உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




254

அப்பாத்துரையம் - 46

அதன் ஒவ்வொரு நொடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

காலம் பொன்னினும் பொலிவுடையது, செல்வத்திலும் செம்மையுடையது, சோம்பியிருப்பவர்களின் செல்வத்தையும் வாழ்வையும் சூறையாடுவது காலம். இருந்தவன் எழுந்திருக்குமுன் நடந்தவன் காதவழி' என்பதுபோல அது சுறுசுறுப்பாளனை நெடுந்தொலை முன்னேற்றவல்லது. மருந்தால் ஆறாதகாயங்களை ஆற்றுவிப்பது காலம். மறக்க முடியாத துன்பங்களை மறக்க வைப்பதும் காலமே. பயனில்லா வாழ்க்கையை மறதி எனும் பாலைவனத்தில் புதைப்பதும், பயனுடைய வாழ்வினைப் புகழெனும் பூஞ்சோலையில் ஒரு வாடா மலராக்கி, மணம் பெறச் செய்வதும் அதே காலம்தான். உன் வாழ்வில் நீ எதனுடனும் விளையாடலாம்; காலத்துடன் மட்டும் விளையாடாதே.

உலகில், நாட்டு வாழ்வில், சமூகத்தில் புகழ்தரும் பெரும் பதவிகள் யாவற்றினுக்கும் செல்லும் பாதைகள் அனைத்தும் இப்போது உன் காலடியிலிருந்தே புறப்பட்டுச் செல்கின்றன. பாதை தேர்ந்தெடுக்கும் நேரம் இது. உன் முழுக்கவனமும் அத்தேர்வில் செலுத்தப்பட வேண்டும். பாதை நல்ல பாதை என்பதற்காகவோ, அது சென்றடையும் இலக்கு உயர் இலக்கு என்பதற்காகவோ நீ எதனையும் தேர்ந்தெடுக்கக் கூடாது. அத்துறையில் வேறு யாரையும் விட நான் வெற்றிபெறக் கூடியவன், அது என் கனவு' என்ற காரணத்துக்காகவே நீ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் உன்னை வருங்காலத்தில் மதிப்பிடுவது உன் பாதையின் அல்லது இலக்கின் உயர்வு தாழ்வு குறித்தன்று; அதில் நீ அடையும் வெற்றி தோல்வி, அதன்மூலம் உலகுக்கு நீ தரும் நிறைவு குறைவு ஆகியவை குறித்தே என்பதை நினைவில் கொள்.

வாழ்க்கையின் வெற்றி குறிக்கோளுடன் வாழ்வதையும், குறிப்பிட்ட நோக்கத்துடன் வாழ்வதையும், அக்குறிக்கோள் அடிப்படையாகத் திட்டமிடுவதையும் பொறுத்தது. குறிக்கோளற்றவன் காற்றடிக்கும் திசையிலெல்லாம் திரிவான். இன்பக் கவர்ச்சியுள்ள இடமெல்லாம். எளிதாக முயற்சி செய்யக்கூடிய முயற்சிகளிலெல்லாம் மாறிமாறி ஈடுபட்டுத் தன்