126) ||
அப்பாத்துரையம் - 43
அண்டி அவர்களுக்கு அடிமை ஆகாமல், ஏழைகளுக்கு உழைக்க முடியும். அவன் தன் அறிவை ஏழைகளிடையே பரப்புவதும், அவர்களிடைய அன்பு பெருக்கி அவர்களை ஒற்றுமைப் படுத்துவதும், அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவதும் அவர்களுக்காகச் செய்யும் கடமை மட்டுமல்ல அவன் வாழும் வகையும், அதுவே. ஏனெனில், ஆதிக்கமேலோர் ஆதரவின்றி வாழவும், தேவைப்பட்டால், அவர்கள் எதிர்ப்பைச் சமாளிக்கவும் இஃது இன்றியமையாததாகும்.
தமிழகம் தாழ்ந்த நாடுகளிலும் பலவகையில் தாழ்ந்துள்ளது. தமிழினத்தைச் சேர்ந்த அயல்நாட்டவர் தாம் தமிழினத்தவர் என்று கூற விரும்பவில்லை. தவிர, தமிழ்நாட்டிலும் தமிழின நாடுகளிலும், பிற நாட்டுப் பிற இனத்தவரும் தமிழரல்லாதவரும் ஆதிக்கம் பெற்று அவ்வழிப் பிறமொழி, பிற பண்புகளை ஆதரிக்குந்தோறும், ஒருவர் உயர்ந்தும், தனித் தமிழ்ப் பண்பினை ஆதரிக்குந்தோறும் அவர் தாழ்ந்தும் விளங்குகின்றனர். பிறமொழியறிஞருக்கும், பிற மொழிப் பண்பு பேணுபவர்க்குமே உயர்வும் மதிப்பும் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் மற்றெல்லா மொழியுரிமைகளையும் பாதுகாக்கவும், பேணவும், சலுகைகள் காட்டி வளர்க்கவும் வகை துறைகளும் சங்கங்களும் அரசியல் செல்வாக்குகளும் உண்டு. தமிழ் ஒன்றுக்குத்தான் கிடையாது; தமிழர் கிளர்ச்சியால் தமிழுக்கு உணர்வு கிடைக்கும்போதுகூட, தமிழிலக்கியத்துக்குச் சிறப்பு ஏற்படும்போதுகூட, தமிழ்ப்பண்பு கடைப்பட்ட சலுகையே பெற முடிகிறது.
இந் நிலைக்கு மொழி, சமயம், பண்பாடு, அரசியல் ஆகிய எல்லாத் துறைகளிலும் நீண்ட நாளாகப் படிப்படியாகப் பெற்றுவந்த அடிமைத்தனமும், அதனால் ஊறிவிட்ட அடிமை மனப்பான்மையும் தன்னம்பிக்கையின்மையுமே காரணங்கள் ஆகும். தவிர, போர் வீரமும் போட்டியும் தற்பெருமையும் பண்பாகக் கொண்ட அவர்க்கு இன்று அதனைத் தம்மினத் தவரன்றி வேறு எவரிடமும் காட்ட வழியில்லாததால்,போட்டியும் பொறாமையும் பூசலும் எல்லாம் தம் மக்களினத்துக்குட்பட்டே செயலாற்றுகிறது. இதனால், தமிழர் ஒற்றுமையின்மைக்கும் தன்மதிப்பின்மைக்கும் ஓர் எடுத்துக்காட்டாகியுள்ளனர்.பிறரால் கருவேப்பிலையாய்ப் பயன்படுத்தப்பட்டும், தமக்குள் நெல்லிக்காய் மூட்டையிலுள்ள காய்களைப் போன்ற கட்டற்ற