உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

சேக்சுபியர் கதைகள் - 2

137

ஸிம்பலினுடைய குடிகளுள் சிறந்த வீரனொருவன் அவ்வரசனது போரில் மாண்டான். அப்போது குழந்தை ஒன்றை அவன் விட்டுப் போனான். அதன் துணையற்ற நிலைக்கு இரங்கி ஸிம்பலின் அப்பிள்ளையை எடுத்து வளர்த்தான். தந்தை இறந்தபின் பிறந்த பிள்ளையாதலின் அவனுக்குப் பாஸ்துமஸ்4 (பிந்திப் பிறந்தவன்) என்று பெயரிட்டனர். இப்பாஸ்துமஸ் உருவில் வளருந்தோறும் அறிவிலும் குணத்திலும் வளர்ந்து வந்தான்.இமொஜெனும் பாஸ்துமஸும் இளமை முதற்கொண்டே விளையாட்டுத் தோழர்களாயிருந்தனர். அத் தோழமை முதிர்ந்து அவர்களிருவரும் நாளடைவில் அரசன் அரசியை எதிர்பாராமலே தம்முள் மறைவாக மணம் செய்துகொண்டனர்.

அரசியின் ஒற்றர் இளவரசியின் நடைமுறைகளை ஊன்றிக் கவனித்து வந்தனர். ஆதலின் விரைவில் இம்மறை மணச்செய்தி அரசிக்குத் தெரிந்துவிட்டது. தனது பகற் கனவின் மீது மண்சொரிந்த இமொஜெனிடம் அவளுக்கு மட்டற்ற சீற்றம் ஏற்பட்டது. அவள் அரசனுக்கும் இவ்வகையிற் சினம் மூட்டி பாஸ்துமஸை நாட்டை விட்டு வெளியே துரத்திவிட்டாள்.

ஒருவரை நேரே எதிர்த்துக் கெடுப்பதைவிட, அவரை நயமாக அடுத்துக் கெடுப்பதே எளிது என்று அரசிக்குத் தெரியும். எனவே, தான் இமொஜெனுக்கு நல்லவளாக நடந்துகொண்டால் நாளடைவில் அவள் மனத்தை விட்டு பாஸ்துமஸை அகற்றி அவள் தன் மகனையே ஏற்கும்படி செய்யலாம் என்று அரசி இன்னும் மனப்பால் குடித்துக்கொண்டு தான் இருந்தாள். இந்நோக்கங் கொண்டு அவள் பாஸ்துமஸ் போகுமுன் இமொஜெனுடன் அவன் பேச இடம் கொடுத்தாள்.

பாஸ்துமஸ் இமொஜெனிடமிருந்து பிரியா விடை பெற்றுக் கொள்ளும்போது அவள் அவனுக்குத் தனது வைரக் கணையாழி ஒன்றை நினைவுக்குறியாகக் கொடுத்தாள்.அவனும் அதுபோலவே அவள் கையில் தனது நினைவுக் குறியாகப் பொன்வளை யொன்றை அணிவித்தான்.

பாஸ்துமஸ் தன்னுடைய பிரிவு நாட்களை எண்ணிக் கொண்டே ரோம் நகரில் வாழ்ந்த வந்தான். இமொஜெனும் தன் உயிரற்ற வாழ்க்கையைத் தந்தை அரண்மனையில் வேண்டா வெறுப்பாகக் கழித்து வந்தாள்.