உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

151

கொண்டே அவை நம்முன் நடமாடுகின்றன. நாம் காணும் பொருள்களின் தன்மையும் இவ்வாறானவையே. நிகழ்ச்சி களிலும் பொருள்களிலும் தத்தம் இயல்பிலே அழகும் இல்லை, அருவருப்பும் இல்லை. ஏனெனில் ஒருவன் அழகைக் காணு மிடத்தில் இன்னொருவன் அருவருப்பையும், ஒருவன் அருவருப்பைக் காணுமிடத்தில் இன்னொருவன் அழகையும் காணலாம். ஒருவர் காணும் அழகை, அவர் உள்ளப் பண்பில் தோயாமல் இன்னொருவர் எளிதில் காணமுடியாது.

மட்டுமீறிய இயல்நூல் ஆர்வமுடைய ஓர் அறிஞர் நாட்டுப் புறத்தில் ஒரு குட்டையினருகே நின்று கொண்டிருந்தார். குட்டையில் அவர் என்ன அற்புதத்தைக் காண முடியும் என்று வியப்புடன் ஒரு குடியானவன் அவரை நோக்கிக் கொண்டு நின்றான். அறிஞர் தம் விலையேறிய சட்டைப் பையிலிருந்து வகைவகையான கண்ணாடிப்புட்டிகளை எடுத்து அதன் அழுக்கு நீரை அதில் அடைப்பதைக் கண்டபோது அவனால் ஏளன நகை நகைக்காமல் இருக்க முடியவில்லை. அவர் பித்துக்கொள்ளியா யிருப்பாரோ என்ற ஐயம் அந்த நகைப்பினூடே நிழலாடிற்று. ஆனால் தம் வாழ்க்கைத் தொழிலிலேயே அக்கறையா யிருந்த அறிஞர் அவனை நோக்கி “அப்பனே, இந்த ஒவ்வொரு புட்டியிலும் ஒன்பது நூறாயிரம் அற்புத அண்ட கோளங்கள் இருக்கின்றன. நம்மிடம்தான் அவற்றைக் கண்டறியும் ஆற்றல் போதவில்லை. கருவிகளின் உதவியாலும், ஆராய்ச்சி அறிவின் துணையாலும் நாம் அவற்றைக் கண்டு மகிழ முடியும்” என்றார். இவ்அறிவுரை கேட்ட பின் அந்தப் பட்டிக்காட்டுக் குடியானவன், அவர் பித்துக் கொள்ளியல்ல, முழுப் பைத்தியமேதான் என்று துணிந்து விட்டான். “அந்தோ, புழுக்களையும் தலைப் பிரட்டைகளையும் பூச்சிகளையும் கருவிகளில்லாமல் பார்க்க முடியாது திண்டாடுகிறதே இந்தப் பைத்தியம்? எல்லாரும் பார்க்கிறதைப் பார்க்க முடிகிறதில்லை இதற்கு. அதே சமயம் எல்லாரும் பார்க்க விரும்பாததைப் பார்க்க அங்கலாய்க்கிறது என்று கூறி அவன் வருத்தத்துடன் சென்றானாம்.

""

இயற்கையின் அற்புத அழகை இயல் நூலறிவு குட்டையில்கூடக் காணமுடியும்; கல்லாத உள்ளம் கலைக் கண்காட்சிகளில்கூட எவ்வகை அற்புதத்தையும் காணாது.