சேக்சுபியர் கதைகள் - 1
65
உலகியல் அறியாத மிராந்தா அவனை நோக்கி, "ஐய! என்னே என் அறியாமை! என் மகிழ்ச்சியால் கண்ணீர் பெருகுகிறதே! எனக்குக் கள்ளம் ஒன்றும் தெரியாது; நான் மனம் விட்டுச் சொல்கிறேன்; நீ என்னை மணந்தால், நான் உன் மனைவி ஆவேன்," என்றாள்.
அதற்காகப் பெர்திநந்து நன்றி கூறுமுன்னே பிராஸ்பிரோ அவர்கள் முன் தோன்றினான்.
4. அரசன் அளித்த நன்கொடை
அவன் தன் மகளைப் பார்த்து, "குழந்தாய்! ஒன்றுக்கும் அஞ்சாதே. நீ சொன்னதெல்லாம் மறைந்திருந்து கேட்டேன். எல்லாம் எனக்கு உடன்பாடே. அப்பா, பெர்திநந்து! நான் உன்னைக் கடுமையாக நடத்தினேனா? அதற்கு ஈடாக என் மகளை உனக்குக் கொடுத்து மகிழ்விக்கிறேன். உனக்குத் தந்த துன்பம் எல்லாம் உன் காதலைச் சோதிப்பதற்காகவே. சோதனையில் நீ வெற்றி பெற்றாய். உன் உண்மையான காதலுக்குத் தகுந்த பரிசு கொடுக்கிறேன். அப்பரிசு என் மகளே; ஏற்றுக் கொள்வாயாக. அவளைப் புகழ்ந்து கூறச் சொற்கள் இல்லை. இவ்வாறு நான் பெருமை பாராட்டுவது பற்றிச் சிரிக்கவேண்டா. நான் போய்ச் செய்யவேண்டிய வேலை இருக்கிறது. நான் திரும்பி வரும்வரைக்கும் நீங்கள் இருவீரும் இங்கே பேசிக்கொண்டு இருங்கள்,” என்றான். இவ்வாறு தந்தை கட்டளையிடுவதைக் கேட்ட மிராந்தா மகிழ்ந்தாள்.
பிராஸ்பிரோ உடனே அப்புறம்போய், ஏரியலைக் கூப்பிட்டான்.அப்பொழுது ஏரியல் அவன் முன் வந்து நின்றான்; பிராஸ்பிரோவின் தம்பியையும் நேபல்ஸ் அரசனையும் பற்றித் தான் செய்தவற்றைச் சொல்ல ஆவலுற்று நின்றான். "புதுமையான காட்சிகளையும் ஒலிகளையும் உண்டாக்கி, அவர்கள் காணுமாறும் கேட்குமாறும் செய்தேன். அவற்றால் அவர்கள் அஞ்சி உணர்விழந்தார்கள். அங்கும் இங்கும் அலைந்து களைத்துப் பசித்து வருந்தியபோது அவர்கள் எதிரே திடீரென்று இன்சுவை உணவை உண்டாக்கி வைத்தேன். அவர்கள் உண்ணத் தொடங்கிய போது, தீராப்பசி கொண்ட அரக்கன் போலத் தோன்றி அவ் உணவை ஒழித்து விட்டேன்.