உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

93

கற்றச்சரின் தவறு. மேட்டுப்பட்டி பிராமிக் கல்வெட்டிலும் இந்தத் தவறு காணப்படுகிறது. அங்கும் ஆதன் என்னும் சொல் அதன் என்றும் ஆந்தை என்னுஞ் சொல் அந்தை என்றும் எழுதப்பட்டுள்ளன. விக்கிரம மங்கலம், அழகர் மலையிலும் இவ்வாறே ஆதன், ஆந்தை என்பவை அதன், அந்தை என்று எழுதப்பட்டுள்ளன. ஆதன், ஆந்தை என்பதே சரியாகும். இந்தக் கல்வெட்டிலும் அதன் என்றிருப்பதை ஆதன் என்றே படிக்க வேண்டும்.

4. வொளியன்: வொளியன் என்றும் வளியன் என்றும் இதனைப் படித்துள்ளனர். ஒளியன் என்பதை ஒளியர் என்னும் இனத்தாரோடு ஒப்பிடுகின்றனர். வளியன் என்றும் இன்னொரு மொழித் தொடரைக் கூறுகின்றனர். இரண்டு மொழித் தொடரும் தவறு என்று தோன்றுகிறது. இதன் சரியான வாசகம் வெளியன் என்பது. பிராமி எழுத்துத் தலைமேல் கோடு இட்டால் வொ ஆகும். அக் கோட்டையே டப்பக்கத்தில் மட்டும் இட்டால் வெ ஆகிறது. அதை வெ என்றே கொள்கிறோம். கண்ணால் பார்த்து எழுதியபடியால் இதில் தவறு இருக்கலாம். வெளியன் என்பதே சரியான சொல். ஏனென்றால், சங்க காலத்தில் வெளியன் என்னும் பெயருள்ளவர் இருந்தனர். வெளிமான், வெளியன் வேண்மான், வெளியன் தித்தன், வீரை வெளியன் என்னும் பெயர்களைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். சங்க காலத்தைச் சேர்ந்த ந்தக் கல்வெட்டிலும் வெளியன் என்னும் பெயர் காணப்படுவது பொருத்தமானதே.

5. மூஸகை. இச்சொல் தமிழ்ச்சொல் அன்று என்றும், பிராகிருத மொழிச்சொல் என்றும் இதன் சரியான பொருள் விளங்கவில்லை என்றும் கூறினோம். இந்தப் பிராகிருத மொழிச் சொல்லைப் பௌத்த பிக்குகளிடமிருந்து பெற்றிருக்கக்கூடும். இச் சொல் இங்கு, இந்த மலைக்குகையைக் குறிக்கிறது போலும்.

கொடுவன்: கொடுத்தவன் என்பதன் தவறான வாசகம். இவன் செழியனின் (பாண்டியனுடைய) கற்றச்சன் என்று தோன்றுகிறான்.

நெல்வேலியில் இருந்த செழியன் ஆதன் வெளியன் என்னும் பெயர் பெற்ற கற்றச்சன் இந்த ‘முஸகை’யைச் செய்து கொடுத்தான் என்பது இந்தக் கல்வெட்டின் கருத்தாகும்.