வளம், அறிவு கலை வளங்கள் ஆகியவற்றைப் பேணிப் பரப்பும் நிலமாக மட்டுமே மனித இன வாழ்வில் இடம் பெற்றுள்ளது. அவற்றை ஆக்கிப் படைத்து வளர்க்கும் மரபு அதற்கு என்றும் கிடையாது. மனித

ன வரலாற்றில், மருதநிலத்துக்குரிய இதே இயல்பு முடியரசுக்கும் உரியதாகும். குடியரசு மலர்ச்சியில் தோன்றி வளர்ந்த மரபுகள், பண்புகள், வளங்கள் ஆகியவற்றைப் பேணிப் பரப்புவதன்றி, அது தனக்கென அவற்றை முதனிலையாக ஆக்கிப் படைப்பதில்லை. இதனாலேயே நாம் வரலாற்றில் கொங்கு மாநிலம் போன்று குறிஞ்சிமுல்லை விரவிய சிறுபாலைகளாகிய மராத்தியம், இரசபுதனம் (இராஜஸ்தான்), நேபாளம், சுவிட்சர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நிலங்களிலேயே குடியரசு மரபுடன் வீரமரபு விரவுவது காண்கிறோம். உபநிடதங்களும் புத்த சமண சமயங்களும் இத்தகு வீரக்குடியரசு மரபுகளிலிருந்து தோன்றியவையே யாகும். இது போலவே வரலாற்றில் கொங்குத் தமிழகத்தை உள்ளடக்கிய தமிழகம் அல்லது தென்னகம் போன்று குடியரசு மரபும் வீரமரபும் பேணி, வேள்புல நிலையிலேயே வேள்புல அரசு மலர்ச்சியை ஐந்திணை யளாவப் பரப்பும் வாய்ப்புப் பெற்ற நிலங்களில்தான் மக்களினங்கள் கடலோடி இனங்களாக நிலவிவந்துள்ளன என்று காண்கிறோம். வரலாற்றுக்கால பிரிட்டானியர், உலாந்தர் (டச்சுக்காரர்), போர்ச்சுக்கீசியர், பண்டைக்கால பினீசியர், கிரேக்கர், அராபியர், மலேசிய இந்தோனேசிய மக்கள் ஆகியோரே உலகின் இத்தகைய கடலோடி இனங்களாய், கடலரசு கடற் பேரரசுகளாய் நிலவிவந்துள்ளனர் என்பதன் சூழல்விளக்கம் இதுவே யாகும்.

பழந்தமிழகத்திலும், பழங் கொங்குத் தமிழகத்திலும் நாகரிக உலகில் முடியரசருக்கு முற்பட்டே வேளிர் ஐந்திணை மலர்ச்சியில் முன்னேறி யிருந்தனர். பழங்கொங்குத் தமிழகத்தில் நன்னன் ஆண்ட கடம்ப மரபினரும் குறும்பரும், பழந்தொண்டை நாட்டுப் பரப்பிலும் அப்பாலும் திரையர், இளந்திரையர் (திரையர் என்ற சொல்லே கடலோடிகள் என்ற பொருளுடையது), ஆந்திரர், கலிங்கர் ஆகியோரும், அகல் உலகில் பசிபிக் மக்கள் பீனிசியர், கிரேக்க அதேனியர் ஆகியோருமே இம்மெய்மைக்குச் சான்றுகள் ஆவர். பிற அரசர் பேரரசர் தம் ஆட்சியுட்பட்ட