(172) || __ __
அப்பாத்துரையம் - 43
பற்றுடையவர் வாழ்வு மலைப்பையும் ஏமாற்றத்தையும் உண்டு பண்ணுகிறது. நேர் மாறாக, உண்மைத் தெய்வப்பற்றுடையவன் வாழ்வில் அமைதி தவழ்கிறது. ஏனெனில், அவன் தெய்வப்பற்றுப் புற உள்ளமறியாத அக உள்ளப்பற்று அது அவன் வாழ்க்கையை உள்ளூர நின்று மேம்படுத்துகிறது.
வெற்றி, பயன், ஆற்றல் இவை வாழ்வில் முன்னேறிச் செல்பவனின் மூன்று படிகள். வெற்றி நல்வாழ்வைத் தொடங்கி வைக்கிறது.பயன் அதை வளர்க்கிறது. ஆற்றல் அதில் எதிர்பாராது அல்லது எதிர்பாராச் சமயத்தில் வந்துறும் இடர்களையும் இடையூறுகளையும் எதிர்த்து மேலும் வெற்றி பெருக்குகிறது. அகப்பண்புகளை இயக்குபவன் தொடக்கத்தில் அடையும் தோல்விகளே அவன் வெற்றிக்குரிய படிகளாகின்றன. வெற்றியும் அதுபோல மேலும் பெரு வெற்றிகளுக்குப் படிகளாகவே அமையவேண்டும். வெற்றியின் விளைவாக ஏற்படும் இப்பெருக்கமே அதன் பயனாகும். இத்தகைய பயன்களின் தொகுத்த சேமிப்பே ஆற்றல். இடையூறுகள் - அஃதாவது இன்னும் வெல்லப்படாத புறச்சூழல் கூறுகளின் விளைவுகள் ஏற்பட்டபோது, ஓடுநீரைத் தடுக்கும் தடையை நீர்த்தேக்கம் கவிந்து தாண்டுவதுபோல, அல்லது தாக்கித் தகர்ப்பது போல, இவ்வாற்றல் செயலாற்றி அச்சூழலை மாற்றியமைக்கிறது அல்லது ஒழிக்கிறது.
நீ வாணிகம் போன்ற ஒரு தொழிலில் ஈடுபட்டிருக் கிறாய் என்று வைத்துக்கொள்வோம். தொழில் வளமாகத்தான் நடக்கின்றது. ஆனால் அணிமையில் பேரிடர் வரக்கூடும் என்று உனக்குத் தோன்றுகிறது. நீ அதுபற்றி அச்சமோ, ஐயமோ, கவலையோ கொண்டால், அந்த இடரைத் தடுப்பதற்கு மாறாக, அதை விரைவில் வருவித்துக் கொள்பவனாகவே இருப்பாய். உன் அச்சம், ஐயம், கவலை ஆகியவற்றை நீ எச்சரிக்கையாக,விழிப்பாக மாற்று. இப்புதிய வடிவில் அவை உனக்குத் துணை தரும். உன் முந்திய வெற்றி தோல்விகளின் படிப்பினைகளைப் பயன்படுத்து அவை உனக்கு அரணாகும். "இடர்காத்து வெல்வேன், இடர் வரினும் தளரேன்” என்ற நம்பிக்கையும் உறுதியும் கொள். அது வந்த இடரையும் தடுத்து, வரப் போகும் இடர்களையும் முளையிலேயே களையும்.