உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

185


தன்று; வேண்டுமென்றே அக்கருத்தை அன்னோர் எங்கும் பரப்புவதற்குமுயன்று கொண்டிருத்தல் அறியத் தக்கது. அவர்கள் அவ்வாறு செய்வதற்குக் காரணம் தமிழ்மொழியைத் தென்னாட்டு மொழிகளுக்குத் தாய்மொழியாக ஏற்றுக் கொண்டு அதற்கு முதன்மையும், தனிச்சிறப்பும் அளித்தற்குச் சிறிதும் இடங்கொடுத்தல் கூடாது என்ற எண்ணமேயாம். அவர்களுடைய கருத்தும் முயற்சியும் எவ்வாறிருப்பினும் உண்மைக்கு மாறான கொள்கை எதுவும் நிலை பெறாது; காலப்போக்கில் மறைந்து ஒழிந்துவிடும் என்பது திண்ணம்.

ஆதிகாலம்

இனி, தமிழ்மொழியின் இலக்கியப் பரப்பினைக் காண்போம். இம்மொழி, பண்டைக்காலத்தில் முதல், இடை, கடை என்னும் முச்சங்கங்களிலும் சான்றோர்களால் ஆராயப் பெற்று ஒப்பற்ற இலக்கிய இலக்கணங்களையும் இசை நாடக நூல்களையும் பல்வகைப்பட்ட வேறு நூல்களையும் தன்பாற் கொண்டு சிறந்து விளங்கியது. அவற்றுள் பெரும்பாலான நூல்கள், இருமுறை நம் தமிழகத்தில் நிகழ்ந்த கடல்கோள்களாலும் அன்னியர்களின் படையெழுச்சிகளாலும் அழிந்து போய்விட்டன. அந்நூல்களுள் சிலவற்றின் பெயர்கள் மாத்திரம் பழைய உரையாசிரியர்களின் உரை மேற்கோள்களால் அறியக் கிடக்கின்றன.

ப்போதுள்ள நூல்களுள் மிக்க பழமை வாய்ந்தது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலேயாகும். அஃது ஆசிரியர் தொல்காப்பியனாரால் முதற் சங்கத்திறுதிக்காலத்தில் இயற்றப் பெற்று, இடைச்சங்கத்தார்க்கும், கடைச்சங்கத்தார்க்கும் இலக்கணமாயிருந்தது; தனித்தனியே ஒன்பது ஒன்பது இயல்களையுடைய எழுத்து,சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களையும் உடையது. அதிலுள்ள பொருளதிகாரம் ஒரு தனிச் சிறப்புடையது; அது பிறமொழிகளில் காணப்படாததுமாகும். பண்டைத் தமிழ் மக்களுடைய வழக்க ஒழுக்கங்களையும், நாகரிக நிலையினைவும், வரலாற்றினையும், பிற இயல்புகளையும் பொருளாதிகாரச் சூத்திரங்களால் நன்கு உணர்ந்து கொள்ளலாம்.