29. காவற் கடன்
மனிதன் கடமைகள் பலப்பல; அவற்றுள் காவற் கடமையோ தலைதூக்கி நிற்கும் ஒன்று. பழங்காலம் ஆகட்டும், தற்காலம் ஆகட்டும், வருங்காலம் ஆகட்டும் காவற் கடமை ஆட்சி புரியாத மாந்தர் இல்லை எனலாம்.
வீட்டுக் காவலை மனிதன் பெரிதும் போற்றுகிறான். இல்லையேல் கதவும், பூட்டும், பெட்டியும், நிலவறையும், புரையும் இத்துணையளவுக்கு மிகுந்து காணமுடியுமா? பெட்டி பூட்டுத் தொழிற்சாலைகளும், நீர், நிலம், காடு, சுவர் முதலான அரண்களும் மல்கியுள. இத்தனைக்கும் மேலாகத் தரணி வாழும் மன்னுயிர் அனைத்தும் தன்னுயிராகப் பேணுதற்கு முடியாட்சிக் காலத்தில் காவலர்கள் இருந்தனர்; தளபதிகள் இருந்தனர். குடியாட்சிக் காலத்தில் காவல் அமைச்சரும், காவல்துறையும் கடனாற்றுகின்றன.
நாட்டையும் வீட்டையும் காத்தால் போதுமா? அவரவர் காத்தலே சிறந்த காவல் என்பதை
கூட்டை அவரவரை
வற்புறுத்தாத பெரியோர்கள் இலர்!
தற்காத்தல் வேண்டும்; சொற்காத்தல் வேண்டும்; நிறை காக்கும் காப்பே காப்பு; யாகாவாராயினும் நாகாக்க; காக்க பொருளா அடக்கத்தை - இப்படி எத்துணை எத்துணையோ காவல் வழிகளைக் காட்டியுள்ளனர் ஆன்றோர்.
வீடு, நாடு, உள்ளம் என்னும் இம் முத்திறக் காவல்களுள் அரிதானது யாது என்பது சிந்தனைக் குரியது. நாட்டுக் காவல் நன்கு அமையுமாயின் வீட்டுக் காவலைப்பற்றிக் கவலைப்பட வேண்டுவது இல்லை. வீட்டுக்காவல் சிறப்புற அமையின் உள்ளக் காவலுக்குத் துணையாக இருக்கும். என்றாலும், மற்றையக் காவல்களினும் உள்ளக்காவலே அரிது எனல் வெளிப்படை.