182) ||__
அப்பாத்துரையம் - 37
துயிலோ அவன் கண்களிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டது. இனி அவை சென்றடையும் துயில் ஒழியாத்துயில் ஒன்றேயாம். அணிவகுப்பையும் கொடி வகுப்பையும் கண்டு துள்ளிக் குதிக்கும் அவன் உள்ளம், போர்முரசு கேட்டுப் போருக்கு முனைந்து துடிக்கும் அவன் உள்ளம், குருதியாறுகளிடையேயும் கொன்று வீழ்த்தப் பட்டுருளும் யானைகளிடையேயும் கலங்காத உறுதி யுடைய அவனது உள்ளம், இன்று இப்பொய்ம்மைப் புனைவின் முன் அறிவற்று உரையற்றுச் செயலற்றுத் தத்தளித்தது.
அவன் மனம் பித்துக்கொண்டவர் மனம்போல் ஊசலாடியது. ஒருசமயம் டெஸ்டிமோனா உண்மையில் தூயளே என்று எண்ணுவான்; ஒரு சமயம் அவள் கபடியே என்பான்; இன்னொரு சமயம் அவள் எப்படியிருந்தால் என்ன! நான் அவளை அணுகாதிருந்தேனில்லையே என்பான். வேட்டை நாய்களாலும் வேடர்களின் சுழல் வெடிகளாலும் காயமடைந்து விழப்போகும் காட்டு முள்ளம்பன்றி இறுதியாகத் தன் முழுவன்மையையுங் காட்டிச் சீறி விழுவதுபோல் அவன் ஒரு தடவை தன் சினமனைத்தையும் சேர்த்து அயாகோவின் மீதே பாய்ந்து அவன் கழுத்தைப் பற்றி இழுத்து, 'எனக்குக் கண்கூடான சான்று வேண்டும்; கண்கூடான சான்று வேண்டும்' என்று கூறி அவனை உலுக்கினான். அதனைச் சரியான தறுவாயாகக் கொண்டு அயாகோ தன்னைப் பொய்யன் என்று சொன்னதற்காகச் சினங் கொண்டவன் போன்று, ‘நானாக என் நன்மைக்காகவா இவ்வளவு உமக்குச் சொன்னது? யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன! இதோ, உமக்குக் கண்கூடான சான்றா வேண்டும்; சரி தருகிறேன்! உம் மனைவி கையில் முன் இலந்தைப் பழம் போன்ற புள்ளிகள் உடைய கைக்குட்டை இருந்ததன்றோ? அஃது இப்போது காசியோவிடம் எப்படி வந்தது என்று கேளும்’ என்றான். அத்தகைய ஒரு கைக்குட்டை உண்மையில் தானே அவளுக்கு அளித்தது என்று ஓதெல்லோ ஒத்துக்கொண்டான்.
ஒதெல்லோ: அப்போது அது காசியோவிடம் இருக்கிற தென்று உமக்கு எப்படித் தெரியும்.
அயாகோ: அவன் அதைக்கொண்டு முகந் துடைப்பதை இன்று காலையில் கண்டேன்.