உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/நடித்தது நாடகமா?

விக்கிமூலம் இலிருந்து

தியாக சிகரம் - அத்தியாயம் 38

[தொகு]

நடித்தது நாடகமா?

வாள் தவறித் தரையில் விழுந்தபோது எழுந்த ஒலியுடன் நந்தினியின் சோகம் ததும்பிய மெல்லிய சிரிப்பின் ஒலியும் கலந்தது.

அவள் பரபரப்புடன், "ஐயா! தெய்வத்தின் சித்தம் வேறு விதமாயிருக்கிறது. வாள் இங்கேயே கிடக்கட்டும். தாங்கள் உடனே போய் மறைந்து கொள்ளுங்கள்!" என்றாள்.

அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வந்தியத்தேவன் குனிந்து வாளை எடுக்கப் போனான். அதன் கூரிய நுனிப் பகுதியைப் பிடித்துத் தூக்க முயன்றான். அதே சமயத்தில் அந்த வாளின் பிடியை ஒரு காலினால் மிதித்துக் கொண்டாள் நந்தினி.

"வேண்டாம்! இளவரசர் காதில் வாள் விழுந்த சத்தம் கேட்டிருக்கும். இங்கே வாள் இல்லாவிட்டால் அவர் மனத்தில் சந்தேகம் உண்டாகும். ஏற்கெனவே, தங்கள் மீது அவருக்குச் சந்தேகம். போய் விடுங்கள்! முன்னொரு தடவை மாயமாய் இங்கிருந்து மறைந்ததுபோல் இந்தத் தடவையும் மறைந்து போய் விடுங்கள்!" என்றாள்.

வந்தியத்தேவன் வாளின் முனையைப் பிடித்து எடுக்க முயன்றதில் அவன் கையில் சிறு காயம் உண்டாயிற்று. அவன் வாளை விட்டுவிட்டு நிமிர்ந்தான். அவன் உள்ளங் கையில் இலேசாக இரத்தம் கசிந்ததை நந்தினி பார்த்தாள்.

"நான் உமக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன். என் கையால் என் உடன்பிறந்தானைக் கொல்ல மாட்டேன். நீர் தப்பித்துக் கொள்ளும். உம்மை இங்கே அவர் கண்டுவிட்டால்...!"

"போய்விடுங்கள்! உடனே போய்விடுங்கள்!" என்று மணிமேகலையும் சேர்ந்து கெஞ்சினாள். காலடிச் சத்தம் மேலும் நெருங்கிக் கேட்டது.

வந்தியத்தேவன் வேண்டா வெறுப்பாக யாழ்க்கருவிகளின் களஞ்சியத்தை நோக்கி விரைந்து சென்றான். களஞ்சியத்தின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று மறைந்தான். காலடிச் சத்தம் வெகு சமீபத்தில், வாசற்படிக்கருகில், கேட்டது.

வந்தியத்தேவன் மறைந்த இடத்தை வியப்புடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மணிமேகலையைப் பார்த்து, "தங்காய்! நீயும் மறைந்து கொள்! கட்டிலின் திரைகளுக்குப் பின்னால் மறைந்து கொள்! நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்குத் தெரியாமல் இங்கிருந்து போய்விடு!" என்றாள் நந்தினி.

மணிமேகலை கட்டிலின் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்த மறுகணத்தில் ஆதித்த கரிகாலனும் கந்தமாறனும் உள்ளே வந்தார்கள்.

கரிகாலன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே நந்தினியை நெருங்கினான். கட்டிலின் திரைச்சீலை அசைந்ததை அவன் கவனித்தான். ஆனால், கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.

நந்தினிக்கு அருகில் வந்ததும் தரையிலே கிடந்து ஒளிவிட்டுக் கொண்டிருந்த வாளைப் பார்த்தான். பின்னர், நந்தினியின் முகத்தை உற்றுப் பார்த்தான். நந்தினியின் நெஞ்சை ஊடுருவிய அந்தப் பார்வையின் தீட்சண்யத்தைப் பொறுக்க மாட்டாமல் வாளை எடுக்கும் பாவனையாக அவள் குனிந்தாள். நந்தினியின் நோக்கத்தை அறிந்து அவளை முந்திக்கொண்டு கரிகாலன் வாளைக் கையில் எடுத்துக் கொண்டான். அதன் அடிப்பிடியிலிருந்து கூரிய நுனி வரையில் கூர்ந்து பார்த்தான். நுனியில் புதிய இரத்தக் கறை இருப்பதையும் பார்த்துக் கொண்டான்.

பின்னர் நந்தினியை நோக்கி, "தேவி! நாங்கள் வரும்போது கேட்ட சத்தம் இந்த வாளின் சத்தந்தான் போலிருக்கிறது. தங்கள் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்திருக்கிறது! எங்களை வரவேற்பதற்குக் கையில் வாளேந்தி ஆயத்தமானது போலத் தோன்றுகிறது" என்றான்.

"வீரம் மிக்க இளம் புலிகளையும் தீரத்திற் சிறந்த வாலிப சிங்கங்களையும் வரவேற்பதற்குரிய முறை அதுவேயல்லவா?" என்றாள் நந்தினி.

"மூர்க்கப் புலிகளுக்கும், சிங்கங்களுக்கும் கூரிய நகங்களும் பற்களும் வேண்டும். ஆனால் துள்ளித் திரியும் புள்ளிமானுக்கு அவை தேவையில்லையென்றுதானே கடவுள் தரவில்லை?" என்றான் ஆதித்த கரிகாலன்.

"மானும் தன் கொம்புகளை உபயோகிக்க வேண்டிய தேவை நேரிடலாம் அல்லவா? தனக்குக் கொம்புகளை அளித்த கடவுளிடம் கலைமான் நன்றி செலுத்தும் சந்தர்ப்பமும் நேரிடலாம் அல்லவா? கருணை கூர்ந்து அந்த வாளை என்னிடம் கொடுத்து விடுங்கள்!" என்று மன்றாடினாள் நந்தினி.

"இல்லை; இல்லை! தங்கள் கைகளுக்கு இது ஏற்றதன்று. மலர் கொய்யவும், மாலை புனையவும் பிரம்மதேவன் படைத்த தளிர்க்கரங்களினால் வாளை எப்படிப் பிடிக்க முடியும்?" என்றான் கரிகாலன்.

"கோப்பெருமகனே! இந்த ஏழையின் கைகள் ஆர்வத்துடன் மலர் கொய்து ஆசையுடன் மாலை புனைந்த காலம் உண்டு. அந்த மாலையைச் சூடுவதற்குரியவர் எப்போது வருவார் என்று காத்திருந்து காத்திருந்து ஏமாந்த காலமும் உண்டு. அவ்விதம் பகற்கனவு கண்டு வந்த காலம் போய் எத்தனையோ யுகங்கள் ஆகிவிட்டன. இப்போது இந்தத் திக்கற்ற அநாதையின் கரங்கள் வாளைத் துணை கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. ஐயா! அந்தத் துணையையும் தாங்கள் என்னிடமிருந்து பறித்துக் கொள்ளாதீர்கள்!" என்றாள் நந்தினி.

"தேவி! இது என்ன பேச்சு? தங்களையா திக்கற்ற அநாதையென்று சொல்லிக்கொள்ளுகிறீர்கள்? தங்கள் காலால் இட்ட பணியைத் தலையால் வகித்து நிறைவேற்றுவதற்கு எத்தனை வாலிப வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? இது தங்களுக்குத் தெரியாதா?" என்றான் கரிகாலன்.

"தப்பித் தவறி என் கால் அத்தகைய தூர்த்தர்களுடைய தலையிலே பட்டுவிட்டால் அந்தக் காலை வெட்டிக்கொள்ள வேண்டியதாயிருக்கும், ஐயா! அதற்கேனும் வாள் அவசியம் அல்லவா?"

"ஐயோ! இது என்ன கர்ண கடூரமான பேச்சு? பாதச் சிலம்பு கலீர் கலீர் என்று ஒலிக்க அரண்மனை மாடக்கூடங்களில் அன்னமும் நாணும் நன்னடை பயில வேண்டிய கால்களை வெட்டுவதா? இந்த வார்த்தைகள் பெரிய பழுவேட்டரையரின் காதில் விழுந்தால் அவர் உள்ளம் என்ன பாடுபடும்?"

"ஐயா! அவரைப்பற்றி கவலைப்படுவோர் யார்? அந்தக் கிழச்சிங்கம் ஒரு கர்ஜனை செய்தால் அதைக் கேட்டு நடுங்கி ஓடிப் பதுங்கிய வாலிபப் புலிகள் இப்போது எவ்வளவு தைரியமாக வெளிவந்து நடமாடுகின்றன? அவர் கொள்ளிடத்து வெள்ளத்தில் போய் விட்டார் என்ற செய்தியைக் கேட்ட பின்னர் அல்லவா வாலிபப் புலிகளுக்கு இவ்வளவு துணிச்சல் வந்துவிட்டது? அந்தப் புலிகள் என்னிடம் ரொம்பவும் நெருங்கி விடாமல் பார்த்துக்கொள்வதற்காக இந்த ஆயுதத்தை வைத்திருந்தேன். குப்பையில் கிடந்த என்னை உலகமறிய அழைத்து வந்து அரண்மனை வாழ்வும் அரசபோகமும் அளித்த மகாபுருஷரின் கௌரவத்தைக் காப்பதற்காக இந்த வாளின் உதவியைக் கோரினேன். தாங்கள் சற்று முன்னால் சொன்னதுபோல், மலர் கொய்யவேண்டிய கரங்களினால் வாள் சுழற்றப் பயின்றேன்..."

"தேவி! உண்மையில் அதற்காகத்தானா? இந்த வாளைத் தாங்கள் பெட்டியில் வைத்துப் பூஜை செய்து வந்ததும், இதைத் தங்கள் மலரினும் மென்மையான கன்னங்களோடு சேர்த்துக் கொஞ்சிக் குலாவி வந்ததும், பெரிய பழுவேட்டரையரின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகத்தானா? அல்லது தங்களைப் பார்த்து அசட்டு சிரிப்புச் சிரித்துக் கொண்டு நெருங்கும் நிர்மூடர்களை நெருங்க வொட்டாமல் தடுப்பதற்குத்தானா? வேறு நோக்கம் ஒன்றுமில்லையா?"

"வேறு என்ன விதமான நோக்கம் இருக்க முடியும், ஐயா?"

"ஏன்? வேறு எத்தனையோ நோக்கம் இருக்க முடியும்! பழி வாங்கும் நோக்கம் இருக்கலாம். தாங்கள் அடிபணிந்து கைகூப்பிக் கேட்டுக் கொண்ட வேண்டுகோளைப் புறக்கணித்துத் தங்கள் உள்ளத்தில் அழியாத புண்ணை உண்டாக்கிய பாதகனைக் கொன்று சபதம் முடிக்கும் நோக்கம் இருக்கலாம்!"

நந்தினி தலையைக் குனிந்துகொண்டு ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள். பின்னர், இளவரசனை நிமிர்ந்து நோக்கி, "கோமகனே! அம்மாதிரி எண்ணமும் ஒரு சமயம் எனக்கு இருந்தது உண்மைதான். அதற்காகவே இந்த வீரவாளைப் பூஜை செய்து வந்தேன். எப்போது அந்த வேளை வரும் என்று காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் வேளை வந்தபோது என் கரங்களில் வலிவு இல்லாமல் போய்விட்டது; நெஞ்சில் உறுதியில்லாமலும் போய்விட்டது. இனி இந்த வாளை என் கற்பையும் என் கணவரின் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே உபயோகப்படுத்துவேன். கருணை செய்து அதை இப்படிக் கொடுங்கள்!" என்றாள்.

"தேவி அந்தப் பொறுப்பை நான் வகிக்கக் கூடாதா? தங்களுக்கோ, தங்கள் கணவருக்கோ தீங்கு எண்ணிய பாதகனைத் தண்டிக்கும் கடமையை நான் நிறைவேற்றக் கூடாதா" என்றான் ஆதித்த கரிகாலன்.

"தங்களுக்கு இது இயலாத காரியம். இந்தத் திக்கற்ற அநாதை ஸ்திரீயின் நிமித்தம் தங்கள் ஆரூயிர் நண்பர்களைத் தண்டிக்க முடியுமா?"

"ஏன் முடியாது? நிச்சயமாய் முடியும்! நந்தினி! நீ அன்றைக்கு ஏரித் தீவில் வந்தியத்தேவனைப் பற்றிக் கூறியதையெல்லாம் அப்போது நான் பூரணமாக நம்பவில்லை. பின்னால், கந்தமாறன் சொல்லியதிலிருந்து அவ்வளவும் உண்மைதான் என்று அறிந்தேன். அந்தப் பாதகனை நீ மன்னித்தாலும் நான் மன்னிக்கச் சித்தமாயில்லை. அவன் எங்கே என்று சொல்!...சொல்லமாட்டாயா!... வேண்டாம்! என் கண்கள் குருடாகி விடவில்லை... இதோ பார்!" என்று ஆத்திரத்துடன் ஆதித்த கரிகாலன் கர்ஜனை செய்து கொண்டே கட்டிலை மூடியிருந்த திரைச் சீலையை நோக்கி அடி எடுத்து வைத்தான்.

நந்தினி அவன் காலைத் தொட்டு எழுந்து மண்டியிட்டுக் கரங்களைக் குவித்துக்கொண்டு "கோமகனே! வேண்டாம்! வேண்டாம்!" என்றாள்.

"நந்தினி! உன் கருணையை வேறு காரியங்களுக்கு வைத்துக் கொள்! என் நண்பனைப்போல் நடித்துச் சதி செய்யும் சண்டாளனிடம் கருணை காட்ட வேண்டாம்!" என்று சொல்லிய வண்ணம் ஆதித்த கரிகாலன் நந்தினியை மீறிக் கொண்டு மேலே நடந்தான்!

நந்தினி பிரமித்துத் திகைத்தவள்போல் நாலாபுறமும், பார்த்து விழித்தாள். இத்தனை நேரமும் வாசற்படிக்கு அருகில் சிலையைப்போல் நின்றுகொண்டிருந்த கந்தமாறனைப் பார்த்து, "ஐயோ! அவரைத் தடுங்கள்!" என்று அலறினாள். கந்தமாறனாகிய சிலைக்கு உயிர் வந்தது. ஆனால் அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. இலேசாக ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு மீண்டும் சிலையாக மாறிவிட்டான்.

கரிகாலன் ஒரு கையினால் வாளை ஓங்கிய வண்ணம் கட்டில் திரைச் சீலையின் அருகில் சென்று, இன்னொரு கையினால் திரையை விலக்கினான்.

உள்ளே, கையில் சிறிய கூரிய கத்தியுடன் தோன்றிய மணிமேகலை, 'கிறீச்' என்று சத்தமிட்டாள்.

ஆதித்த கரிகாலன் ஓங்கிய வாளுடன் சிறிது நேரம் ஸ்தம்பித்து நின்றுவிட்டுப் பின்னர் அந்த வாளினால் கட்டில் திரைச் சீலையைக் கிழித்தெறிந்தான்.

"ஆகா! இந்தப் பெண் புலியா இங்கே நிற்கிறது? அப்பப்பா! இதன் நகங்கள் மிகக் கூர்மையாயிற்றே?" என்று கூறி 'ஹா ஹா ஹா' வென்று சிரித்தான்.

பின்னர் கந்தமாறனைப் பார்த்து, "நண்பா! உன் தங்கையை அழைத்துப் போய் அவள் தாயாரிடம் ஒப்புவித்து விட்டு வா! இவள் வயிற்றில் எத்தனை புலிக் குட்டிகள் பிறக்குமோ தெரியாது! இவள் இந்த வீர பாண்டியனுடைய வாளுக்கு இத்தனை நேரம் இரையாகிச் செத்திருந்தால் சோழ நாடு எத்தனை வீரப் புதல்வர் புதல்விகளை இழக்கும்படி நேர்ந்திருக்கும்?" என்றான்.

சற்று முன் உண்மையிலேயே பெண் புலிபோல் சீறிய மணிமேகலை ஆதித்த கரிகாலனின் வார்த்தைகளைக் கேட்டு நாணம் அடைந்தாள். கந்தமாறன் அவளை அணுகி அழைப்பதற்குள் அவளாகவே அந்த அறையிலிருந்து செல்ல ஆயத்தமாகி விட்டாள். அண்ணனும் தங்கையும் அங்கிருந்து போனதும், கரிகாலன் நந்தினியைப் பார்த்து, "தேவி ஒரு நாடகம் நடித்து அவர்கள் இருவரையும் போகச் செய்துவிட்டேன். இனிமேலாவது நம் உள்ளத்தைத் திறந்து உண்மையைப் பேசலாம் அல்லவா?" என்றான்.

நந்தினி உண்மையான வியப்புடன் கரிகாலனை நோக்கி, "ஐயா! தாங்கள் நடித்தது நாடகமா? அப்படியானால், அது ஆச்சரியமான நடிப்புத்தான்! நானும் அதை உண்மையென்றே நம்பி ஏமாந்து போனேன்!" என்றாள்.

"நந்தினி! நடிப்பிலே உனக்கு இணை இந்த உலகிலேயே இல்லை என்பது என் எண்ணம். நீயே ஏமாந்திருந்தால், என் நடிப்புத் திறமையை அவசியம் மெச்சிக்கொள்ள வேண்டியது தான்! ஆனாலும், நான் வாளை ஓங்கிக்கொண்டு மணிமேகலை மறைந்திருந்த இடத்தை நோக்கிப் போனபோது, நீ என்னைத் தடுக்கவில்லையே? அது ஏன்? என் மீது சுமந்துள்ள பல குற்றங்களுடன் ஸ்திரீ ஹத்திதோஷமும் சேரட்டும் என்று எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாயா?" என்று கேட்டான் கரிகாலன்.

"சிவ சிவா! இந்த உலகத்திலேயே இன்றைக்கு அந்தப் பெண் ஒருத்தியிடந்தான் நான் உண்மையான அன்பு கொண்டிருக்கிறேன். அவளும் சாகட்டும் என்று சும்மாப் பார்த்துக் கொண்டிருப்பேனா? திரையை நீக்கியதும் தாங்களே தெரிந்து கொள்வீர்கள் என்று எண்ணினேன்..."

கரிகாலன் சிரித்தான்.

"இந்தச் சிரிப்பின் பொருள் விளங்கவில்லை!" என்றாள் நந்தினி.

"மணிமேகலையை நான் கொல்லுவதற்கு நீ சொன்ன காரணமே போதும்!" என்றான் கரிகாலன்.

"இன்னும் விளங்கவில்லை!"

"நீ யாரிடமாவது அன்பு கொண்டாய் என்றால் அவனோ, அவளோ என்னுடைய பரம விரோதியாகி விடுவார்கள். இது உனக்குத் தெரியாதா?"

"தெரியும்; அத்தகைய துரதிர்ஷ்டசாலி நான் என்று தெரியும். ஆனாலும் தங்கள் குரோதம் கள்ளங்கபடமறியாத இந்த இளம் பெண் வரையில் செல்லும் என்று நான் கருதவில்லை!"

"அல்லது உன் நோக்கம் வேறு விதமாகவும் இருக்கலாம். நான் மணிமேகலையைக் கொன்றுவிட்டால், அதற்காகக் கந்தமாறன் என்னைப் பழி வாங்குவான் என்று எண்ணியிருக்கலாம். அல்லது நான் அவளைக் கொல்லுவதற்குள் அவள் கையிலிருந்த சிறிய கத்தியை எறிந்து என்னைக் கொன்றுவிடுவாள் என்றும் கருதியிருக்கலாம்..."

"ஐயையோ! இது என்ன? எப்படிப்பட்ட பயங்கரமான கற்பனைகள்!"

"கற்பனைகளா? என்னுடைய பயங்கரமான கற்பனைகளைக் காட்டிலும் பயங்கரமான நோக்கத்தை நீ உன் மனத்தில் வைத்திருக்கிறாய். உண்மையைச் சொல்! என் உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும் தீயை மேலும் வளர்க்க வேண்டாம்! என்னை எதற்காக இந்தக் கடம்பூர் அரண்மனைக்கு வரச் சொன்னாய்? எதற்காகப் பழுவேட்டரையரைத் தஞ்சைக்குப் போகும்படி செய்தாய்? சோழ சாம்ராஜ்யத்தைப் பங்கிட்டுக் கொடுத்துச் சமரசம் செய்து வைப்பதற்காகவோ, எனக்கும் மணிமேகலைக்கும் திருமணம் செய்வித்துக் கண்டு களிப்பதற்காகவோ இத்தனை முயற்சியும் செய்ததாகச் சொல்லாதே! அந்தக் கதைகளையெல்லாம் நான் நம்பமாட்டேன். நம்பியிருந்தால், இங்கு வந்திருக்கவும் மாட்டேன்..."

"பின் எதற்காக இங்கு வந்தீர்கள், கோமகனே! என்ன நம்பிக்கையுடன் இந்த இடத்துக்கு வந்தீர்கள்?"

"நம்பிக்கையா? எனக்கு ஒருவித நம்பிக்கையும் கிடையாது. என் உள்ளத்தில் நிரம்பியிருப்பதெல்லாம் நிராசையும் அவநம்பிக்கையுந்தான். இந்த நாட்டை விட்டும் இந்த உலகத்தை விட்டுமே, நான் போய்விட விரும்புகிறேன். அதற்கு முன்னால் உன்னை ஒரு தடவை பார்த்து விடை பெற்றுப் போகலாம் என்று தான் வந்தேன். ஒரு சமயம் என்னிடம் நீ ஒரு வரம் கோரினாய். காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொண்டாய். கையெடுத்துக் கும்பிட்டு இரந்தாய். என் ஆத்திரத்தினாலும் மூர்க்கத்தனத்தினாலும் நீ கோரியதை நான் கொடுக்கவில்லை. பிறகு ஒவ்வொரு கணமும் அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டானால் அதைச் செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். நந்தினி! சொல்! எந்த விதத்திலாவது அதற்கு நான் பரிகாரம் செய்யமுடியும் என்றால், சொல்!"

இவ்வாறு இரக்கம் ததும்பும் குரலில் கூறிய கரிகாலனைப் பார்த்து நந்தினி, "கோமகனே! அதற்குப் பரிகாரம் ஒன்றும் கிடையாது. இறந்தவர்கள் இறந்தவர்கள்தான்! இறந்தவர்களைப் பிழைக்கச் செய்யும் சக்தி இந்த உலகில் யார்க்கும் கிடையாது. கதைகளிலே காவியங்களிலே சொல்கிறார்கள். நாம் பார்த்ததில்லை" என்றாள்.

"இறந்தவர்களைப் பிழைக்கச் செய்ய முடியாது. அது உண்மைதான்! ஆனால் உயிருக்கு உயிர் கொடுத்துப் பரிகாரம் தேடலாம் அல்லவா?... இதோபார்! என்னிடம் இனியும் மறைக்க வேண்டாம். இங்கு நீ எதற்காக வந்தாய், என்னை எதற்காக வரச் சொன்னாய், என்னத்திற்காகப் பழுவேட்டரையரைத் தஞ்சைக்கு அனுப்பினாய் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது என்று எண்ணாதே! நீயும் நானும் சின்னஞ்சிறுவர்களாயிருந்த நாளிலிருந்து உன் மனத்தில் எழும் எண்ணங்களை அறியும் சக்தி எனக்கு உண்டு. எனக்கும் ஆத்திரம் ஊட்டி நீசத்தனமான செயல் புரியும்படி செய்வதற்காகவே வீர பாண்டியனுடைய உயிருக்காக நீ மன்றாடினாய். என் பக்கத்திலிருந்து என்னை வதைத்துக் கொண்டிருப்பதற்காகவே பெரிய பழுவேட்டரையரை நீ மணந்து தஞ்சைக்கு வந்தாய். நான் காஞ்சியில் நிம்மதியுடன் இருப்பது உனக்குப் பொறுக்கவில்லை. அதனாலேயே இந்தக் கடம்பூர் அரண்மனைக்கு வரச் செய்தாய். வீர பாண்டியனுடைய வாளினால் என்னைக் கொன்று பழி முடிக்கும் நோக்கத்துடனேயே நீ இவ்விடத்துக்கு வந்திருக்கிறாய். அந்த உன்னுடைய நோக்கத்தை தடையின்றி நிறைவேற்றிக்கொள்! அதற்காகவே கந்தமாறனையும் அவன் தங்கையையும் அப்புறப்படுத்தினேன். இதோ! இந்த வாளைப் பெற்றுக் கொள்!" என்று கூறிக் கரிகாலன் வாளை நீட்டினான்.

நந்தினி வாளை வாங்கிக் கொண்டாள். வாளைப் பிடித்த அவளுடைய கைகள் நடுங்கின. பின்னர் அவள் உடம்பெல்லாம் நடுங்கியது. கண்களில் கண்ணீர் ததும்பியது. இதயத்தைப் பிளக்கும் சோகக் குரலில் விம்மலும் தேம்பலும் கலந்து வந்தன.

"நந்தினி! இது என்ன அதைரியம்? இந்த மனத் தளர்ச்சி ஏன்? நீ பட்டர் குடும்பத்தில் வளர்ந்தவள்; ஆனால் வீர மறக்குலத்தில் பிறந்தவள் அல்லவா? ஆட்டு மந்தையில் வளர்ந்தபடியால் சிங்கக்குட்டி தன் இயல்பை இழந்துவிடுமா? இதோ பார்! உன் அந்தரங்கத்தை நான் அறிவேன். உன் பழியை முடிப்பதற்குக் கந்தமாறனையோ, பார்த்திபேந்திரனையோ, வந்தியத்தேவனையோ நீ ஏவிவிட வேண்டாம். அவர்கள் மீது எனக்குக் கோபத்தை உண்டாக்கவும் வேண்டாம். உன் சபதத்தை நீயே நிறைவேற்றிக் கொள்! உன் பழியை உன் கையினாலேயே முடித்துக்கொள்! யாராவது இங்கே மறுபடியும் வந்து தொலைந்து விடலாம். கந்தமாறன் தன் தங்கையை அன்னையிடம் சேர்ப்பித்து விட்டுத் திரும்பி வருவான். பார்த்திபேந்திரனும் சம்புவரையரும் திரும்பி வரும் நேரமும் ஆகிவிட்டது. அவர்களுடனே என் பாட்டன் மலையமானும் வந்தாலும் வரலாம். பழுவேட்டரையர் கொள்ளிடத்து வெள்ளத்தில் போயிருப்பார் என்று நான் நம்பவில்லை. அவரும் திடீரென்று வந்தாலும் வரக்கூடும். உன் பழியை முடித்துச் சபதத்தை நிறைவேற்றிக்கொள்ள இதைக் காட்டிலும் நல்ல சந்தர்ப்பம் வரப் போவதில்லை. என்னைக் கொல்லுவதினால் எனக்கு நீ எவ்விதத் தீங்கும் செய்தவளாக மாட்டாய்! பேருதவி செய்தவளாவாய்!" என்றான்.

நந்தினி பொங்கிவந்த விம்மலை அடக்கிக்கொண்டு, "கோமகனே! தங்களிடம் நான் எதையும் மறைக்கவும் இல்லை. மறைக்க விரும்பவும் இல்லை. நான் இங்கு வந்ததின் நோக்கம் பற்றித் தாங்கள் கூறியதெல்லாம் உண்மைதான். தங்களை இங்கு வரச் சொன்னதின் நோக்கமும் அதுதான். ஆனால் சந்தர்ப்பம் நேர்ந்திருக்கும் சமயத்தில் என் கைகளில் வலிவு இல்லை; என் நெஞ்சிலும் தைரியம் இல்லை. தாங்கள் என்னைத் தேடிவரும் காலடிச் சத்தம் கேட்டவுடனேயே என் கையிலிருந்த வாள் நழுவிக் கீழே விழுந்துவிட்டது. இதோ பாருங்கள்! வாளைப் பிடித்திருக்கும் என் கரங்கள் நடுங்குவதை!" என்றாள்.

"ஆம், ஆம்! அதைப் பார்த்துக்கொண்டு தானிருக்கிறேன். ஆனால் அதன் காரணந்தான் எனக்குத் தெரியவில்லை. உன் நெஞ்சம் ஒரு சமயம் எவ்வளவு உறுதியடைந்திருந்தது என்பதை நான் அறிவேன். தேவேந்திரனுக்காக வஜ்ராயுதத்தைச் செய்து கொடுத்த பிறகு அதில் மீதமான உலோகத்தைக் கொண்டு பிரம்மதேவன் உன் இருதயத்தைப் படைத்திருக்க வேண்டும் என்று நான் எண்ணுவதுண்டு. அப்படிப்பட்ட உன் நெஞ்சு இவ்விதம் இளகிவிட்டதன் காரணம் என்ன!..."

"தங்கள் தோழர் வந்தியத்தேவர் சொன்ன செய்திதான் காரணம்."

"ஆகா! நீயும் நானும் உடன் பிறந்தவர்கள் என்று அவன் கண்டுபிடித்துக் கொண்டு வந்த செய்தியைத்தானே சொல்லுகிறாய்? அன்றைக்கு ஏரிக் கரைத் தீவில் நாம் பேசிக் கொண்டிருந்த போது நீ அதை நம்பவில்லையென்று சொன்னாயே? நம்மை மறுபடியும் பிரித்து வைப்பதற்காக யாரோ செய்திருக்கும் சூழ்ச்சி என்று கூறினாயே?"

"நான் அதை நம்பக்கூடாது என்றுதான் பார்த்தேன். அதற்காக எவ்வளவோ பிரயத்தனம் செய்தேன். ஆனால் இன்று அவர் கூறிய வேறொரு செய்தி என் நெஞ்சுறுதியை அடியோடு குலைத்துவிட்டது."

"ஆகா! அது என்ன? இன்னும் ஏதாவது புதிய கற்பனையா? புதியதாக வேறு என்ன கூறினான்?"

"என்னைப் பெற்ற அன்னையைப்பற்றிச் சொன்னார். அவரை இலங்கைத் தீவில் பார்த்ததாகக் கூறினார். அதை நான் நம்ப மறுப்பதற்குக் காரணம் எதுவும் இல்லை. கோமகனே! முன்னொரு தடவை நான் ஒரு வரம் கேட்டேன். அதைத் தாங்கள் கொடுக்கவில்லை. அதற்காக இன்று வரை வருத்தப்படுவதாகச் சொன்னீர்கள். இன்று மறுபடியும் ஒரு வரம் கேட்கிறேன். இதையாவது கொடுப்பீர்களா?"

"வரம் இன்னது என்று குறிப்பிட்டுக் கேட்டால், கொடுக்க முடியும், முடியாது என்று சொல்கிறேன்."

"கோமகனே! வீரபாண்டியனுடைய மரணத்துக்குப் பழி வாங்குவதாக நான் சபதம் செய்தது உண்மைதான். மீன் சின்னம் பொறித்த இந்தப் பாண்டிய குலத்து வாளினால் ஒன்று தங்களை கொல்லுவேன், அல்லது என்னை நானே கொன்று கொண்டு மாய்வேன் என்று சபதம் எடுத்துக் கொண்டேன். தங்களைக் கொல்வதற்கு என் நெஞ்சிலும் துணிவு இல்லை; என் கைகளிலும் வலிவு இல்லை. என்னை நானே கொன்றுகொண்டு, தங்கள் முன்னாலேயே மடியலாம் என்று எண்ணினால், அதற்குப் போதிய பலம் என் கையில் இல்லை. அரைகுறையாக முயன்று, என் உயிர் போகாவிட்டால் என்ன செய்வது என்று பயமாயிருக்கிறது. ஐயா! என் சபதத்தை நிறைவேற்றுவதற்கு உதவி செய்யுங்கள்! இந்த வாளைத் தாங்களே வாங்கிக்கொண்டு, தங்கள் கையினால் என்னை வெட்டிக் கொன்றுவிடுங்கள்! அப்போது என் சபதம் முடிந்துவிடும். இந்த ஜன்மத்தில் மட்டுமின்றி இனிவரும் பிறவிகளிலும் தங்களிடம் நன்றியுள்ளவளாவேன்!" இவ்விதம் கூறிக்கொண்டே நந்தினி நீட்டிய வாளை, மறுபடியும் ஆதித்த கரிகாலன் வாங்கிக் கொண்டான்.

"ஹாஹாஹா" என்று அந்த அரண்மனை முழுதும் எதிரொலி செய்யும்படி பயங்கரமாகச் சிரித்தான்.