உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள்*

1. தொல்காப்பியர் காலம்

தொல்காப்பியம் இடைச்சங்க காலத்து நூல் என்று செவி வழிச் செய்தி கூறுகிறது. தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் பாண்டிய மன்னரால் பாண்டி நாட்டில் அமைக்கப் பட்டிருந் தன என்றும் அச்சங்கங்களில் இடைச்சங்க காலத்தின் இறுதியில் தொல் காப்பியம் தோன்றியது என்றும், இடைச்சங்க காலத்தின் இறுதியில் தோன்றிய தொல்காப்பியம் கடைச்சங்க காலத்திலும் இலக்கணமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது. இறையனார் அகப்பொருளின் முதல் சூத்திரத்தின் உரைப்பாயிரத்தில் இந்த முச்சங்கங்களின் செய்தி கூறப் படுகிறது. இச் செய்தியில் சங்கங்கள் இருந்த காலம் மிகமிக நீண்ட காலமாகக் கூறப்படுவதனால், இந்தச் செய்திகளைச் சிலர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். சங்கங்கள் நீண்டகாலம் இருந்ததாகக் கூறப் படுவதனாலே, அதன் காரணமாகச் சங்கங்கள் இருந்தனவா என்பதையே சிலர் ஐயுறுகிறார்கள்; கற்பனைக் கதை என்று கருதுகிறார்கள். இதுபற்றி ஆராய்வோம்.

இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் முச்சங்கங்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறது:

தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார். அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனுமென இத்தொடக்கத்தார் ஐஞ்ஞாற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முது நாரையும், முதுகுருகும், களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப.

  • மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய “சங்ககால வரலாற்றில் சில செய்திகள்' எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் (1-5)