232
அப்பாத்துரையம் - 46
நன்றாக அதன் இயல்புக்கு, மேற்படக்கூடக் காய்க்க வைக்க முடியும். அதுபோல, முயன்றால் கவிஞர், அறிஞர்களைத் தோற்றுவிக்கும் சூழ்நிலைகளை ஒரு சில தலைமுறைகளுக்குள் ஆக்கலாம். அதை ஆக்கும் பணியே உன் பணி.
நல்லகாலமாக, உன் பணிக்கு உன்னை முழுதும் புதிதாகப் படைத்து ஆக்க வேண்டும் என்பதில்லை. நீ பிறந்த வீட்டுச் சூழ்நிலை உன்னை அதனை அவாவு அளவுக்கும், கனவு காணும் அளவுக்கும் தகுதியாக்கியுள்ளது. இனி நீ முதலமைச்சனாக ஆக்கப்பட வேண்டியதில்லை. முதலச்சனாக வளர்க்கப்படவே அதாவது தகுதிபெற்று வளரவே வேண்டும். இது உன் முயற்சி, உன் விடா முயற்சியையே பொறுத்தது. அதை விரைந்து செய்.
உன் நாடு உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. பிற நாடுகள் கூட எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. ஆடையற்ற பல மனிதர், உணர்வற்ற மனிதர், வீடற்ற மனிதர், வாழ வகையற்ற மனிதர், தங்கள் தத்தளிப்பிடையே உன் பெயர் வருங்கால முதலமைச்சர் பெயர் கேட்க ஆலவுடையவராயுள்ளனர். ஆகவே ஒரு கணமும் வீண் போக்காதே. உன் வீட்டு வாழ்வை, ஏட்டு வாழ்வை, உன் நாட்டு வாழ்வை நன்கு பயன்படுத்தி விரைந்து கனவை நனவாக்க முனைவாயாக!!