உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(200

அப்பாத்துரையம் - 29

எந்தத் தண்டனையாலும் மாறாத அளவு அப்பெண்ணின் உள்ளம் மாறுதலடைந்தது. பெரியவர் தெய்விக அன்பின் அமைதி அவள் உள்ளத்திலும் தெய்விக அன்பு கனிய வைத்தது.

பிறரைப் பற்றிய அல்லது உலகைப் பற்றிய தனிப்பட்ட முடிவுகளுக்கோ, விருப்பு வெறுப்புக்களுக்கோ, தூய உள்ளத்தில் இடம் இருப்பதில்லை. ஏனெனில் அன்பும் பாசக் கனிவும் அதில் நிரம்பித் ததும்பிப் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தூய பார்வையில் பழி எதுவுமே தெரிவதில்லை புறத்தே பழிகாணாத அத்தகைய உள்ளங்களில், பழியின் தடங்கள் பதிவதில்லை. துன்ப வேதனைகள் அதைத் தீண்டுவதும் கிடையாது. ஏனெனில் அகவுள்ளத்தின் ஒளி எல்லையிலேயே அவை இன்பமாக மாறுகின்றன.

அறிவற்றவனே புறத்தே தீமை காண்கிறானென்றால், அறிவுடையவனே அகத்தே தீமை காண முடிகிறது. தன் செயலில் அவன் தன் உள்ளத்தின் தீமை காண முடிகிறது. ஏனெனில் அவன் தீமை காணும் இடம் அது ஒன்றே! தீமை வேர்க்கொண்டு வளரும் -இடம் - இயற்கைக்கு முரண்பாடான பண்புகள் தங்கும் இடம் - அது ஒன்றே. அதை அகற்றுவதன் மூலம் புறத்தே தீமை காணாமலே அவன் தீமைகள் அகன்று விடுகின்றன. மரத்தைப் பற்றிய கவலையில்லாமலே, அது நச்சுமரமென்று தெரியாமலே, நச்சுவேரறிந்து அழித்து அவன் அதை இல்லாதாக்குகிறான்.

நீரளவே ஆகுமாம் நீராம்பல்!

மெய்யறிவடைந்தவனைத் தவிர உலகில் மற்ற எல்லாரும் தம்மிடம் தவறாது நன்மையே காண்கின்றார்கள். தாம் எது செய்தாலும், எது கூறினாலும், எது கருதினாலும் அதுவே சரியென்று கருதாதவர்களோ, அதற்கேற்ற விளக்கம் காண்பதில் வெற்றி எய்தாதவர்களோ இல்லை. அவன் நடத்தை எவ்வளவு தவறானது, அவ்வளவு அவசியமற்றது, நேர்மையற்றது என்று பிறர் கருதினாலும், அது தன்னைப் பற்றிய ஒருவன் தீர்ப்பை ஒரு சிறிதும் அசைப்பதில்லை. அது நன்று என்று மட்டுமல்ல, நேர்மையானது, அவசியமானது, இன்றியமையாதது என்ற அவன் உறுதி குலைவதில்லை. எந்தப் பண்பும் இந்த நிலையை மாற்றுவதில்லை.