128
இளங்குமரனார் தமிழ்வளம் – 9
ஆண்மையுள் எல்லாம் ஆண்மை! அவ்வாண்மையைத் தவம் என்பது தகும்! தம்மை அறைந்த கையைத் தழுவிக் கொள்வதும் அணைத்துக் கொள்வதும் அனைவராலும் செய்யக்கூடிய நடைமுறைச் செயலா? தம்மைத் திட்டியவரை “அந்தோ! என்னைத் திட்டிய குற்றத்தால் இவன் துன்புறுவானே” என்று இரக்கம் செலுத்துவது அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் எளிய தன்மையா? தம் வீடு எரிந்து கருகிச் சாம்பலாகும்போது 'என்ன எழிலுடன் தீ விளையாடுகின்றது' என்று அனுபவித்தல் அனைவருக்கும் இயல்வதா? தம் குழந்தை இறந்த வேளையில் 'இறைவன் படைத்த எழில் மலரை அவனே விரும்பிப் பறித்துக் கொண்டான்' என்று அமைவது எல்லோருக்கும் முடிந்ததா? எல்லோருக்கும் முடியாதவற்றை— அரியவற்றை-எளிதில் செய்வோரே தவத்தோர். இத்தவத்தோர் புறக் கோலம் கொண்டிருந்தால் என்ன? கொள்ளாவிட்டால் தான் என்ன?
இனி, மற்றை உயிர்களுக்கு எத்துணைத் துன்பமும் செய்யாமல் ஒருவர் வாழமுடியுமா? ஏன் முடியாது? தன் துயரைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் எப்பொழுது ஒருவனுக்கு ஏற்பட்டுவிட்டதோ அப்பொழுதே பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாத இயல்பு அவனுக்கு ஏற்பட்டு விட்டது என்பது உண்மை. மற்றை உயிர்களுக்குத் துன்பம் ஏன் செய்கின்றான்? தன்னலத்தால் செய்கின்றான்; தன்னலமே அற்றுவிட்டால் துன்பம் ஏது? துடிப்பு ஏது?
புத்தர் காடு மலைகளில் அலைந்தார்; பசி, நோய், வெயில், மழை இவற்றைத் தாங்கினார். தமக்கு ஏற்பட்ட கொடிய துன்பங்கள் எவ்வளவு உண்டோ அவ்வளவையும் புன்முறுவலுடன் ஏற்றார். இவற்றால் புத்தருக்கு ஏற்பட்ட பெருமை ஓரளவுதான். ஆனால் பேரளவாயது எதனால்? தாம் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாது இருந்ததுடன், பிறரையும் பிற பிற உயிர்களுக்குத் துன்பம் செய்ய விடாமல் காத்தார்; உயிர்களுக்குத் தம் வாழ்நாள் எல்லாம் இன்பஞ் செய்து வாழ்ந்தார். வில்லால் அடியுண்டு சாகக்கிடந்த அன்னத்தைக் காப்பாற்றியது அவர் தம் அருள் நெஞ்சம். அறங்கூறும் அவையம் அளவும் சென்று வெற்றி கொண்டது அவர் தம் அருள் துணிவு. பேரரசன் பிம்பிசாரனையும் வாதாடி உயிர்ப் பலியை ஒழிக்கும் அளவுக்கும் துணிந்தது அவர் தம் பெருங் கருணை! சாதாரண கௌதமரை-அருளாளர் புத்தராக்கியது எது? அவர் கொண்ட தவ ஒழுக்கமே! அத்தவ ஒழுக்கம் யாது? “உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.