உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 229

பூசிய சுவர்கள். அழகிய படங்கள், பட்டுத்திரைகள். வெண்தோதகத்திமரம், தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்டுப் பொன் வெள்ளியாலும் மணிகளாலும் இழைக்கப்பட்ட இருக்கைகள், கட்டடங்கள்யாவும் அதில் நிறைந்திருக்கவேண்டும். மற்ற வகைகளில் அது நான் சான்ஃபிரான் சிஸ்கோவில் கண்ட வீடுபோன்றிருக்க வேண்டும்.”

தான் கேட்ட இத்தனையையுங் கீவ் தன் நண்பனிடமும் கூறினான்.“இறங்கினவுடன் அதன்படி நடக்குமா?” என்பது பற்றி இருவரும் ஓயாது பேசிப் பேசிப் பொழுது போக்கினார்.

ஊரில் இறங்கியவுடன் முதன் முதலில் அவர்கள் கேட்ட செய்தி கீவைத் துயரில் ஆழ்த்திற்று. அவன் நெருங்கிய உறவினர்கள் இருவர் இறந்துவிட்டனர் என்று அவனுக்குத் தெரியவந்தது. அவன் இது கேட்டு மிகவும் வருந்தினான். அவ்வருத்தத்தில் அவன் புட்டியையே மறந்து விட்டான். லோப்பாக்கா அதை நினைவுபடுத்தினான். தான் வீடு கட்டிப்பார்க்க எண்ணிய இடம் அவர்களுக்கு உரிய இடம் என்று, அப்போதுதான் கீவுக்கு நினைவுவந்தது. இதைக் கேட்டதே நண்பன் லோப்பாக்கா துள்ளிக் குதித்தான். அன்பனே! கொன்றது நீ யல்லவா? இப்போது வருத்தப்படுவானேன்? நீ கோரிய வீட்டுக்கான மனையிடம் அவர்கள் நிலத்திலிருக்கும் போது, அவர்கள் சாகாமல் நீ நிலத்தை அடைவதெப்படி?” என்றான்.

இதுவரை தன் பேரவாவினிடையே கீவ் இதுபற்றிச் சிந்திக்கவில்லை. இப்போது, அதே பேரவா மீண்டும் எழுந்து அவன் வருத்தத்தையும் போக்கிற்று. இதற்குள் வழக்கறிஞர் ஒருவர் நிலத்தின் கிடப்பு வரை படம் ஒன்றை அவனிடம் தருவித்து, அதில் வீடு கட்டுவதாயிருந்தால் அதற்குரிய அமைப்பாளரையும் அனுப்பித் தருவதாகத் தெரிவித்திருந்தார். மறுநாளே அவன் விருப்பம் அறியுமுன்பே அமைப்பாளர் வந்து திட்டத்தை அவனுக்குக் காட்டினார். அவன் வியப்படைந்தான். திட்டம் அவன் மனத்தில் எண்ணிய எண்ணங்கள் அத்தனையையும் படம் பிடித்திருந்தது. கட்டடம் முடிப்பதற்கான செலவையும் அமைப்பாளர் கணக்கிட்டு ஒரு பெருந்தொகையைக் கூறிவிட்டுச் சென்றார்.