உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
317

கூறியபின், அவரை அவ்வறிதுயிலில் வைத்துக்கொண்டே, அவர்தங் கண்களைமட்டுந் திறக்கும் படி கற்பிக்க; உடனே அவர்தங் கண்களைத் திறப்பர்; அவர் படிக்கத்தக்க ஒரு புத்தகத்தை அவரது கையிற் கொடுத்து அதில் ஒரு பகுதியைப் படிக்கும்படி கற்பிக்க; அறிதுயிலில் இருந்தபடியாகவே அவர் அதனைப் படிக்கையில் வாய்திக்காமற் படிப்பர். எவ்வளவு திக்கிப் பேசுகிறவரும் அறிதுயிலில் இருக்கையில் தெற்றுப் படாமற் படிப்பதை அப்போது காணலாம். பிறகு அவர் தம் கண்களை மூடிக்கொள்ளும்படி செய்து, இங்ஙனமே அவர் எப்போதுந் திக்காமற் செவ்வையாய்ப் படிப்பரென நாலைந்து முறை திருப்பித் திருப்பிச் சொல்லிப், பின்னும் ஓர் ஐந்து அல்லது பத்து நிமிடம் வரையில் அவரை அமைதியாய்த் தூங்க விட்டு, அப்புறம் அவரை எழுப்பி விடுக.

இனிச், சிறுவர்களையே யன்றி ஆண்டில் முதிர்ந்த ஆடவரையும் மகளிரையுங்கூட, மேற்காட்டியவாறே அறிதுயிலிற் போகச் செய்து நாம் வேண்டியபடியெல்லாம் நடக்கும்படி கற்பிக்கலாம். இவ்வாறெல்லாஞ் செய்து பயன்பெறுதற்கு நினைவோடு கூடிய அறிதுயில் ஆகாது; நினைவு அற்ற ஆழ்ந்த அறிதுயிலே இவைகளைச் செய்தற்கு ஏற்றதொன்றாதலால், அதனை வருவித்த பிறகே இக்கட்டுரைகளைச் சொல்லுதற்கு முயலல் வேண்டும். இத்துயிலினின்று எழுப்பப்பட்டபின், துயிற்றுவோர் சொல்லியவைகளை விழிப்பு நிலையில் தெரியாமலிருக்கும்படிக்கும், ஆனாலும் அவர் அப்போது சொல்லியபடியே எப்போதும் நடக்கும்படிக்கும் வற்புறுத்தும் உரைத்தல் இன்றியமை யாததாகும்.

அங்ஙனமாயின், அறிதுயிலுக்குச் செல்லமாட்டாத அல்லது அறிதுயிலிற்செல்ல விருப்பமில்லாத நோயாளிகளை அல்லது மற்றவர்களை அதன்கட் செலுத்துமாறு யாங்ஙனமெனின்; ஒருவர்க்கு நாலைந்து முறை முயன்றும் அறிதுயிலை வருவித்தல் கூடாதாயின், ஒருகிழமை அன்றி இரண்டுகிழமை வரையில் விடாமல் நாடோறும் முயன்றுவரின் அவர்க்கு அதனை வருவித்து விடலாம். அறிதுயிலிற் செல்ல மாட்டாதவர் ஒருவரும் இல்லையாகையால், எல்லார்க்கும் அதனை வருவிக்கலாம் என்பது திண்ணம். ஆனால், ஒரு சிலர்க்கு உடனேயும், வேறு சிலர்க்கு இரண்டு நாளினும், மற்றுஞ் சிலர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/350&oldid=1626571" இலிருந்து மீள்விக்கப்பட்டது