216 || ||--
அப்பாத்துரையம் - 29
மெய்ப்பொருள் எதுவும் தோற்றுவதன்று. மாறுவதன்று, அழிவதன்று.பொய்ப்பொருளோ, புலப்படுவதன்றித் தோற்றுவ தில்லை. அது மாறுவது, அழிவது. நிழலின் போலித் தோற்றத்தில் ஒளி சிறிது மறைந்திருப்பது போல, துன்பத்தின் போலித் தோற்றத்தில் இன்பம் தற்காலிகமாகச் சிறிது மறைந்திருக்க மட்டுமே கூடும்.
போலித் தோற்றம் தரும் துயர் என்றும் தோற்றந் தந்து கொண்டே, புலப்பட்டுக்கொண்டே இருக்க முடியாது. இன்ப மாக மாறி இன்பத்தில் கரைந்து கலந்து ஒன்றுபட்டு இன்ப மாகியே தீரும்! மறைந்திருக்கும் இன்பமும் நெடிது மறைந்திருக்க முடியாது.மறைப்புக் கிழித்துத் தடை நீக்கி வந்தே தீரும்!
உன் ஊழைப் படைப்பவன் நீயே!
துன்பங்கள் தமக்கெனத் தங்கி நிலவும் தளம் உடையன வல்ல மெய்ம்மைத் தளம் சார்ந்தனவல்ல. கதிரவன் போல் தன்னியல்பாய் நிலவரமாக நிலவுவனவல்ல முகில்கள் போல உணர்ச்சி வேகங்களால் ஈர்த்தடிக்கப்பட்டு விரைந்து செல்பவை. அவை செல்லமாட்டா என்று அஞ்சற்க.
நீ பழியில் பிறந்தவன்,பழிசார்ந்தவன் என்று நம்பாதே.பழி உன் உயிரல்ல. உடல்கூட அல்ல. ஆடை அணிமணிகூட அல்ல. நீ இறுகப் போர்த்திக்கொள்ளும் முட்போர்வை, நீ விடாப் பிடியாய், உடும்புபோல் மடமையுடன் பற்றிக் கொண்டிருக்கும் பொறிவிலங்குகள். உன் பிடி விட்டால் அவை தாமே கழன் றழிபவை.
நீ அறிவுக்கண்ணை மூடிக்கொண்டிருக்கும்போது உன் அகவிழியின் முன் பேயாக ஆடுபவை அவை. அவையே நீ துயிலும் சமயம் பேய்க்கனவாக வந்து உன்னை அலைக்கழித்து ஆட்டிப்படைப்பவை. அவற்றின் மறைதிரையைக் கிழி, அவற்றைப் பிடித்த பிடியை விடு.
ய
மூடிய கண்ணைத் திற. துயிலொழித்து எழுந்து அறிவின் ஒளி காண். தூய்மையும் துயரற்ற மகிழ்வும் கொள்.
உன் வாழ்வை ஆக்குபவனும் நீயே, அதனை மறைக்கும் இருள் திரைகளைப் படைப்பவனும் நீயே. உன் ஊழ் முதல்வன் நீ