திருநிறை ஆற்றல்
193
வாய்ப்பு, புதியநிலை கண்டு கிட்டிய உடனே, உன் அகஉள்ளம் அதனைப் பற்றி முன்னேறி விடும். அதே சமயம் கடமையாற்றிய புறமனம் சோர்வின்றி உன் புதிய வாழ்விலும் முனைந்து செய லாற்றும். கடமையிடத்துக் கண்ட வெற்றியினும் பன்மடங்கு வெற்றி உன் புதிய வாழ்விலும் உனக்குக் கிட்டும். கடமை அதற்கான பயிற்சியை ஏற்கெனவே உனக்குத் தந்து விட்டது.
சின்னஞ்சிறு நுண்ணிய வேலைகள் எளியன; பாரிய வேலைகள் அருமையும் கடுமையும் உடையன என்று நீ கருதலாம். ஆனால் சின்னஞ்சிறு வேலைகளை நிறைவேற்றுவதில் நீ பெறும் பயிற்சிதான் பயிற்சிதான் பெருங்காரியங்களில் உனக்கு உறுதுணையாயிருந்து வெற்றிதரும். சிறு காரியங்களிலும், உன் உள்ளவா ஆர்வங்களை இயக்காத காரியங்களிலும், நீ காட்டும் கடமை உழைப்புதான், பெருங்காரியங்களிலும், நீ உள்ளார்வங் கொண்ட காரியங்களிலும் உனக்கு முழு நிறை வெற்றியைத் தரமுடியும். தவிர சிறு செயல்களில் தொடர்ந்து உழைப்பதன் மூலமே உன் இயற்கை தன் ஆற்றலெல்லைக்கு மேற்பட்ட செயல்களுக்குத் தேவையான நீடித்த இடைவிடா உழைப்பு, பல தோல்விகளால் சலியாத அயரா ஊக்கம், பல படியாகச் சிறுசிறு வெற்றிகளைக் கடந்து பெருவெற்றி நோக்கி உழைப்பதற்கு வேண்டிய பொறுமை, விடாமுயற்சி ஆகியவற்றை நீ பெறத் தக்கவன் ஆவாய். இயல்பான ஆற்றல் எல்லை கடந்த பேராற்றலை நீ பெறுவதற்குரிய மறைதிறவு இதுவே.
இயற்கையின் ஆற்றல்வேறு, இயல்பான ஆற்றல் வேறு. இயல்பான ஆற்றல் கடந்து செயலாற்றும் திறம் இயற்கையில் அடங்கிக் கிடக்கிறது. இவை புயல், சூறாவளி, இடி, மின்னல் ஆகவும் செயலாற்றும். வளந்தரும் மழையாகவும், வளர்ச்சி தரும் உயிர்ப் பெருக்கமாகவும் செயலாற்றலாம். நீ இயற்கையின் ஒரு சிறு நுண்பகுதியே யாயினும், இயற்கையை விட ஆற்றலில் குறைந்தவனல்ல. ஏனெனில் இயற்கையின் எல்லையற்ற, உள்ளடங்கிய ஆற்றலின் வளர்ச்சிப்பகுதியாகிய பேருயிரின் ஒருபகுதி நீ. ஆகவே உன் உள்ளடங்கிய ஆற்றலும் எல்லையற்றதே. உன் இயல்பு அஃதாவது சூழ்நிலைகளைதான் உன் உடல் உருவில் உன் வாழ்நாளில் இடம், காலம் ஆகிய எல்லைகளால் குறுக்கப்பட்டிருக்கின்றது. அவ்வியல்பு கடந்து,