4
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்; அன்பிலார் முன்னேற்றத்தை வெறுக்கிறார்கள். தம் இனத்தினர், கொள்கையினர், நிறத்தினர், கட்சியினர் சமயத்தினர் ஆகியோரை விரும்புகின்றனர். இவ் விருப்பை மற்றவர்களிடம் குறைக்கின்றனர்; வெறுக்கத் தொடங்கு கின்றனர்; வெறுப்பிலேயே நிலைக்கவும் செய்கின்றனர்.
பெறுதற்கரிதாம் மானிடப் பிறவி பெற்றதன் பயன் என்ன? விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இல்லாத ஆறாம்அறிவாம் பகுத்தறிவைப் பெற்றதன் பயன் என்ன? ஆன்றோர்களும், சான்றோர்களும் அருளிய நூல்களைக் கற்றதன் பயன் என்ன? தனித்தனி பெற்ற பட்டறிவின் பயன் என்ன? எந்த ஒன்றாலும் பயனில்லை என்றால் மாந்தர் வாழ்வுக்கு என உள்ள சிறப்புத் தான் என்ன?
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்று சொல்லுகிறோம். இப்பழமொழியைக் காலமெல்லாம் பாராட்டு கிறோம்; ஐந்தில் வளைய வேண்டும் என்பதை வற்புறுத்த எழுந்த பழமொழியே அன்றி, அதற்குப் பின் வளையவே வளையாது என்பதை உறுதிகூற எழுந்த பழமொழி அன்று. ஐந்தில்வராத பண்பாடு, அறிவு, திறமை ஐம்பதிலோ அதற்கு முன்னோ பின்னோ வரட்டுமே! வந்தால் நன்மை தானே. ஐந்திலே ஏற்படும் விருப்பு வெறுப்பு நிலைமைகள் ஐம்பதிலுமா அழுத்தமாக நிற்க வேண்டும்?
விருப்பு வெறுப்பு எப்படி ஏற்படுகிறது? நம் முன்னோர் செல்லும் வழி; நம் அன்பர்கள் போகும் வழி; நமது மாற்றாரும் பகைவரும் நடக்கும் வழி; அவர்களைப் பற்றிப் பிடித்துப் கொண்டு செல்லும் நம் வழி ஆக எல்லாமும் பின்னிப் பிணைந்து நிற்கின்றன. ஒன்றைப் பார்த்து ஒன்று செய்யப்படுகின்றது. பிறகு ஒன்று போல நடக்காதா?
ஒருவன் பண்பைத் தெரிய வேண்டுமானால் அவன் பழகும் நண்பர்களின் பண்பைக் கொண்டே கண்டு விடலாம் என்பர்; நான் சொல்வேன்:- ஒருவனது பண்பை அவன் நண்பனைக் கொண்டு மட்டுந் தான் காணமுடியும் என்பது இல்லை; அவன் படிக்கும் நூலைக்கொண்டு காணலாம்; அவன் உலாவச்சென்று வரும் இடத்தைக் கொண்டு காணலாம்; அவன் பார்க்கும் படங்களைக் கொண்டு காணலாம்; அவன் மாட்டி வைத் திருக்கும் படங்களைக் கொண்டு காணலாம்; உண்ணும் உணவு, உடுக்கும் உடை இவற்றைக் கொண்டும் காணலாம்; இன்னும் எவ்வெவற்றையோ கொண்டும் அறியலாம்.